யூடியூபர் சாட்டை துரைமுருகன்  யூடியூபில் முன்னாள் முதல்வர் கருணாநிதி, முதல்வர் ஸ்டாலின் குறித்து கடுமையாக விமர்சனம் செய்தும் அவதூறான கருத்துக்களை பேசியும் வீடியோ வெளியிட்டார். இதையடுத்து துரைமுருகன் கைது செய்யப்பட்டு திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். இந்த வழக்கில் தனக்கு ஜாமின் வழங்க வேண்டும் என உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனு செய்திருந்தார். விசாரணை செய்த நீதிமன்றம் இனிமேல் இதுபோன்ற அவதூறுகளை பரப்ப மாட்டேன் என உறுதிமொழி பத்திரம் பெற்றுக்கொண்டு நிபந்தனை ஜாமீனில் விடுதலை செய்தது.

 

இந்நிலையில் சாட்டை துரைமுருகன் நீதிமன்றத்தில் அளித்த உறுதி மொழி உத்தரவாதத்தை மீறி  தமிழக முதல்வர் குறித்து அவதூறாக பேசியுள்ளார். இதன்பேரில் மீண்டும் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. எனவே இவருக்கு வழங்கப்பட்ட ஜாமீனை ரத்து செய்ய வேண்டும் என அரசு தரப்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது.  இந்த வழக்கை ஏற்கனவே விசாரித்த போது யூடியுப் சம்பந்தமான விபரங்களை சேகரித்து நீதிமன்றத்திற்கு உதவுவதற்காக வழக்கறிஞர் ராமகிருஷ்ணன் நியமிக்கப்பட்டார்.

 



 

இந்த நிலையில் இன்று வழக்கு விசாரித்த நீதிபதி புகழேந்தி, "இந்தியாவில் பல லட்சம் பேருக்கு யூடியூப் வேலை வழங்கி உள்ளதாக செய்தி வெளியாகி உள்ளது. யூடியூப் மூலம் பல நல்ல விஷயங்கள் இருந்தாலும் அதனை பலர் தவறாக உபயோகப்படுத்தி வருகின்றனர். யூடியூபை தவறாக பயன்படுத்துவதை தடுப்பதற்கு வழிமுறைகள் தேவை. இந்த வழக்கில் நீதிமன்றம் உதவுவதற்காக நியமனம் செய்த வழக்கறிஞர் ராமகிருஷ்ணன் யூடியூப் குறித்து விபரங்களைப் பதில் மனுவாக தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கு விசாரணையை மார்ச் 17-ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டார்.

 



அழகர்கோயில் மலை உச்சிக்கு பக்தர்களை அனுமதிக்க கோரிய வழக்கு - வனத்துறை அலுவலர் நடவடிக்கை எடுக்க உத்தரவு 


தேனி மாவட்டம், ஆண்டிபட்டியைச் சேர்ந்த சுசிகுமார் உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில்  மனுவினைத் தாக்கல் செய்திருந்தார். அதில், "மதுரை அழகர்கோவில் மலை  உச்சியில் ஸ்ரீ ராமதேவர் சித்தரின் ஜீவசமாதி உள்ளது. இந்த ராமதேவர் சித்தரின் ஜீவசமாதிக்கு செல்ல அழகர்கோயில் பழமுதிர்சோலை இல் அமைந்துள்ள நோபரா கங்கை தாண்டி மலை மேல் 2.5 கிலோ மீட்டர் செல்ல வேண்டும். இந்த சித்தரின் ஜீவ சமாதியை பக்தர்கள், பொது மக்கள், அருகிலுள்ள கிராம மக்கள் வழிபாடு செய்து வந்தனர். 

 

குறிப்பாக அமாவாசை, பௌர்ணமி மற்றும் பூரம் நட்சத்திரம் போன்ற நாளில் பல பக்தர்கள் ஸ்ரீ ராமதேவர் சித்தரின் ஜீவ சமாதிக்கு யாத்திரையாக சென்று வழிபாடு செய்வது வழக்கம். கொரோனா தொற்று கட்டுப்பாடுகள் நீக்கப்பட்ட பிறகு ராக்காயி அம்மன் கோவிலில் அருகே பலர் கடைகள் அமைத்து சிகரெட் போன்ற பொருட்கள் விற்க தொடங்கியுள்ளனர். மேலும் ஸ்ரீ ராமதேவர் சித்தரின் ஜீவ சமாதிக்கு செல்லும் பக்தர்களை தடுத்து  மிரட்டி வருகின்றனர். இவர்கள் இப்பகுதியை சேர்ந்த மக்கள் என்பதால் ஸ்ரீ ராமதேவர் சித்தரின் ஜீவ சமாதிக்கு செல்ல பத்துக்கும் மேற்பட்ட வழிகள் வைத்துள்ளனர்.

 

இதனால் ஸ்ரீ ராமதேவர் சித்தரின் ஜீவ சமாதிக்கு செல்லும் பக்தர்களிடம் பணம் பெற்று கூட்டி செல்கின்றனர். இது குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு மனு அளித்தும் தற்போது வரை எந்த ஒரு நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை. எனவே, ஸ்ரீ ராமதேவர் சித்தரின் ஜீவ சமாதிக்கு செல்ல அனுமதி அளிக்க வேண்டும் குறிப்பாக அமாவாசை, பெளர்ணமி மற்றும் பூரம் நட்சத்திரம் போன்ற நாட்களில் பக்தர்களுக்கு அனுமதி அளிக்க உரிய உத்தரவு பிறப்பிக்க வேண்டும்." என கூறியிருந்தார். இந்த மனுவை விசாரித்த நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன், "ஸ்ரீ ராமதேவர் சித்தரின் ஜீவ சமாதி காட்டுப் பகுதியில் அமைந்திருப்பதால் மனுதாரர் கோரிக்கை குறித்து மதுரை மாவட்ட வன அலுவலர் பரிசீலனை செய்து 8 வாரத்திற்குள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கூறி வழக்கை முடித்து வைத்தார்.