தமிழ்நாடு அரசு 12 மணி நேர வேலை சட்டதை திரும்பப் பெறாவிட்டால், நாளை போராட்டம் நடைபெறும் என அமைச்சர்கள் உடனான பேச்சுவார்த்தைக்குப் பிறகு தொழிற்சங்க நிர்வாகிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.


அமைச்சர்கள் உடன் பேச்சுவார்த்தை:


தொழிலாளர்களின் வேலை நேரத்தை 12 மணி நேரமாக உயர்த்தும் மசோதா, கூட்டணி மற்றும் எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்பையும் மீறி அண்மையில் தமிழக சட்டப்பேரவையில் திமுக அரசால் நிறைவேற்றப்பட்டது. இதற்கு தொழிற்சங்கங்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பில் இருந்தும் கடும் எதிர்ப்புகளும், கண்டனங்களும் குவிந்து வருகின்றன. அதைதொடர்ந்து தமிழக அமைச்சர்கள் ஏ.வ. வேலு மற்றும் கணேசன் உள்ளிட்டோர் தலைமை செயலகத்தில், தொழிற்சங்க பிரதிநிதிகளுடன் ஆலோசனை நடத்தினர்.


தொழிற்சங்கங்கள் கருத்து:


அதில், பல்வேறு தொழிற்சங்க நிர்வாகிகள் கலந்துகொண்டு தங்களது கருத்துகளை தெரிவித்தனர். 12 மணி  நேர  வேலை சட்ட மசோதா தொழிலாளர் நலனை பாதிக்கும்  என அண்ணா தொழிற்சங்கம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இந்த சட்டமசோதாவை எக்காரணத்தை கொண்டும் ஏற்றுக்கொள்ள முடியாது, இந்த சட்ட திருத்தத்தில் தொழிலாளர்களுக்கு எந்த பாதுகாப்பும் இல்லை. தொழிலாளர்கள்  விரும்பினால் மட்டுமே  வேலை பார்க்கலாம் என்ற அரசு கூறும் விளக்கம் ஏற்கத்தக்கது அல்ல என சிஐடியு சார்பில் தெரிவிக்கப்பட்டது.


நாளை போராட்டம்:


ஆலோசனைக்கூட்டத்தின் முடிவுக்குப் பிறகு தொழிற்சங்க பிரதிநிதிகள் செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது, ”வேலை நேரத்தை குறைக்க வேண்டிய காலம், குறைக்க வேண்டிய தருணம் இது. எந்த லாபம் வரும் என்றாலும்,  தொழிலாளர் நலனே முக்கியம். எந்த விளக்கமும் தேவையில்லை. 12 மணி நேர வேலை சட்டத்தை முற்றாக திரும்பப் பெற வேண்டும். 8 மணி  நேர சட்டம் இருக்கும் சூழலிலேயே  12 மணி நேர வேலை  வாங்கும் பல நிறுவனங்கள் இருக்கின்றன. அரசு இன்றைக்குள் நல்ல முடிவு எடுக்காவிட்டால், ஏற்கனவே அறிவித்தபடி போராட்டத்தில் ஈடுபடுவோம். நாளை ஆர்பாட்டம், நாளை மறுநாள்  தொழிற்சாலைகளில் உணவு புறக்கணிப்பு போராட்டம் நடத்துகிறோம். முதலமைச்சர் நல்ல முடிவை எடுப்பார் என நம்புகிறோம்” என சிஐடியு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


அமைச்சர்கள் குழு உறுதி:


பேச்சுவார்த்தையின் முடிவில், தொழிற்சங்க பிரதிநிதிகள் முன்வைத்த அனைத்து கோரிக்கைகளையும் முதலமைச்சர் கவனத்திற்கு கொண்டு செல்வோம் என  அமைச்சர்கள் குழு உறுதி அளித்தது.


சட்டம் சொல்வது என்ன?


இந்த 12 மணி நேர வேலை சட்டத்தின்படி அனைவரும் 12 மணி நேரம் வேலை செய்ய வேண்டும் என்பது கிடையாது. தொழிலாளர்கள் ஒப்புதல் அளித்தால் மட்டுமே நிறுவனங்கள் இந்த சட்டத்தை அமல்படுத்த முடியும். மேலும் வாரத்திற்கு 4 நாட்கள் மட்டுமே வேலை இருக்கும், 3 நாட்கள் சம்பளத்துடன் கூடிய விடுமுறை இருக்கும். ஆனால் இது அனைத்து நிறுவனங்களுக்கும் பொருந்தாது என்பது குறிப்பிடத்தக்கது.