“அடுத்த 30 வருஷத்துக்கும் சிஎம் விஜய்தான்” - தமிழக அரசியலில் அதிரடியைக் கிளப்பிய அமைச்சர்
அடுத்த 30 ஆண்டுகளுக்கும் தலைமுறைகள் கடந்து முதலமைச்சர் விஜய்தான் தமிழ்நாட்டை வழிநடத்துவார் - அமைச்சர் விஸ்வநாதன்

திமுக ஆட்சிக் காலத்தில் லஞ்சம் அதிகமாக இருந்ததாகவும், முதலமைச்சர் விஜய் தலைமையிலான அரசில் லஞ்சம் முழுமையாக ஒழிக்கப்படும் என்றும் உயர்கல்வித்துறை அமைச்சர் விஸ்வநாதன் தெரிவித்துள்ளார். மேலும், அடுத்த 30 ஆண்டுகளுக்கும் தலைமுறைகள் கடந்து முதலமைச்சர் விஜய்தான் தமிழ்நாட்டை வழிநடத்துவார் என்றும் அவர் கூறினார்.
சென்னை அண்ணாநகரில் உள்ள கந்தசாமி நாயுடு கல்லூரியின் 60-ஆவது ஆண்டு தொடக்க விழா மற்றும் இந்த கல்வியாண்டு முதல் இருபாலர் கல்வி அறிமுக விழா இன்று நடைபெற்றது. இதில் உயர்கல்வித்துறை அமைச்சர் விஸ்வநாதன் கலந்து கொண்டு நிகழ்ச்சியை தொடங்கி வைத்து மாணவர்கள் மத்தியில் உரையாற்றினார்.
விழாவில் பேசிய அமைச்சர் விஸ்வநாதன், வெறும் 10 மாணவர்களுடன் தொடங்கப்பட்ட கந்தசாமி நாயுடு கல்லூரி, இன்று சுமார் 30 ஆயிரம் மாணவர்கள் கல்வி பயிலும் கல்வி நிறுவனமாக வளர்ந்திருப்பது பெருமைக்குரியது என்றார். கல்லூரி வாழ்க்கை என்பது அறிவையும் சிந்தனையையும் வளர்த்துக் கொள்ளும் முக்கியமான பருவம் என்றும், கல்வி நிறுவனங்களும், ஆசிரியர்களும், பேராசிரியர்களும் தெய்வங்களுக்கு சமமானவர்கள் என்றும் அவர் குறிப்பிட்டார். கல்லூரியில் பேராசிரியர்கள் பற்றாக்குறை இருப்பதாக நிர்வாகம் முன்வைத்த கோரிக்கையை விரைவில் பரிசீலித்து நல்ல முடிவு எடுக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அமைச்சர் உறுதியளித்தார்.
செல்போனில் மூழ்காதீர்கள்
தோல்வி என்பது முடிவு அல்ல; அது புதிய தொடக்கத்தின் ஆரம்பம் என்றும், மாணவர்கள் பேராசிரியர்களிடம் அதிகமாக கேள்விகள் கேட்டு அறிவை வளர்த்துக் கொள்ள வேண்டும் என்றும் அறிவுறுத்தினார். மாணவர்கள் செல்போன்களில் நேரத்தை வீணடிக்க பயன்படுத்தாமல், அறிவை வளர்த்துக் கொள்ளவும், புதிய திறன்களை கற்றுக்கொள்ளவும் பயன்படுத்த வேண்டும் என வலியுறுத்திய அவர், நல்ல நண்பர்களைத் தேர்ந்தெடுத்து, தங்களின் பலவீனங்களையும் திறமைகளையும் அறிந்து முன்னேற வேண்டும் என்றார்.
அரசியல் தலைவர்கள் நேரம் பார்க்காமல் மக்களுக்காக உழைக்க வேண்டும் என்றும், தலைமைச் செயலகத்திற்கு தாம் வருவதற்கு முன்பே அதிகாரிகள் பணியில் ஈடுபட்டு இருப்பதை பலமுறை பார்த்துள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார். போதைப்பொருள் மற்றும் கஞ்சா பயன்பாட்டை இரும்புக்கரம் கொண்டு ஒழிக்க அரசு தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாகவும், "சிங்கப்பெண்" சிறப்புப் படைகள் தீவிரமாக செயல்பட்டு வருவதாகவும் அவர் கூறினார்.
30 ஆண்டுகளுக்கும் விஜய்தான் முதலமைச்சர்
மேலும், உயர்கல்வி பயிலும் மாணவர்கள் அனைவரையும் தமது கருவிழி என்னும் கேமராவில் மனதில் பதித்து வைத்திருப்பதாகக் குறிப்பிட்ட அமைச்சர், விழித்திருந்து கனவு காணுங்கள், அந்தக் கனவுகளை இலக்காக மாற்றுங்கள், அந்த இலக்கை அடைய இடைவிடாமல் உழையுங்கள் என்று மாணவர்களுக்கு ஊக்கமளித்தார்.
தி.மு.க. ஆட்சிக் காலத்தில் லஞ்சம் அதிகமாக இருந்தது. ஆனால் முதலமைச்சர் விஜய் தலைமையிலான அரசில் லஞ்சம் முழுமையாக ஒழிக்கப்படும். அனைத்து துறைகளின் அமைச்சர்களும் இணைந்து லஞ்சத்தை வேரறுக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர். அடுத்த 30 ஆண்டுகளுக்கும் தலைமுறைகள் கடந்து முதலமைச்சர் விஜய்தான் தமிழ்நாட்டை வழிநடத்துவார் என்று தெரிவித்தார்.
Before You Go
SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
ட்ரெண்டிங் செய்திகள்





















