சென்னை கலங்கரை விளக்கத்தில் இருந்து நீலாங்கரை வரை கடல்மேல் பாலம் அமைப்பதற்கான சாத்தியக்கூறுகள் ஆராயப்படுகின்றன என அமைச்சர் எ.வ.வேலு தெரிவித்தார்.
சட்டப்பேரவையின் 5ஆம் நாள் கூட்டம் இன்று நடைபெற்று வருகிறது. இதில் கேள்வி நேரத்தின் போது உறுப்பினர்களின் கேள்விகளுக்கு அமைச்சர்கள் பதில் அளித்து வருகின்றனர்.
அதன்படி சட்டமன்ற உறுப்பினர் பிச்சாண்டி பேசுகையில், போக்குவரத்து நெரிசலை குறைக்க வெளிநாடுகளில் பாலங்கள் திறமையோடு அமைக்கப்படுகின்றன. அதுபோல், வெளிநாட்டு பொறியாளர்களை பயன்படுத்தி போக்குவரத்து நெரிசலை குறைக்க பாலங்கள் அமைக்க தமிழக அரசு முன்வருமா என கேள்வி எழுப்பினார். மேலும், ஒன்றிய அரசு பணம் தர மறுப்பதாக குற்றச்சாட்டு எழுகிறது. ஆனால் நிதின் கட்கரி அவர்கள் இடம் ஒதுக்கீடு செய்திருந்தால் எவ்வளவு பணம் வேண்டுமானாலும் தருகிறோம் என சொல்லியிருக்கிறார். இடத்தை கையகப்படுத்த கஷ்டப்படாமல் கடல் நடுவே பாலங்கள் அமைக்க அரசு முன்வருமா என்பதை அறிய விரும்புகிறேன்” என கேள்வி எழுப்பினார்.
இதற்கு பதில் அளித்த அமைச்சர் எ.வ.வேலு, “உறுப்பினர் கூறியபடி, ஒன்றிய அரசிடம் இருந்து நிதி தருவதாக சொல்லப்படுகிறது. அதற்கு காரணம் நாமும் தொடர்ந்து கடிதம் எழுதிக்கொண்டிருக்கிறோம். ஒன்றிய அரசு எப்படி தேசிய நெடுஞ்சாலை ஆணையம் என்று ஒன்று வைத்திருக்கிறதோ அதுபோல் தமிழ்நாடு அரசும் ஒரு ஆணையத்தை உருவாக்கியுள்ளது. அந்த ஆணையத்தை வைத்து வெளிநாட்டு பொறியாளர்களை வைத்து பாலங்கள் அமைக்க நடவடிக்கை மேற்கொள்ளலாம். உலக வங்கியில் கடன் வாங்கியும் செய்யலாம். மாநில அரசின் வருவாயிலிருந்தும் செய்யலாம். அதற்காகத்தான் தமிழ்நாடு மாநில நேடுஞ்சாலை என்ற ஆணையத்தை உருவாக்கியுள்ளோம். அதனடிப்படையில், முதல் கட்டமாக அதிகமான நெரிசல் உள்ள பகுதிகள் என கணக்கெடுத்துக்கொண்டால், சென்னையில் இருந்து மாமல்லபுரம் நோக்கி செல்லும் வழிதான் நெரிசல் மிகுந்த பகுதியாக கருதப்படுகிறது.
அதனால் அந்த ஆணையம் மூலம் திருவான்மியூரில் இருந்து நீலாங்கரை வரை ஏறத்தாழ அதுவும் 15 கி.மீ தூரம் ஒரு மேல் மட்ட பாலம் அமைக்கலாம் என ஆய்வு செய்து கொண்டிருக்கிறோம். இந்த சாலை 6 வழிச் சாலையாக அமைக்கலாம் என கருதுகிறோம்.
அதேபோல், சென்னையின் மற்ற பகுதிகளிலும் மற்ற மாநகராட்சி பகுதிகளிலும் கூட்ட நெரிசல் மிக்க பகுதிகளில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வரும்காலங்களில் பாலங்கள் கட்டப்படும்”எனத் தெரிவித்தார்.