கிரிக்கெட், ஹாக்கி தவிர மற்ற விளையாட்டுகளுக்கும் முக்கியத்துவம் அளிக்கும் வகையில் மத்திய அரசு சார்பில் 2018ம் ஆண்டு முதல் கேலோ இந்தியா விளையாட்டு நடத்தப்பட்டு வருகிறது. இந்தாண்டுக்கான கேலோ இந்தியா விளையாட்டுப் போட்டிகள் தமிழ்நாட்டில் நடைபெற உள்ளது.


பிரதமர் மோடிக்கு அழைப்பு:


தமிழ்நாட்டின் விளையாட்டுத்துறை அமைச்சராக உதயநிதி ஸ்டாலின் பொறுப்பேற்றது முதல் தமிழ்நாட்டில் விளையாட்டுப் போட்டிகளுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டு வருகிறது. இந்த போட்டிகள் வரும் 19ம் தேதி முதல் 31ம் தேதி வரை நடைபெற உள்ளது.


சென்னை, கோவை, மதுரை மற்றும் திருச்சியில் இந்த போட்டிகள் நடைபெற உள்ளது. கேலோ இந்தியா போட்டியை பிரம்மாண்டமாக நடத்த தமிழக அரசு திட்டமிட்டுள்ளது. இந்த போட்டியின் தொடக்க விழாவிற்கு பிரதமர் மோடியை அழைக்க ஏற்கனவே தமிழக அரசு திட்டமிட்டிருந்தது. இதையடுத்து, டெல்லி சென்ற அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இன்று பிரதம அலுவலகத்தில் பிரதமர் மோடியை நேரில் சந்தித்தார்.


சோனியா, ராகுல் காந்தியுடன் சந்திப்பு:


இந்த சந்திப்பின்போது பிரதமரிடம் கேலோ இந்தியா போட்டியின் தொடக்க விழாவிற்கு அழைப்பு விடுத்தார். கேலோ இந்தியா விளையாட்டுத் தொடரில் 17 வயது முதல் 21 வயது வரையிலான வீரர்கள், வீராங்கனைகள் பங்கேற்க உள்ளனர். இந்த தொடரில் மொத்தம் 5 ஆயிரம் வீரர்கள், வீராங்கனைகள் பங்கேற்க உள்ளனர்.


பிரதமர் மோடியைச் சந்தித்த பிறகு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும், நாடாளுமன்ற காங்கிரஸ் குழு தலைவரான சோனியாகாந்தி, காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி ஆகியோரை நேரில் சந்தித்தார். அவர்களுக்கும் கேலோ இந்தியா நிறைவு விழாவில் அழைப்பு விடுக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.


விரைவில் மக்களவைத் தேர்தல்:


இன்னும் ஓரிரு மாதங்களில் மக்களவைத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், பிரதமர் மோடியை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சந்தித்த நிலையில் சோனியா காந்தி, ராகுல் காந்தியையும் சந்தித்தது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


சோனியா காந்தி, ராகுல்காந்தி உடனான சந்திப்பின்போது மக்களவைத் தேர்தல் தொடர்பாகவும் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆலோசித்திருக்கலாம் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளது. காங்கிரஸ், தி.மு.க. கட்சிகள் இந்தியா கூட்டணியில் அங்கம் வகிக்கின்றன என்பது குறிப்பிடத்தக்து.