பாஜக தமிழக தலைவர் அண்ணாமலை பதிவிட்ட தமிழணங்கு தொடர்பாக அமைச்சர் தங்கம் தென்னரசு ட்வீட் செய்துள்ளார். அதில் வட மொழி ஸ இருந்ததைக் குறிப்பிட்டு இந்தப்பதிவை அவர் பதிவிட்டுள்ளார். அவரது ட்விட்டர் பதிவில், '' தமிழணங்கைப் போற்றுகிறோம் என்ற போர்வையில், தமிழ் எழுத்துகளுடன் ‘ஸ’ வையும் இணைத்துப் படம் போடும் போதே உங்களின் கூப்பிய கரங்களுக்குள் மறைத்து வைத்திருக்கும் கூர்வாள் தன் உண்மை முகத்தைக் காட்டி விட்டது. இதைத்தான் ‘தொழுத கையுள்ளும் படை ஒடுங்கும்” என வள்ளுவர் அடையாளம் காட்டிப் போனார்''எனக் குறிப்பிட்டுள்ளார்.
முன்னதாக, நேற்று தமிழணங்கு என தமிழ்த்தாயின் புகைப்படத்தை பாஜக தமிழக தலைவர் அண்ணாமலை பகிர்ந்திருந்தார். அதில் த, அ, ழ போன்ற எழுத்துகள் பளிச்சென்றும் பல எழுத்துகள் மங்கலாகவும் டிசைன் செய்யப்பட்டிருந்தது.அதில், ஸ வடமொழியும் இடம்பெற்றிருந்தது. இதனக் குறிப்பிட்டே தங்கம் தென்னரசு ட்வீட் செய்துள்ளார்.
இந்தி பிரச்சினை..
இந்தி திணிப்பு பிரச்சினை அவ்வப்போது எழுந்து வருகிறது. இதற்கிடையே, மாநிலங்களுக்கு இடையே மக்களுக்கு ஆங்கிலம் பயன்பாட்டு மொழியாக பயன்படுத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில் ஆங்கிலத்தின் பயன்பாட்டை குறைத்து , அதிக அளவில் இந்தி மொழியை பயன்படுத்த வேண்டும் என உள்துறை அமைச்சர் அமித்ஷா 37வது பாராளுமன்ற அலுவல் மொழிக் கூட்டத்தில் தெரிவித்திருந்தார். இது சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில் , இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான் தமிழணங்கு என புகைப்படம் ஒன்றை பதிவிட்டிருந்தார். அதில் ’தமிழணங்கு’ என்றும் ’இன்பத்தமிழ் எங்கள் உயிருக்கு நேர்’ என்னும் பாரதிதாசன் வாசகம் எழுதப்பட்டிருந்தது.
மேலும் கையில் ழகரத்தை ஏந்திக்கொண்டு, கருத்த தேகம் கொண்ட ஒரு பெண் துள்ளிக்குதிப்பது போல படம் ஒன்று வரையப்பட்டிருந்தது . அணங்கு என்றால் தேவைதையை குறிக்கும் என்கிறார்கள். அதன்படி , தமிழணங்கு என்பது தமிழ் தேவதை என பொருளாகிறது. இந்த பதிவு ஏ.ஆர்.ரஹ்மான் அமித்ஷாவிற்கு கொடுத்த பதிலடி என நெட்டிசன்கள் கமெண்ட்களை பதிவுச் செய்தனர். அந்த தமிழணங்கு வைரலாகி அடங்கிய நிலையில் அண்ணாமலை நேற்று ஒரு பதிவை பதிவிட்டுள்ளார்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்