கும்பகோணம் அரசு போக்குவரத்துக் கழகத்தின் சார்பில் நவகிரக கோவில்களுக்கும் குளிர்சாதன வசதியுடன் மேலும் கூடுதலாக ஒரு சிறப்பு சுற்றுலா பேருந்து 25.03.2024 முதல் வாரத்தில் 7 நாட்களும் இயக்கப்படும் என போக்குவரத்துத் துறை அமைச்சர் சிவசங்கர் தெரிவித்தார்.
நவகிரக சிறப்பு சுற்றுலா பேருந்து இயக்கம்:
பயணிகள் மற்றும் பக்தர்களின் நீண்ட நாள் கோரிக்கைக்கு ஏற்ப தமிழக அரசு சார்பில் கும்பகோணத்திலிருந்து புறப்பட்டு ஒரே நாளில் கும்பகோணம் மற்றும் அதனை சுற்றியுள்ள நவகிரக ஸ்தலங்களுக்கு ஒரே பேருந்தில் பயணம் செய்து எந்த ஒரு சிரமமும் இன்றி மீண்டும் கும்பகோணம் பேருந்து நிலையத்தை வந்தடையும் வகையில் நவகிரக சிறப்பு சுற்றுலா பேருந்து இயக்கம், 24.02.2024 முதல் தொடங்கப்பட்டு தொடர்ந்து இயக்கப்பட்டு வருகிறது.
பொதுமக்களிடம் சிறப்பான வரவேற்பை பெற்றதையடுத்து, வயதானவர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரின் வேண்டுகோளுக்கிணங்க குளிர்சாதன வசதியுடன் மேலும் கூடுதலாக ஒரு சிறப்பு சுற்றுலா பேருந்து 25.03.2024 முதல் வாரத்தில் 7 நாட்களும் இயக்கப்படும். குளிர்சாதன வசதியுடன் சிறப்பு சுற்றுலா பேருந்தில் நபர் ஒருவருக்கு ரூ.1350/- கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
பேருந்து விவரம்:
தமிழ்நாடு முதலமைச்சர் உத்தரவின்படி 25.03.2024 முதல் வாரத்தில் 7 நாட்களும் தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் கும்பகோணம் மண்டலத்தின் சார்பில் கும்பகோணம் மத்திய பேருந்து நிலையத்திலிருந்து நவகிரக சிறப்பு சுற்றுலா குளிர்சாதன பேருந்து இயக்கப்பட உள்ளது என போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் தெரிவித்தார்.
25.03.2024 முதல் பயணிகள் வசதிக்காக வாரத்தின் 7 நாட்களும் அதிகாலை 05:15 மணிக்கு கும்பகோணம் மத்திய பேருந்து நிலையத்திலிருந்து இயக்கப்பட்டு இரவு 8.00 மணியளவில் கும்பகோணம் பேருந்து நிலையம் வந்தடையும்.
முன்பதிவு:
குளிர்சாதன வசதியுடன் கூடிய நவகிரக சிறப்பு சுற்றுலா பேருந்தில் பயணம் செய்ய விருப்பம் உள்ள பயணிகள்,tnstc.in இணையதள முகவரியில் முன்பதிவு செய்து தங்களது பயணச்சீட்டை பெற்றுக் கொள்ள வசதிகள் செய்யப்பட்டுள்ளது. I phone கைபேசி மூலமாகவும் முன்பதிவு செய்து கொள்ளலாம். பயணிகள் நவகிரக குளிர்சாதன வசதியுடன் கூடிய சுற்றுலா பேருந்தில் பயணம் செய்ய இணையதளம் மற்றும் மொபைல் ஆப் மூலம் மட்டுமே முன்பதிவு செய்து பயணச்சீட்டை பெற்றுக்கொள்ள இயலும் எனவும், நேரடியாக பேருந்தில் பயண சீட்டு பெற்றுக் கொள்ள இயலாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பயணிகள் நவகிரக சுற்றுலா பேருந்து வசதியினை பயன்படுத்திக் கொள்ள வேண்டுமாய் அன்புடன் கேட்டுக்கொள்கிறோம் என போக்குவரத்துத் துறை அமைச்சர் சிவசங்கர் தெரிவித்தார்.