அமைச்சர் செந்தில் பாலாஜிக்கான நீதிமன்றக்காவல் இன்றுடன் முடிவடையும் நிலையில், விசாரணைக்காக காவேரி மருத்துவமனையில் இருந்து வீடியோ காலில் ஆஜரானார். வழக்கை விசாரித்த நீதிபதி அல்லி, அமைச்சர் செந்தில் பாலாஜியை ஜூலை மாதம் 12ஆம் தேதி வரை நீதிமன்றக்காவலில் விசாரிக்க உத்தரவிட்டுள்ளார். 


அமலாக்கத்துறையால் அமைச்சர் செந்தில் பாலாஜி கைது செய்யப்படதை உறுதி செய்த நீதிபதி அல்லி, அமைச்சர் செந்தில் பாலாஜியை ஜூன் மாதம் 28ஆம் தேது வரை அதாவது இன்று வரை நீதிமன்றக் காவலில் விசாரிக்க உத்தரவிட்டிருந்தார். இந்நிலையில், இன்றுடன் விசாரணைக்கெடு முடிவடையும் நிலையில், இதய அறுவை சிகிச்சை முடிந்து காவிரி மருத்துவமனையில் உள்நோயாளியாக உள்ள அமைச்சர் செந்தில் பாலாஜி, ”விடியோ கால்” மூலம் விசாரணையில் இணைந்தார். அப்போது அமைச்சரை நலம் விசாரித்த நீதிபதி, அமலாக்கத்துறையின் வேண்டுகோளை ஏற்று, நீதிமன்றக் காவலை வரும் ஜீலை மாதம் 12ஆம் தேதி வரை நீடித்து உத்தரவிட்டுள்ளார். 


இதற்கு முன்னதாக, சட்டவிரோத பணபறிமாற்ற வழக்கில் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டு அமைச்சர் செந்தில் பாலாஜி நீதிமன்றக் காவலில் உள்ளார். இதனால் இவர் கவனித்து வந்த துறைகள் அமைச்சர்கள் முத்துசாமி மற்றும் தங்கம் தென்னரசுக்கு கூடுதல் துறையாக ஒதுக்கப்பட்டது. மேலும், அமைச்சர் செந்தில் பாலாஜியை அமைச்சர் பொறுப்பில் இருந்து விடுவிக்காமல்,  அவரை இலாகா இல்லாத அமைச்சராக மாற்றினார் முதலமைச்சர் ஸ்டாலின். 


இதனை எதிர்த்து அதிமுகவின் முன்னாள் மத்திய சென்னை மக்களவை உறுப்பினர் ஜெ.ஜெயவர்தன் கடந்த 22ஆம் தேதி வழக்கு தொடுத்தார். இந்த வழக்கினை ஜூன் 26ஆம் தேதி விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், வழக்கினை வரும் ஜூலை மாதம் 7ஆம் தேதி ஒத்திவைத்தது. இதையடுத்து, தற்போது முதன்மை அமர்வுக்கு வழக்கை மாற்றியுள்ளது. 


அமைச்சருக்கு இதய அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது. சென்னை காவேரி மருத்துவமனையில் 4-வது தளத்தில் உள்ள அறை எண் 435-யில் அமைச்சர் செந்தில்பாலாஜி உள்நோயாளியாக உள்ளார். செந்தில்பாலாஜியின் உடல்நிலை தொடர் கண்காணிப்பில் உள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் விரைவில் டிஸ்சார்ஜ் செய்யப்படுவார் என கூறப்படுகிறது. 


இதற்கு முன்னதாக, அமைச்சர் செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டபோது, மனித உரிமை மீறப்பட்டதாகவும், சட்டப்படி அவர் கைது செய்யப்படவில்லை எனவும் அமைச்சர் செந்தில் பாலாஜியின் மனைவி மேகலா சென்னை உயர்நீதி மன்றத்தில் மனுதாக்கல் செய்திருந்த நிலையில், அமலாக்கத்துறை பதில் மனுதாக்கல் செய்தது. 


அந்த மனுவில், அமைச்சர் செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டபோது, அவரது உறவினர்களுக்கு குறுஞ் செய்தி மூலமாகவும் மின்னஞ்சல் மூலமாகவும் தகவல் தெரிவிக்கப்பட்டதாக குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் விசாரணைக்கு ஒத்துழைக்காததால் தான் அமைச்சர் செந்தில் பாலாஜியை கைது செய்ய நேர்ந்தது எனவும் குறிப்பிடப்பட்டிருந்தது. 


மேலும், அமைச்சர் செந்தில் பாலாஜியை கைது செய்யும் முன்னர் அவரிடம் சம்மன் கொடுக்கப்பட்டது ஆனால் அவர் அதனை பெற மறுத்தார். மேலும், அதிகாரிகளை மிரட்டும் தொனியில் நடந்து கொண்டார். விசாரணைக்கு ஒத்துழைக்காததால் தான் அவரை கைது செய்தோம். மேலும், அவரை கைது செய்யும் முன்னர் சட்டவிரோதமாக அவரை அமலாக்கத்துறை சிறை பிடிக்கவில்லை எனவும் கூறியது.