பண மோசடி விவகாரத்தில் மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி இன்று அமலாக்கத்துறையில் ஆஜராகிறார். ஆளும் திராவிட முன்னேற்றக் கழக அரசின் மின் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி கடந்த அதிமுக ஆட்சியில் மறைந்த ஜெ.ஜெயலலிதா அமைச்சரவையில் போக்குவரத்துத் துறை அமைச்சராகவும் பதவி வகித்தவர். அவர் அமைச்சராகப் பதவி வகித்த காலத்தில் போக்குவரத்துத் துறையில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி பணம் பெற்றுக் கொண்டு மோசடியில் ஈடுபட்டார் என அவர் மீது புகார் சொல்லப்பட்டது. இதன் அடிப்படையில் பணப்பரிமாற்றச் சட்டத்தின் கீழ் அவர் மீது சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசில் மூன்று வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. இதையடுத்து அமலாக்கத்துறையில் செந்தில் பாலாஜி மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்த நிலையில் மதுரையில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்தில் இன்று ஆஜராகும்படி செந்தில் பாலாஜி தரப்புக்குச் சம்மன் அனுப்பப்பட்டது. இதையடுத்து அவர் இன்று அலுவலகத்தில் ஆஜராவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. செந்தில்பாலாஜி மீது தொடரப்பட்ட வழக்குகளில் ஒன்றை அண்மையில் சென்னை உயர்நீதிமன்றம் ரத்து செய்தது குறிப்பிடத்தக்கது.


முந்தைய அதிமுக அமைச்சரவையில் பணமோசடி விவகாரம் நிகழ்வது இது முதல்முறையல்ல. திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும் முன்னாள் தொழிலாளர் நலத்துறை அமைச்சருமான நிலோபர் கஃபில் மீதான பணமோசடி புகார் குறித்து, 108 பேரிடம் திருப்பத்தூர் மாவட்ட காவல் துறையினர்  விசாரணை செய்தனர். திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடியைச் சேர்ந்தவர் நிலோஃபர் கபில். கடந்த அதிமுக ஆட்சியில் தொழிலாளர் நலத்துறை அமைச்சராக இருந்தவர் நிலோபர் கஃபில், அரசு வேலை வாங்கி தருவதாக 108 பேரிடம்  பேரிடம் 6 கோடி ரூபாய் வாங்கி மோசடி செய்ததாக அவரது அரசியல் உதவியாளரான  பிரகாசம் சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் செய்தார் .




இதுகுறித்து விசாரணை செய்து அறிக்கை அனுப்ப திருப்பத்தூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் விஜயகுமார் அவர்களுக்கு சென்னை போலீஸ் கமிஷனர் உத்தரவிட்டு இருந்தார். இதையடுத்து 108 பேரிடம் விசாரணை செய்ய மாவட்ட காவல் கண்காணிப்பாளர் விஜயகுமார், துணை கண்காணிப்பாளர்கள் பிரவீன்குமார், சச்சிதானந்தம் ஆகியோர் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு  விசாரணை தொடங்கப்பட்டது. இது குறித்து டிஎஸ்பி பிரவீன் குமாரிடம்  கேட்டதற்கு 'அமைச்சர் நிலோபர் கஃபில் மற்றும் உதவியாளர் பிரகாசம் ஆகியோரிடம்  பணம் கொடுத்த 108 பேரில், முகவரி தெரிந்த  சிலருக்கு மட்டும் தற்போது சம்மன் கொடுக்கப்பட்டுள்ளது. அவர்கள் அனைவரையும் திருப்பத்தூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்திற்கு வரவழைத்து விசாரணை செய்தோம். 15 பேரிடம் விசாரணை செய்துள்ளோம். மேலும் இதில் அரசு அதிகாரிகள்  சம்பந்தப்பட்டுள்ளார்கள் அவர்களிடமும் விசாரணை நடத்த திட்டமிட்டுள்ளோம் இந்த மோசடி குற்றச்சாட்டில் தொடர்புடைய  அதிகாரிகளின்  முகவரி கிடைத்தவுடன் அவர்களுக்கும் சம்மன்  அனுப்பி விசாரணை செய்யப்படும். பெயர் மட்டுமே புகாரில் உள்ளதால் முகவரிகள் கண்டுபிடிப்பது சிரமமாக உள்ளது. சிலர் விசாரணைக்கு வர மறுக்கிறார்கள் என டிஎஸ்பி தெரிவித்தார். முழு விசாரணை முடிந்தவுடன், சென்னை கமிஷனர் அலுவலகத்திற்கு அறிக்கை அனுப்பி வைக்கப்படும்’ என்று குறிப்பிட்டிருந்தார். கடந்த மே மாதம் 21-ஆம் தேதி நிலோபர் கஃபில் கட்சி கட்டுப்பாட்டை மீறியதாக அதிமுகவின் அடிப்படை உறுப்பினர் உட்பட அனைத்து பதவிகளில் இருந்தும் நீக்கப்படுவதாக அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பி.எஸ் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் ஈபிஎஸ் கூட்டாக அறிவித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.