எந்தவொரு அறமும் இன்றி வெறும் வியாபாரமாகவே பார்க்கும் வியாபாரி பழனிசாமி எப்படியான அரசியல் வியாபாரி என்பது அவரைச் சுற்றியுள்ளவர்களுக்கு மிக நன்றாக தெரியும் என அமைச்சர் செந்தில்பாலாஜி சரமாரியாக சாடியுள்ளார். 


இதுகுறித்து அவர் தனது எக்ஸ் தளத்தில், ”தரையே தேயும் அளவுக்கு ஊர்ந்து சென்று காலைப் பிடித்து முதல்வராகி, பதவி சுகம் கண்டவுடன் அந்த கால்களையே வாரிவிட்ட எடப்பாடி பழனிசாமி அவர்கள் அரசியல் விசுவாசம் பற்றி வகுப்பெடுக்கிறார்..


பழனிசாமி அவர்கள் தனிப்பட்ட வகையில் எத்தனை பேருக்கு துரோகம் செய்தார் என்ற கணக்கை கூட விட்டுவிடலாம்; தனது பதவி நிலைத்திருக்க வேண்டும் எனும் சுயநலத்திற்காக தமிழ்நாட்டையே பாஜகவிடம் அடமானம் வைத்தார் என்பதை தமிழ்நாட்டு மக்கள் அனைவரும் அறிவர்.. 






புளிமூட்டையில் ஆரம்பித்து அரசியல் வரை எல்லாவற்றையும் எந்தவொரு அறமும் இன்றி வெறும் வியாபாரமாகவே பார்க்கும் வியாபாரி பழனிசாமி எப்படியான அரசியல் வியாபாரி என்பது அவரைச் சுற்றியுள்ளவர்களுக்கு மிக நன்றாக தெரியும்..


அடிமைக் கூட்டத்திற்கு லாவணி பாடாதவர்களுக்கு எல்லாம் ஏதாவதொரு முத்திரை குத்தி அவர்களைக் காலி செய்வதற்காக எந்தவொரு லாபியும் செய்யத் தயங்காத பதவி வியாபாரி பழனிசாமி மற்றவர்களைப் பார்த்து வியாபாரி என்று சொல்வதுதான் நகைமுரண்” எனத் தெரிவித்துள்ளார். 


கடந்த சில நாட்களாக அமைச்சர் செந்தில்பாலாஜி எடப்பாடி பழனிசாமியை கடுமையாக விமர்சித்து வருகிறார். அந்த வகையில் சில நாட்களுக்கு முன்பு கூட ”‘‘நாம முன்னுக்கு வரணும்னா நாய் என்ன... மனுஷன் என்ன? ஏறி மிதிச்சு போயிட்டே இருக்கணும்’’


‘அமைதிப்படை’ படத்தில் வரும் டயலாக் இது. அதில் வரும் ‘அமாவாசை’ கேரக்டர் தான் எடப்பாடி பழனிசாமி. 


பலரை ஏறி மிதித்து, ஊர்ந்து சென்று, பதவியைப் பிடித்த பழனிசாமி, '’திமுக ஆட்சிக்கு இன்னும் 13 அமாவாசைதான் இருக்கிறது’’ என நேற்று பேசியிருக்கிறார்.


ஆட்சியை இழந்த இந்த நான்கு ஆண்டுக் காலத்தில் அமாவாசையையென உருட்டியே அரசியல் செய்து கொண்டிருக்கிறார் பழனிசாமி.


’’2024-ம் வருடம் சட்டசபைக்கும் தேர்தல் வரும். இன்னும் 27 அமாவாசைகள் மட்டுமே ஸ்டாலின் முதலமைச்சராக இருக்க முடியும். மீண்டும் அதிமுக அரசு தமிழகத்தில் அமையும்’’ - 2022 பிப்ரவரி 12. சேலம், தாரமங்கலம். 


’’இன்னும் 28 அமாவாசைகள் மட்டுமே திமுக அரசு ஆட்சியில் இருக்கும்’’ - 2024 ஜனவரி 25. எக்ஸ் தள பதிவு.


’’திமுக ஆட்சியின் ஆயுட் காலம் 19 அமாவாசைகள்தான். நாட்கள் எண்ணப்படுகின்றன’’ -  2024 செப்டம்பர் 20. X தளப்பதிவு. 


இப்படி ஒவ்வொரு அமாவாசைக்கும் 
 பழனிசாமி கணக்கு சொல்லிக் கொண்டிருக்கிறார்.


அமாவாசைகள்தான் கடந்து சென்று கொண்டிருக்கிறன.


ஈரோடு கிழக்கு இடைத் தேர்தலில் போட்டியிடாமல் புறமுதுகிட்டு ஓடும் 23-ம் புலிகேசி பழனிசாமி, இன்னும் நூறு பெளர்ணமிகளுக்கு மாண்புமிகு தளபதிதான் முதலமைச்சராக தொடர்வார் என்பதை 2026ல் உணர்ந்து கொள்வார்” எனத் தெரிவித்திருந்தார். 


எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி திமுக அரசு மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுக்களை முன் வைத்து வருகிறார். மேலும் அதிமுக சார்பில் பல போராட்டங்களும் நடைபெற்று வருகின்றன. 


தங்களது இருப்பை காட்டிக்கொள்ளவே இபிஎஸ் மலிவான அரசியல் செய்து வருவதாக திமுக தரப்பில் தெரிவிக்கப்படுகிறது. இபிஎஸ்க்கு எதிராக பல்வேறு அமைச்சர்களும் கண்டன அறிக்கை விட்ட வண்ணம் இருக்கின்றனர். இதை இபிஎஸ்சே சட்டமன்றத்தில் வெளிப்படையாக சபாநாயகரிடம் புகார் தெரிவித்தார். குற்றச்சாட்டுக்களை முன்வைத்தால் அமைச்சர்கள் மாறி மாறி எனக்கு அறிக்கை விடுகிறார்கள் என புலம்பினார் இபிஎஸ். இதற்கு பதில் அளித்த முதலமைச்சர் ஸ்டாலின் நீங்கள் தினந்தோறும் குற்றச்சாட்டுகளை முன்வைக்கிறீர்கள். அதற்கு அமைச்சர்கள் பதில் சொல்லுகிறார்கள் என பதிலடி கொடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.