போக்குவரத்து துறை வேலை விவகாரத்தில் வழக்குகளை ரத்து செய்யக்கோரி அமைச்சர் செந்தில் பாலாஜியின் மனுவானது நாளை மறுதினம் விசாரணைக்கு வருகிறது. 

Continues below advertisement


கடந்த அதிமுக ஆட்சியில் போக்குவரத்துறை அமைச்சராக இருந்த செந்தில்பாலாஜி, வேலை வாங்கித் தருவதாக கூறி பண மோசடியில் ஈடுபட்டதாக அளிக்கப்பட்ட புகார் அமலாக்கத்துறை வசம் இருக்கும் நிலையில், இந்த வழக்கில் செந்தில்பாலாஜி விசாரிக்கப்பட்டால், அவரை அமலாக்கத்துறை கைது செய்வதற்கான வாய்ப்புகள் இருப்பதாக கூறப்படுகிறது. 


தற்போதைய தமிழக மின்சாரத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி, கடந்த 2011-15 ஆம் ஆண்டுகளில் அதிமுக ஆட்சியில் போக்குவரத்து துறை அமைச்சராக இருந்தபோது, அத்துறையில்  வேலை வாங்கி வருவதாக கூறி பலரிடம் பணம் பெற்று மோசடி செய்ததாக சென்னை காவல் ஆணையரிடம் பாதிக்கப்பட்டவர்கள்  புகார் அளித்தனர்.

 

இதன் அடிப்படையில் செந்தில்பாலாஜி, அவரது நண்பர்கள் பிரபு, சகாயராஜன், தேவசகாயம், அன்னராஜ் உள்ளிட்டோர் மீது நம்பிக்கை மோசடி, ஏமாற்றுதல், கொலை மிரட்டல் உள்ளிட்ட பிரிவுகளில் மத்திய குற்றப்பிரிவு காவல்துறையினர் மூன்று வழக்குகளை பதிவு செய்தனர்.  அவை சென்னை எம்.பி.-எம்.எல்.ஏ.க்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணையில் உள்ளது. 

 


தன் மீதான வழக்குகளை ரத்து செய்யக்கோரி அமைச்சர் செந்தில்பாலாஜி  தாக்கல் செய்த வழக்குகள் நீதிபதி வி.சிவஞானம் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது செந்தில் பாலாஜி தரப்பில், அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை காரணமாகவே தன் மீது இந்த வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதால் வழக்கை ரத்து செய்ய வேண்டுமென வாதிடப்பட்டது.

 

இதற்கு புகார் தாரர் தரப்பிலும், அமலாக்க துறை தரப்பிலும் எதிர்ப்பு தெரிவித்து வாதிடப்பட்டது. அனைத்து தரப்பு வாதங்களும் நிறைவடைந்த நிலையில் செந்தில் பாலாஜி தாக்கல் செய்த மனுக்கள் மீது வரும் திங்கட்கிழமை உத்தரவு பிறப்பிப்பதாக கூறி தீர்ப்பை தள்ளிவைத்துள்ளார்.