அமைச்சர் செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனு மீது பதிலளிக்க, அமலாக்கத்துறை கால அவகாசம் கோரியது.


அமலாக்கத்துறை பதிலளிக்க உத்தரவு


உயர்நீதிமன்ற உத்தரவை தொடர்ந்து முதன்மை அமர்வு நீதிமன்றத்தில், அமைச்சர் செந்தில் பாலாஜி தரப்பில் ஜாமின் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அந்த மனு இன்று காலை விசாரணைக்கு பட்டியலிடப்பட்டது.  தனது உடல்நிலையை கருத்தில் கொண்டு ஜாமின் வழங்க வேண்டும் என செந்தில் பாலாஜி முறையிட்ட மனுவை, நீதிபதி அல்லி அமர்வு விசாரித்தது. அப்போது, இந்த ஜாமின் மனு மீது தங்கள் தரப்பு பதிலளிக்க அவகாசம் வேண்டும் என அமலாக்கத்துறை சார்பில் ஆஜரான வழக்கறிஞர் கோரிக்கை வைத்தார். அதை ஏற்ற நீதிபதி, வெள்ளிக்கிழமைக்குள் அமலாக்கத்துறை பதிலளிக்க உத்தரவிட்டு, விசாரணையை ஒத்திவைத்தார்.


கைது நடவடிக்கை:


அதிமுக ஆட்சிக் காலத்தில் அமைச்சராக இருந்தபோது லஞ்சம் பெற்றதாக, அமைச்சர் செந்தில் பாலாஜி மீது குற்றம்சாட்டப்பட்டுள்ளது. அதனடிப்படையில்,  சட்டவிரோத பண பரிமாற்ற தடை சட்டத்தின் கீழ் கடந்த ஜூன் 14ஆம் தேதி, அமலாக்கத்துறையால் செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டார். அதேநேரம், உடல்நலக்குறைபாடு காரணமாக அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அறுவை சிகிச்சையும் மேற்கொள்ளப்பட்டது. அதனை தொடர்ந்து புழல் சிறையில் அடைக்கப்பட்டார். இதனிடையே, செந்தில் பாலாஜிக்கு எதிராக சுமார் 3000 பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிகை மற்றும் ஆவணங்கள், அமலாக்கத் துறையால் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டன.


வழக்கு மாற்றம் & ஜாமீன் மனு:


தொடர்ந்து செந்தில் பாலாஜிக்கு எதிரான வழக்கு விசாரணை சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள எம்.பி., எம்.எல்.ஏக்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்திற்கு கடந்த மாதம் 14ம் தேதி மாற்றப்பட்டது. அங்கு அமைச்சர் ஜாமீன் கோரி மனுத்தாக்கல் செய்த நிலையில், அதனை யார் விசாரிப்பது என்பதில் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் மற்றும் எம்.பி., எம்.எல்.ஏக்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றம் ஆகியவற்றிற்கு இடையே மாறுபட்ட கருத்து நிலவியது.


உயர்நீதிமன்றம் உத்தரவு:


இதன் காரணமாக தனது ஜாமீன் மனுவை எந்த நீதிமன்றம் விசாரிக்க வேண்டும் என உத்தரவிடக்கோரி செந்தில் பாலாஜி சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. அதனை விசாரித்த நீதிமன்றம் ”அமைச்சரின் வழக்கை எம்.பி, எம்.எல்.ஏ வழக்குகளுக்கான நீதிமன்றத்திற்கு மாற்றியது தவறு எனவும், சட்டவிரோத பண பரிமாற்ற தடை சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டவர்கள் எம்.பி., எம்.எல்.ஏக்களாக இருந்தாலும், அந்த வழக்குகளை விசாரிக்க முதன்மை அமர்வு நீதிமன்றத்திற்கு மட்டுமே அதிகார வரம்பு வழங்கப்பட்டுள்ளதாக” உத்தரவிட்டது. அதனடிப்படையில் வழக்கு தொடர்பான ஆவணங்கள் உடனடியாக முதன்மை அமர்வு நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டன. அதனை தொடர்ந்து, அமைச்சர் செந்தில் பாலாஜி தாக்கல் செய்த ஜாமீன் மனு சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது.