அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு விரைவில் பை - பாஸ்அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்படவுள்ளதாக, மருத்துவமனை அறிவித்துள்ளது. இது குறித்து தனியார் மருத்துவமனையான காவேரி மருத்துவமனை வெளியிட்டுள்ள அறிக்கையில், செந்தில் பாலாஜிக்கு விரைவில் இதய அறுவை சிகிச்சை செய்யப்படவேண்டும் எனவும், அதற்கு அவரது உடல்நிலை உள்ளதா என பரிசோதித்து வருகிறோம் என குறிப்பிட்டுள்ளனர்.
மேலும் அந்த அறிக்கையில், அமைச்சர் செந்தில் பாலாஜி தற்போது தீவிர சிகிச்சைப் பிரிவில் அதாவது ஐ.சி.யூவில் அனுமதிக்கப்பட்டுள்ளார் எனவும், அவரது இதய செயல்பாடுகள் மருத்துவக்குழுவால் பரிசோதிக்கப்பட்டு வருகிறது எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. இதய அறுவை சிகிச்சை நிபுணர் மருத்துவர் ரகுராம் தலைமையில் நடைபெற்ற பரிசோதனைக்குப் பின்னர், அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு விரைவில் அறுவை சிகிச்சை மேற்கொள்ள வேண்டும் என பரிந்துரைத்துள்ளனர். மேலும், அவரது உடலில் மயக்கமருந்து சோதனை நடத்தி அறுவை சிகிச்சைக்கு அவரது உடல் ஒத்துழைக்குமா எனவும் பரிசோதனை செய்யவுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளனர்.
ஏற்கனவே இன்று காலை அதாவது ஜூன் 16ஆம் தேதி காலையில் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன், அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு ஓரிரு தினங்களில் அறுவை சிகிச்சை செய்யப்படவுள்ளது என்றும், அவரது மனைவி கோரிக்கை வைத்ததால் தான், தனியார் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளார் எனவும் கூறினார்.
பின்னணி
செந்தில் பாலாஜியை காவேரி மருத்துவமனைக்கு மாற்ற சென்னை உயர்நீதிமன்றம் முன்னதாக அனுமதி வழங்கியது. இதையடுத்து, செந்தில்பாலாஜி நேற்று இரவு தனியார் மருத்துவமனையான காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு இன்று மருத்துவமனையில் அறுவை சிகிச்சை நடைபெறும் என்று தகவல்கள் வெளியாகியுள்ளது.
செந்தில் பாலாஜியின் மனைவி தொடர்ந்த ஆட்கொணர்வு மனு மீதான விசாரணையின் போது, நீதிபதிகள் நிஷா பானு, பரத சக்ரவர்த்தி இந்த உத்தரவை பிறப்பித்தனர். செந்தில் பாலாஜியை அவரது குடும்பத்தினர் தவிர வேறு யாரும் உரிய அனுமதியின்றி சந்திக்கக் கூடாது. அமைச்சர்கள் உள்ளிட்ட அனைவருமே உரிய அனுமதி பெற்று செந்தில் பாலாஜியை சந்திக்க நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. அதேபோல, காவேரி மருத்துவமனைக்கு சென்று அமலாக்கத்துறை குழுவும் ஆராயலாம் என நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
மின்சாரம் மதுவிலக்கு ஆயத்தீர்வை துறை அமைச்சராக உள்ள செந்தில் பாலாஜி வீடு உள்ளிட்ட தொடர்புடைய இடங்களில் அமலாக்கத்துறையினர் சோதனை செய்தனர். தலைமைச்செயலகத்தில் உள்ள அவரின் அறையில் சோதனை நடைபெற்றது. இந்த சோதனையானது சுமார் 17 மணி நேரம் நீடித்த நிலையில் கடந்த புதன்கிழமை நள்ளிரவு 2 மணியளவில் செந்தில் பாலாஜியை கைது செய்து அமலாக்கத்துறையினர் அழைத்து சென்றனர். அப்போது அவர் நெஞ்சு வலி என அழுத நிலையில், அவரை உடனே ஓமந்தூரார் மருத்துவமனையில் அமலாக்கத்துறையினர் அனுமதித்தனர்.