செந்தில் பாலாஜியின் ஆட்கொணர்வு மனு மீதான விசாரணையை சென்னை உயர்நீதிமன்றம் முடித்து வைப்பதாக தெரிவித்துள்ளது.
கடந்த ஜூன் மாதம் 13ஆம் தேதி அமைச்சர் செந்தில் பாலாஜி க்கு சொந்தமான இடங்களில் சுமார் 17 மணி நேரம் அமலாக்கத்துறை சோதனை நடைபெற்றது. போக்குவரத்து துறையில் வேலை வாங்கி தருவதாக கூறி அமைச்சர் செந்தில் பாலாஜி பண மோசடியில் ஈடுபட்டதாக கூறிய சம்பவத்தில் நடைபெற்ற இந்த சோதனை பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதனைத் தொடர்ந்து 14 ஆம் தேதி நள்ளிரவில் அவர் அமலாக்கத்துறை விசாரணைக்கு அழைத்து செல்லப்பட்டார்.
ஆனால் செந்தில் பாலாஜிக்கு நெஞ்சுவலி ஏற்படவே உடனடியாக ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பின்னர் நீதிமன்ற அனுமதியுடன் காவேரி மருத்துவமனைக்கு மாற்றம் செய்யப்பட்ட செந்தில் பாலாஜிக்கு ஜூன் 21 ஆம் தேதி காலை 5 மணிக்கு இதய அறுவை சிகிச்சை நடத்தப்பட்டது. இதற்கிடையில் அவரது மனைவி மேகலா சென்னை உயர்நீதிமன்றத்தில் செந்தில்பாலாஜிக்கு அளிக்கப்பட்ட நீதிமன்ற காவல் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்த நிலையில், இவ்வழக்கை முதலில் விசாரித்த நீதிபதிகள் பரத சக்கரவர்த்தி மற்றும் நிஷா பானு அமர்வு மாறுபட்ட தீர்ப்பை வழங்கினர்.
இதனையடுத்து மூன்றாவது நீதிபதி சி.வி கார்த்திகேயன் அமர்வுக்கு விசாரணை மாற்றம் செய்யப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி, ‘கைது செய்யப்பட்டவர்கள் விசாரணைக்கு எந்த தடையும் கோர முடியாது. விசாரணைக்கு ஒத்துழைக்க வேண்டும்’ என தெரிவித்தார். மேலும் எத்தனை நாட்கள் அமலாக்கத்துறையினர் காவலில் எடுத்து விசாரிக்க வேண்டும் என்பதை ஏற்கனவே விசாரித்த இரு நீதிபதிகள் தான் முடிவு செய்ய வேண்டும் எனவும் நீதிபதி சி.வி கார்த்திகேயன் தெரிவித்து வழக்கை தள்ளுபடி செய்தார். இதற்கிடையில் சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யப்பட்டுள்ளது.
அதேசமயம் ஜூலை 17 ஆம் தேதி மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்ட செந்தில் பாலாஜி தற்போது புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்த நிலையில் இந்த ஆட்கொணர்வு மனு இன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் நீதிபதிகள் பரத சக்கரவர்த்தி மற்றும் நிஷா பானு அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது செந்தில் பாலாஜியை காவலில் விசாரிக்க வேண்டும் என்றும், 3வது நீதிபதி கார்த்திகேயன் முன்னதாக வழக்கை விசாரித்த உங்கள் அமர்வை அணுக சொன்னதையும் குறிப்பிட்டு அமலாக்கத்துறை தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது.
இருதரப்பு விவாதத்தை கேட்ட நீதிபதிகள் விவகாரத்தை உச்சநீதிமன்றம் கையில் எடுத்த பின் நாங்கள் ஏன் நிலுவையில் வைத்திருக்க வேண்டும் என தெரிவித்து வழக்கை முடித்து வைத்தனர். இந்த வழக்கில் அமலாக்கத்துறை பதிலளிக்க நோட்டீஸ் அளித்த உச்சநீதிமன்றம் வழக்கை நாளை (ஜூலை 26) விசாரிக்கவுள்ளது குறிப்பிடத்தக்கது.