உலகப் புகழ்பெற்ற திருப்பதி ஏழுமலையான் கோயிலில் வழங்கப்படும் பிரசாதமான லட்டு தனித்துவம் மற்றும் சிறப்பு வாய்ந்ததாக பக்தர்களால் கருதப்பட்டு வருகிறது. இந்த நிலையில், மாட்டுக்கொழுப்பு கலந்த நெய்யில் திருப்பதி கோயிலில் வழங்கப்பட்டுள்ள லட்டு வழங்கப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது. மாட்டுக்கொழுப்பு இருந்தது உண்மை என தேவஸ்தானம் ஒப்புக்கொண்டது பக்தர்கள் மத்தியில் மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பழனி பஞ்சாமிர்தத்தில் மாட்டுக்கொழுப்பா?
இந்த சூழலில், திருப்பதி லட்டைப் போல பழனி பஞ்சாமிர்தத்திலும் மாட்டுக்கொழுப்பு கலந்த நெய் பயன்படுத்தப்பட்டதாக வதந்தி பரவியது. இதையடுத்து, இந்த குற்றச்சாட்டிற்கு அமைச்சர் சேகர்பாபு விளக்கம் அளித்துள்ளார். அவர் அளித்துள்ள விளக்கத்தில், 2021ம் ஆண்டு முதல் கோயில் பயன்பாட்டுக்கு பயன்படுத்தப்படும் நெய் ஆவின் நிறுவனத்தில் இருந்துதான் கொள்முதல் செய்யப்படுகிறது என்று தெரிவித்துள்ளார். திருப்பதி கோயிலுக்கு நெய் விநியோகித்த நிறுவனமே பழனி பஞ்சாமிர்தத்திற்கும் நெய் வழங்கியதாக எழுந்த குற்றச்சாட்டைத் தொடர்ந்து இந்த விளக்கத்தை சேகர்பாபு அளித்துள்ளார்.
தமிழக அரசு விளக்கம்:
இதுதொடர்பாக, தமிழ்நாடு அரசின் அதிகாரப்பூர்வ உண்மை சரிபார்க்கும் தகவல் சரிபார்ப்பகத்தின் அதிகாரப்பூர்வ எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது, திருப்பதி லட்டு தயாரிக்க சப்ளை செய்யப்பட்ட நெய்யில் மாட்டு இறைச்சி கொழுப்பு, பன்னி இறைச்சி கொழுப்பை கலந்து விற்ற ஏ.ஆர்.ஃபுட்ஸ் பழனி முருகன் கோயிலுக்கும் நெய் சப்ளை செய்கிறது என்று சமூக வலைதளங்களில் வதந்தி பரப்பப்படுகிறது.
உண்மை என்னவென்றால் இது முற்றிலும் பொய்யான செய்தி. பழனி கோயிலில் பஞ்சாமிர்தம் தயாரிக்க பயன்படுத்தப்படும் ஆவின் நிறுவனத்திடம் இருந்தே பெறப்படுகிறது என்று அறநிலையத்துறை விளக்கம் அளித்துள்ளது. வதந்தியை பரப்பாதீர்கள் என்று பதிவிட்டுள்ளனர்.
கோயில்களின் பிரசாதங்கள் கண்காணிப்பு:
திருப்பதி லட்டு பிரசாத விவகாரம் விஸ்வரூபம் எடுத்ததையடுத்து, தமிழ்நாட்டில் உள்ள பிரசித்தி பெற்ற கோயில்களில் வழங்கப்படும் பிரசாதங்களில் என்னென்ன பொருட்கள் கலக்கப்படுகிறது? என்பதை கண்காணிக்க வேண்டும் என்று ஒரு தரப்பினர் கோரிக்கை வைத்து வருகின்றனர். இந்த சூழலிலேயே, புகழ்பெற்ற மற்றும் முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் ஒன்றான பழனியாண்டவர் கோயிலின் பிரசாதமான பஞ்சாமிர்த தயாரிப்பின் மீது சிலர் கேள்வி எழுப்பினர்.
இதையடுத்தே, பஞ்சாமிர்த தயாரிப்பில் மாட்டு இறைச்சி கொழுப்பு கலக்கப்பட்ட நெய் பயன்படுத்தப்பட்டதாக வதந்தி பரவியது. இதையடுத்தே, அமைச்சர் சேகர்பாபு மற்றும் தமிழ்நாடு அரசு இதுதொடர்பாக விளக்கம் அளித்துள்ளனர். திருப்பதி லட்டுக்கு இணையாக பழனி முருகன் கோயிலின் பிரசாதமான பஞ்சாமிர்தமும் உலகப்புகழ்பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.