திமுக 2 ஆண்டு சாதனை விளகக் கூட்ட பேச்சாளர்கள் பட்டியலில் இருந்து நிதி அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் பெயர் நீக்கப்பட்டு இருப்பது பல்வேறு சந்தேகங்களை எழுப்பியுள்ளது. ஆடியோ விவகாரத்தில் கட்சி தலைமை அவர் மீது மறைமுக நடவடிக்கை எடுக்கிறது எனவும் கூறப்படுகிறது.


திமுக ஈராண்டு சாதனைக்கூட்டம்:


தமிழ்நாட்டில் திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் தலைமையிலான அரசு பொறுப்பேற்று இரண்டு ஆண்டுகள் நிறைவடைந்துள்ளன. இதையடுத்து அரசின் சாதனைகளை விளக்கும் வகையில் மாநிலம் முழுவதும் பொதுக்கூட்டங்களை நடத்த திமுக திட்டமிட்டுள்ளது.  இதற்காக பல்வேறு பகுதிகள் தேர்வு செய்யப்பட்டு அந்தந்த பகுதியில் உள்ள கட்சியின் முக்கிய பிரமுகர்களை, அந்த கூட்டத்தில் பேசவைக்க திட்டமிட்டுள்ளது. இதற்கான விவரங்களையும் திமுக ஏற்கனவே வெளியிட்டது.


மதுரையில் சாதனை விளக்க கூட்டங்கள்: 


அந்த வகையில் மதுரையில் மட்டும் 21 இடங்களில் சாதனை விளக்கக் கூட்டங்கள் நடைபெற உள்ளன. இதில் மாவட்ட செயலாளர்கள், அமைப்புச் செயலாளர்கள் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் உரையாற்றுவர்கள் என அவர்களது பெயர்களும் வெளியிடப்பட்டு இருந்தது. 


அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பெயர் நீக்கம்:


முதலில் வெளியான இந்த பட்டியலின்படி, சிம்மக்கல் பகுதியில் நடைபெறும் சாதனை விளக்கக் கூட்டத்தில் அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் உரையாற்றுவார் என தெரிவிக்கப்பட்டு இருந்தது. ஆனால், தற்போது திருத்தி வெளியிடப்பட்டுள்ள பேச்சாளர்கள் பட்டியலில் இருந்து பழனிவேல் தியாகராஜனின் பெயர் நீக்கப்பட்டுள்ளது. அவருக்கு பதிலாக முனைவர் ஜெயரஞ்சன், சிம்மக்கல் பகுதியில் நடைபெறும் சாதனை விளக்கக் கூட்டத்தில் உரையாற்றுவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


அமைச்சர் தரப்பு விளக்கம்:


பெயர் நீக்கம் தொடர்பாக அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தரப்பிடம் கேட்டபோது, அமைச்சருக்கு வேறு சில பணிகள் இருப்பதால், சிம்மக்கல் சாதனை விளக்கக் கூட்டத்தில் பங்கேற்கவில்லை. இதற்கடுத்து நடைபெற உள்ள கூட்டங்களில் அவரது பெயர் இடம்பெறும் என தெரிவிக்கப்பட்டது.


ஆடியோ விவகாரம்:


அண்மையில் அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பேசியதாக ஆடியோ ஒன்று வெளியானது. அதில், ”அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மற்றும் முதலமைச்சர் ஸ்டாலினின் மருமகன் சபரீசன் ஆகியோர், ஒரே ஆண்டில் சட்டவிரோதமாக 30 அயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான சொத்து சேர்த்துள்ளார்கள். திமுகவின் செயல்பாடு சரியில்லை எனவும், ஒருவருக்கு ஒரு பதவி என்ற பாஜகவின் செயல்பாடு எனக்கு மிகவும் பிடித்துள்ளது” என்றும் கூறப்பட்டு இருந்தது. இது தமிழக அரசியலிலும், திமுகவிலும் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது.


அமைச்சர் மறுப்பும், நீக்கமும்:


அந்த ஆடியோவில் இருப்பது தனது குரல் இல்லை எனவும், அண்ணாமலை உள்ளிட்டோர் மலிவான அரசியல் செய்வதாகவும் பழனிவேல் தியாகராஜன் கூறியிருந்தார். இதுபோன்ற செயல்களுக்கு எல்லாம் விளக்கமளிக்க வேண்டிய அவசியமில்லை என முதலமைச்சர் ஸ்டாலினும் கூறியிருந்தார். இந்த நிலையில் தான், திமுக சாதனை விளக்கக் கூட்டத்தின் பேச்சாளர்கள் பட்டியலிலிருந்து, அமைச்சர் பழனிவேல் தியாகராஜனின் பெயர் நீக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் அவர் மீது திமுக தலைமை மறைமுக நடவடிக்கையை எடுக்க தொடங்கியுள்ளதோ என்ற சந்தேகம் எழுந்துள்ளது.