Minister PTR: பிடிஆர்-க்கே இந்த நிலைமையா? சட்டசபைக்கு வந்த சங்கதி? தேர்தல் நேரத்தில் ஸ்டாலினுக்கு புது தலைவலி?

PTR Palanivel Thiagarajan: சட்டசபையில் இன்று அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் தனது அதிருப்தியை வெளிப்படுத்தியதால் திமுக-வின் உட்கட்சி மோதல் அம்பலமாகியுள்ளது.

Continues below advertisement

தமிழக சட்டமன்ற கூட்டத்தொடர் தற்போது விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இந்த நிலையில், இன்று நடந்த கூட்டத்தொடரில் கேள்வி நேரத்தின்போது கூடலூர் சட்டமன்ற தொகுதி உறுப்பினர் பொன் ஜெயஸ்ரீராம், எனது கூடலூர் சட்டமன்ற தொகுதியில் வேலைவாய்ப்புகளை உருவாக்கித் தருவதற்கான எந்த நிறுவனமும் இல்லை. 

Continues below advertisement

சட்டசபையில் ஷாக் தந்த பிடிஆர்:

அதற்கு அருகிலேயே மைசூர் மற்றும் பெங்களூர் உள்ளது. அங்கிருப்பவர்களும் எங்கள் ஊரில் வந்து வேலை செய்யும் வகையில் எங்கள் ஊர் இளைஞர்கள் பயன்பெறும் வகையில் எனது கூடலூர் சட்டமன்ற தொகுதியில் சிறு தகவல் தொழில்நுட்ப பூங்காவை அமைத்து தர அரசு முன்வருமா? என்று கேள்வி எழுப்பினார். 

அதற்கு பதில் அளித்த அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் கூறியதாவது, இந்த கூட்டத்தொடரிலே இந்த அவையில் என்னுடைய துறையில் உள்ள சிக்கல்களை கூறியிருக்கிறேன். நிதியோ மிகவும் குறைவாக ஒதுக்கப்படுகிறது. மற்ற மாநிலங்களைப் போல அனைத்து தகவல் தொழில்நுட்ப பூங்காக்களும் எங்கள் துறையில் செயல்படவில்லை. ஒரு சிறு பங்குதான் எனது துறையில் செயல்படுகிறது. 

டைட்டல், நியோ டைட்டல் தொழில்துறையில் செயல்பட்டு வருகிறது. அது அசாதாரணமான சூழ்நிலையாக இருந்தாலும் அதுதான் 20 ஆண்டுகளாக தமிழ்நாட்டில் இருக்கிறது. அதனால், யாரிடம் நிதியும், திறனும், அதிகாரமும் இருக்கிறதோ அவர் செய்து கொடுப்பார் என்று நம்புகிறேன். எங்களிடம் இல்லை இவ்வாறு அவர் கூறினார். பின்னர், பேசிய சபாநாயகர் முதலமைச்சரிடம் பேசி முடிவு எடுங்கள். பாசிட்டிவாக பதில் சொல்லுங்கள் என்று கூறினார். 

தொடர் அதிருப்தி:

அமைச்சர் பிடிஆர் பாரம்பரியமான திமுக-வைச் சேர்ந்தவர். அதேசமயம் அமெரிக்காவில் மேல்படிப்பு படித்து பொருளாதாரம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் தொலைநோக்கு சிந்தனை கொண்டவராக கட்சியினராலும், பொதுமக்களாலும் கருதப்படுபவர். மு.க.ஸ்டாலின் தலைமையிலான ஆட்சியின் முதல் நிதியமைச்சராக பொறுப்பு வகித்த பிடிஆர் பின்னர் சில காரணங்களால் தகவல் தொழில்நுட்ப துறை அமைச்சராக நியமிக்கப்பட்டார். அப்போது முதலே கட்சியில் சிலரது செயல்பாடுகளில் பிடிஆர் அதிருப்தியில் இருந்ததாக தகவல் வெளியானது. 

இந்த நிலையில், இன்று சட்டசபையிலே தனது துறைக்கு நிதி குறைவாக ஒதுக்கப்படுவதாகவும், யாரிடம் அதிகாரமும், நிதியும், திறனும் இருக்கிறதோ என்று வெளிப்படையாகவே தனது அதிருப்தியை பகிரங்கமாக சட்டசபையில் வெளிப்படுத்தி வருகிறார். 

திமுக-விற்கு பின்னடைவு:

பிடிஆரிடம் இருந்து நிதித்துறை பறிக்கப்பட்டது அவரது ஆதரவாளர்கள் மட்டுமின்றி பொதுமக்கள் பலருக்குமே அதிருப்தியை ஏற்படுத்தியிருந்தது. பிடிஆர் இன்று மறைமுகமாக குறிப்பிட்டது தற்போதைய நிதி அமைச்சர் தங்கம் தென்னரசையே குறிப்பிட்டிருப்பதாகவும் பலரும் தெரிவிக்கின்றனர். 

அடுத்தாண்டு சட்டசபைத் தேர்தல் நெருங்கும் நேரத்தில் திமுக-வினர் மீது பல்வேறு விமர்சனங்களை எதிர்க்கட்சிகள் அடுக்கி வருகின்றன. இதில் அவ்வப்போது சில அமைச்சர்கள் சர்ச்சைக்குரிய வகையில் பேசியும் கட்சிக்கு பின்னடைவை ஏற்படுத்தி வருகின்றனர். இந்த நிலையில், பிடிஆர் சட்டசபையிலே தனது அதிருப்தியை வெளிப்படுத்தியிருப்பதும் திமுக-விற்கு பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது. 

நிர்வாகிகள் வேதனை:

ஆளுங்கட்சியில் உள்ள அமைச்சர்களின் துறைக்கே போதிய நிதி ஒதுக்காத இந்த அரசு, மற்ற உறுப்பினர்களுக்கும், எதிர்க்கட்சி தொகுதி உறுப்பினர்களின் தொகுதிக்கும் எப்படி நிதி ஒதுக்கும்?என்று எதிர்க்கட்சியினர் கேள்வி எழுப்பியுள்ளனர். மேலும் சட்டமன்ற தேர்தல் நெருங்கும் சமயத்தில் கட்சியின் மூத்த தலைவர்கள் அதிருப்தியுடன் இருப்பதும் கட்சிக்கு பின்னடைவை ஏற்படுத்தும் என்று திமுக நிர்வாகிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.  மேலும், தேர்தலுக்கு முன்பு கட்சிக்குள்ளே இருக்கும் உட்கட்சி பூசல், மூத்த நிர்வாகிகள் இடையேயான சிக்கல் ஆகியவற்றை கட்சித் தலைமை சரி செய்ய வேண்டும் என்ற கோரிக்கை வலுவாக எழுந்துள்ளது. roif

Continues below advertisement
Sponsored Links by Taboola