விழுப்புரம்: தமிழகத்தில் உயர்கல்வியில் சென்றாண்டைவிட இந்தாண்டு 27 சதவிகிதம் உயர்ந்துள்ளதாகவும், மத வேறுபாடுகள் ஜாதிய வேறுபாடுகள் இருக்க கூடாது என்பதற்காக தான் கோவில்களில் அனைத்து ஜாதியினரும் அர்ச்சராக நியமிக்கப்பட்டுள்ளதாக பொன்முடி தெரிவித்துள்ளார்.
விழுப்புரம் புதிய பேருந்து நிலையம் அருகிலுள்ள நகராட்சி திடலில் விழுப்புரம் மாவட்டத்திலேயே முதல் முறையாக புத்தக திருவிழாவை அமைச்சர்கள் பொன்முடி, செஞ்சி மஸ்தான் இன்று தொடங்கி வைத்தனர். இன்று தொடங்கிய புத்தக திருவிழாவானது வருகின்ற 5 ஆம் தேதி வரை நடைபெறுவதால் 100 அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன. புத்தக திருவிழாவினை தொடங்கி வைத்த அமைச்சர் பொன்முடி அரங்குகளில் வைக்கப்பட்டிருந்த பெரியார் மற்றும் கலைஞர் கருணாநிதியின் புத்தகங்களை தேடி ஆர்வத்துடன் வாங்கி சென்றார். அதனை தொடர்ந்து புத்தக திருவிழாவினை தொடங்கி வைத்து பேசிய அமைச்சர் பொன்முடி தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் மாணவர்கள் அனைவரும் கல்வி அறிவினை பெற வேண்டும் என்பதால் தமிழகம் முழுவதுமுள்ள மாவட்டந்தோறும் புத்தக திருவிழா நடத்தி வரப்படுகிறது.
விழுப்புரம், திண்டிவனம், செஞ்சி நகர பகுதியில் நூலகம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படுமென்றும், எங்கு நூலகம் இருந்தாலும் பள்ளி கூடங்களில் நூலகம் இருக்க வேண்டும் என அமைச்சர் தெரிவித்தார். அதனை தொடர்ந்து பேசிய அமைச்சர் பொன்முடி மத வேறுபாடுகள் ஜாதிய வேறுபாடுகள் இருக்க கூடாது என்பதற்காக தான் கோவில்களில் அனைத்து ஜாதியினரும் அர்ச்சராக முதலமைச்சர் ஸ்டாலின் பணியமர்த்தியதாகவும் இது தான் திராவிட மாடல் ஆட்சி எனக் கூறினார். தமிழகத்தில் உயர்கல்வியில் சென்றாண்டைவிட இந்தாண்டு 27 சதவிகிதம் உயர்ந்துள்ளதாகவும், மாணவர்கள் டிஎன்பிஎஸ்சி தேர்வுகளை எழுத வேண்டும் அதற்காக பள்ளி பருவத்திலேயே பொது அறிவு திறனை புத்தகம் படித்து வளர்த்து கொள்ள வேண்டும் என தெரிவித்தார்.
தமிழகத்திலுள்ள மாணவர்கள் ஐஏஎஸ், ஐ பிஎஸ் படிப்பவர்களுக்கு 7500 ரூபாய் நிதி உதவி திட்டத்தினை துவக்கி வைத்துள்ளதாகவும், ஆசிரியர்கள் நூலகத்திற்கு சென்று புத்தகங்களை பயில வேண்டும் அப்போது தான் மாணவர்கள் நூலகம் செல்ல அவர்கள் அறிவுறுத்துவார்கள் என்றும் இளைஞரை வழிநடத்த வேண்டும் என்பதால் தான் இளைஞரான உதய நிதி ஸ்டாலினை விளையாட்டு துறை அமைச்சராக ஸ்டாலின் நியமித்திருப்பதாக பொன்முடி கூறினார்.
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்