Tamilnadu Ministry: அமைச்சர் காந்தியின் பொறுப்பில் உள்ள கதர் மற்றும் கிராமத் தொழில்கள் வாரியம், அமைச்சர் ராஜகண்ணப்பனுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
உயர்கல்வித்துறை அமைச்சராக பதவியேற்ற பொன்முடி:
திமுகவைச் சேர்ந்த திருக்கோவிலூர் எம்.எல்.ஏவான பொன்முடிக்கு அமைச்சராக இன்று பதவிப் பிரமாணம் செய்து வைத்தார் ஆளுநர் ஆர்.என்.ரவி. உச்சநீதிமன்ற அறிவுறுத்தலை ஏற்றி, பொன்முடிக்கு ஆளுநர் ரவி பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். அவர் ஏற்கனவே வகித்து வந்த உயர்கல்வி அமைச்சர் பதவி மீண்டும் அவருக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.
இதனிடயே, உயர்கல்வி அமைச்சர் பொறுப்பை கூடுதலாக கவனித்து வந்த, பிற்படுத்தப்பட்டோர் நல அமைச்சர் ராஜகண்ணப்பனுக்கு, தற்போது கதர் மற்றும் கிராம தொழில் வாரியம் ஒதுக்கப்பட்டுள்ளது. அமைச்சர் காந்தியின் பொறுப்பில் உள்ள கதர் மற்றும் கிராமத் தொழில்கள் வாரியம், அமைச்சர் ராஜகண்ணப்பனுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. முதலமைச்சர் ஸ்டாலின் பரிந்துரையை ஏற்று, அவருக்கு இந்த பொறுப்பை வழங்குவதாக, ஆளுநர் ரவி தெரிவித்துள்ளார்.
பொன்முடி வழக்கு என்ன?
கடந்த 2006ம் ஆண்டு முதல் 2011ம் ஆண்டு வரையிலான தி.மு.க ஆட்சியில் உயர்கல்வி மற்றும் கனிமவளத்துறை அமைச்சராக பொன்முடி பொறுப்பு வகித்த காலகட்டத்தில் வருமானத்திற்கு அதிகமாக ரூபாய் 1.72 கோடி சொத்து சேர்த்ததாக பொன்முடி மற்றும் அவரது மனைவி விசாலாட்சி மீதும் குற்றச்சாட்டு வைக்கப்பட்டது.
இதனால், 2011ஆம் ஆண்டு பொன்முடி மற்றும் விசாலாட்சி மீது விழுப்புரம் மாவட்ட லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். விசாரணையின் முடிவில் குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்படாததால், கடந்த 2016ம் ஆண்டு இருவரையும் விழுப்புரம் மாவட்ட ஊழல் தடுப்பு சிறப்பு நீதிமன்றம் விடுவித்தது.
இதையடுத்து, கடந்த 2017ஆம் ஆண்டு சென்னை உயர்நீதிமன்றத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை மேல்முறையீடு செய்தது. இந்த வழக்கு 2023 ஆம் ஆண்டு விசாரணைக்கு வந்த போது பொன்முடிக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்தது. இதனைத் தொடர்ந்து அவர் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர். வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம் சென்னை உயர்நீதிமன்றம் வழங்கிய 3 ஆண்டுகள் சிறை தண்டனையை நிறுத்திவைத்தது.
இதற்கு முன், சென்னை உயர்நீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில் அமைச்சராக இருந்த பொன்முடி அமைச்சர் பதவி இழந்த நிலையில் உச்சநீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில் பொன்முடி மீண்டும் எம்.எல்.ஏ ஆனார். இதனைத் தொடர்ந்து அவருக்கு அமைச்சராக பதவி பிரமாணம் செய்து வைக்க ஆளுநருக்கு முதலமைச்சர் கடிதம் எழுதினார்.
ஆனால் தண்டனை நிறுத்து வைக்கப்பட்டுள்ளதே தவிர அவர் குற்றமற்றவர் என தீர்ப்பு வரவில்லை என கூறி பதவி பிரமாணம் செய்து வைக்க மறுத்தார். இது தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தபோது, உச்ச நீதிமன்றம் ஆளுநரை கடுமையாக சாடியது. எனவே, உச்ச நீதிமன்றத்தின் அறிவுறுத்தலின்படி, இன்று பொன்முடிக்கு பதவி பிரமாணம் செய்து வைத்தார் ஆளுநர் ஆர்.என்.ரவி.