சுதந்திரப் போராட்டம் வீரர்கள் பற்றிய ஆளுநரின் விமர்சனத்துக்கு அமைச்சர் பொன்முடி கண்டனம் தெரிவித்துள்ளார். 


உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி, ஆளுநர் ரவி சுதந்திரப் போராட்டம் வீரர்கள் தொடர்பாகக் கூறிய கருத்துகள் பற்றி சென்னை தலைமைச் செயலகத்தில் இன்று செய்தியாளர்களை சந்தித்துப் பேசினார்.


அப்போது அவர் கூறியதாவது:


''சுதந்திரப் போராட்ட வீரர்களைத் தமிழகம் நினைவுகூரத் தவறியதாக, தமிழக சுதந்திரப் போராட்ட வரலாற்றையே தெரிந்தவர்போல கருத்துக் கூறியுள்ளார். அதற்கான பதிலையும் எம்.பி. டி.ஆர்.பாலு கூறியுள்ளார். 


தமிழக சுதந்திரப் போராட்ட வீரர்கள் மீது அக்கறையுள்ளது போலப் பேசுகிறார். உண்மையிலேஎயே அவர்கள் மீது அக்கறை இருக்குமானால், மதுரை பல்கலைக்கழகத்தின் ஆட்சி மன்றக் குழு மற்றும் ஆட்சி மன்றப் பேரவைக் குழுவால் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்துக்கு ஏன் ஒப்புதல் அளிக்கவில்லை? தியாகி சங்கரய்யாவுக்கு ஏன் கவுரவ டாக்டர் பட்டம் வழங்க ஒப்புதல் அளிக்கவில்லை?


மிகச் சிறந்த சுதந்திரப் போராட்டத் தியாகியும், இந்திய சுதந்திரப் போராட்டத்தில் கிட்டத்தட்ட 8 ஆண்டுகளை சிறையில் கழித்தவரும், நூறு வயதைக் கடந்தவரும், ஏழை எளிய மக்களுக்காக தம் வாழ்நாளை அர்ப்பணித்தவரும், தமிழினத்தின் வளர்ச்சிக்காக உழைத்தவருமான சங்கரய்யாவுக்கு ஒப்புதல் அளிக்காதது ஏன்? அவரை கவுரவிக்கும் வகையில் தமிழக அரசு தகைசால் விருது சங்கரய்யாவிற்கு வழங்கப்பட்டது. 


இனிமேலாவது ஆளுநர் தனது போக்கை மாற்றிக் கொண்டு தியாகி சங்கரய்யாவுக்கு கவுரவ டாக்டர் பட்டம் வழங்க ஒப்புதல் அளிக்க வேண்டும். மதுரையில் 2 ஆம் தேதி பட்டமளிப்பு விழா நடைபெற உள்ளது. அன்றே அவருக்கு கௌரவ பட்டம் வழங்குவதற்கான கோப்புகளில் ஆளுநர் கையெழுத்து இடவேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.''


இவ்வாறு அமைச்சர் பொன்முடி பேசினார்.


தொடரும் மோதல் போக்கு


தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவிக்கும், ஆளும் திமுக அரசுக்கும் இடையே தொடர்ந்து மோதல் போக்கு நிலவி வருகிறது. சட்டப்பேரவையில் ஆளுநருக்கு எதிராக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தீர்மானமே கொண்டு வந்தார். இதற்கிடையே ஆளுநர் தொடர்ந்து சமூக நிதி, சாதி, தீண்டாமை, உள்ளிட்ட விவகாரங்களில் தமிழக அரசை தொடர்ந்து  விமர்சித்து வருகிறார்.


இந்த நிலையில், சுதந்திரப் போராட்ட வீரர்களைத் தமிழகம் நினைவுகூரத் தவறியதாக அண்மையில் தெரிவித்தார். தொடர்ந்து சுதந்திர போராட்ட வீரர்கள் சாதித் தலைவர்களாக சித்தரிக்கப்படுவது வருத்தம் தருவதாகவும் சுதந்திரம் வேண்டாம் என்று சொன்னவர்களும் சுதந்திர தினத்தை கருப்பு நாள் என்று சொன்னவர்களும் தமிழ்நாட்டில்தான் இருக்கிறார்கள் எனவும் ஆளுநர் கூறியிருந்தார்.


இதற்கு திமுக பொருளாளரும் நாடாளுமன்றக் குழுத் தலைவருமான டி.ஆர்.பாலு கண்டனம் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது. தொடர்ந்து அவர் வெளியிட்ட அறிக்கையில், ’’விடுதலை வீரர்களைப் போற்றிப் பாராட்டுவதில் திமுக அரசு யாருக்கும் சளைத்தது அல்ல.


* மாவீரன் பூலித்தேவனுக்கு, நினைவு மண்டபம்!


* பாஞ்சாலங்குறிச்சியில், வீரபாண்டிய கட்டபொம்மனுக்குக் கோட்டை!


* மாவீரன் சுந்தரலிங்கம் வாரிசுகளுக்கு வீடு!


* பாரதியின் வீடு, அரசு இல்லம் ஆனது!


* பெருந்தலைவர் காமராசருக்கு, மணிமண்டபம்!


* மூதறிஞர் இராஜாஜிக்கு, நினைவாலயம்!


* தில்லையாடி வள்ளியம்மாளுக்கு, மணிமண்டபம்!


* வீரவாஞ்சியின் உறவினருக்கு, நிதி!


* வ.உ.சி. இழுத்த செக்கு, நினைவுச் சின்னம் ஆனது!


* விடுதலைப் போராட்ட வீரர்களுக்கு, இலவசப் பேருந்து பயணம்!


* தியாகிகளுக்கு, மணிமண்டபம்!


* விடுதலைப் பொன்விழா நினைவுச் சின்னம்!


* தியாகி விஸ்வநாத தாஸ் வாழ்ந்த இல்லம் புதுப்பிப்பு!


* நேதாஜிக்கு சுபாஷ் சந்திர போஸூக்குச் சிலை!


*  தியாகி கக்கனுக்குச் சிலை!


* சிப்பாய் கலகத்துக்கு நினைவுத்தூண்!’’


என்று டி.ஆர்.பாலு பட்டியலிட்டு இருந்தார்.