Min. Periyakaruppan on RBI Rules: கூட்டுறவு வங்கியில நகைக்கடன் வாங்கியிருக்கீங்களா.? உங்களுக்கு நிம்மதியான செய்தி, இத படிங்க
கூட்டுறவு வங்கிகளில் நகைக்கடன் வாங்கியவர்களுக்கு நிம்மதியா தகவல் ஒன்றை அமைச்சர் பெரியகருப்பன் தெரிவித்துள்ளார். அது என்ன தெரியுமா.?

நகைக் கடன் தொடர்பாக ரிசர்வ் வங்கி கொண்டுவரும் கட்டுப்பாடுகள் மாநில கூட்டுறவு வங்கிகளுக்கு பொருந்தாது என அமைச்சர் பெரியகருப்பன் தெரிவித்துள்ளார். சென்னையில் நடைபெற்ற கூட்டுறவுத் துறை அதிகாரிகளுடனான ஆய்வுக் கூட்டத்திற்குப்பின் பேசி அவர் இதனை தெரிவித்தார்.
கூட்டுறவுத்துறை ஆய்வுக் கூட்டத்திற்குப் பின் அமைச்சர் கூறியது என்ன.?
சென்னை தலைமைச் செயலகத்தில் கூட்டுறவு துறை அதிகாரிகள் உடனான ஆய்வுக் கூட்டத்திற்கு பின் அமைச்சர் பெரியகருப்பன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, சட்டப்பேரவையில் கூட்டுறவுத்துறை சார்பில் 49 அறிவிப்புகளை வெளியிட்டதாகவும், அதன் நிலைகள் குறித்து ஆலோசிக்கப்பட்டதாகவும் கூறினார். மேலும், 8 ஆயிரம் சதுர அடியில் தீவுத்திடல் அருகே புதிய கட்டிடம் கட்டவும், அதில் கூட்டுறவு வங்கி, நியாய விலைக் கடை ஆகியவை அமைக்க திட்டமிடப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.
அதேபோல், 1 லட்சத்து 10 ஆயிரம் கோடி ரூபாய் அளவில் வங்கிப் பரிவர்த்தனை மேற்கொள்ள இலக்கு நிர்ணயிக்கப்பட்டு, சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருவதாக கூறிய அவர், விவசாயிகளுக்கு பயிர்க் கடன் மட்டுமல்லாமல், புதிய கால்நடைகள் வாங்க அதிக அளவில் கடன் வழங்கப்பட்டு வருவதாகவும், இந்தாண்டு பயிர்க் கடன் வழங்க 17,000 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டு, பயனாளர்களுக்கு வழங்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக அமைச்சர் பெரியகருப்பன் தெரிவித்தார்.
மேலும், இதுவரை 12,000 நபர்கள் கூட்டுறவுத் துறைகளில் பணியில் அமர்த்தப்பட்டுள்ளதாக கூறிய அவர், காலிப் பணியிடங்கள் இல்லாத நிலையில், அதை உருவாக்க அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருவதாகவும் திட்டவட்டமாக கூறினார்.
“ரிசர்வ் வங்கியின் கட்டுப்பாடு கூட்டுறவு வங்கிக்கு பொருந்தாது“
தொடர்ந்து பேசிய அவர், நகைக் கடன் தொடர்பாக மத்திய அரசு கொண்டு வரும் கட்டுப்பாடுகள், மாநில கூட்டுறவு வங்கிகளை பாதிக்காது என்றும், தொடக்க வேளாண்மை கடன் வங்கிகள், ரிசர்வ் வங்கியின் கட்டுப்பாட்டின் கீழ் வருவது இல்லை, அதனால் மத்திய அரசு கொண்டுவரும் நகைக்கடனுக்கான புதிய விதிமுறைகள், கூட்டுறவு வங்கிகளுக்கு பொருந்தாது எனவும் தெரிவித்தார்.
கூட்டுறவுத் துறை சார்பில் 60 பெட்ரோல் நிலையங்கள் செயல்பட்டு வரும் நிலையில், மேலும் 35-லிருந்து 40 பெட்ரோல் நிலையங்கள் அமைக்கும் பணிகள் நடைபெறுவதாக அமைச்சர் பெரியகருப்பன் கூறினார்.
அமைச்சரின் இந்த தகவல், கூட்டுறவு வங்கிகளின் நகைக் கடன் வாங்கியுள்ள ஏழை, நடுத்தர மக்களுக்கு நிம்மதியான ஒரு செய்தியாக அமைந்துள்ளது.





















