மதுரையில் மின்சாரத்துறை அமைச்சர் நிர்மல் குமார் பங்கேற்ற நிகழ்ச்சியில் மின் தடை ஏற்பட்ட நிலையில், தற்போது அதுதொடர்பாக அவரே விளக்கமளித்துள்ளார். 

Continues below advertisement

தவெக ஆட்சி அமைந்த சில மாதங்களில் தமிழ்நாட்டில் கடுமையான மின் வெட்டு ஏற்பட்டு வருகிறது. முக்கியமாக இரவில் பல மணி நேரங்கள் மின் வெட்டு ஏற்படுவதால், பொதுமக்கள் மிகவும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். காலநிலை மாற்றத்தால், செப்டம்பரில் மாதத்திலும் அதிக வெப்பம் நிலவுவதால், மின் நுகர்வு அதிகமாகின்றன. இதுவும் ஒரு காரணமாக சொல்லப்படுகிறது. தமிழ்நாடு மட்டுமல்லாமல், கேரளா, கர்நாடகாவிலும் தொடர் மின்வெட்டு ஏற்படுகிறது. சமீபத்தில், கேரளாவில் தொடர் மின்வெட்டால், அம்மாநிலத்தின் முதலமைச்சர் சதீஷனின் ஏஐ வீடியோ ஒன்று வெளியாகி நாடு முழுவதும் பேசுப்பொருளாகியது.

 

Continues below advertisement

முதலமைச்சர் விஜய் நேரில் ஆய்வு

சில தினங்களுக்கு முன்பு, தமிழ்நாட்டில் சீரான மின் விநியோகத்தை உறுதி செய்யும் வகையில், சென்னை அண்ணாசாலையில் உள்ள மின்வாரிய தலைமையகமான மின்னகத்தில் முதலமைச்சர் விஜய் நேரில் ஆய்வு மேற்கொண்டார். பொதுமக்களுக்கு தடையற்ற மற்றும் சீரான மின்சாரம் கிடைப்பதை அதிகாரிகள் உறுதி செய்ய வேண்டும் என்று முதலமைச்சர் உத்தரவிட்டிருந்தார்.

மின்சாரத்துறை அமைச்சர் விழாவில் மின் தடை

இந்த நிலையில், மதுரையில் உள்ள சட்டக்கல்லூரியில் இன்று நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில் அமைச்சர் நிர்மல் குமார் கலந்துகொண்டார். இந்த விழாவில் சிறப்பு விருந்திரான உயர்நீதிமன்ற நீதிபதி ஜெகதீஷ் சந்திரா பேசிக்கொண்டிருந்தார். அப்போது, திடீரென மின்சாரம் தடைப்பட்டது. சில வினாடிகளில் மீண்டும் மின்சாரம் வந்து, நிகழ்ச்சி வழக்கம்போல் நடைபெற்றது. 

இந்த விழா முடிந்தபின் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் நிர்மல் குமார், மின்வெட்டு தொடர்பான பிரச்னைகள் சீரமைக்கப்பட்டு வருகின்றன. இன்னும் 3 மாதங்களில் மின்வெட்டு முழுமையாக சரி செய்யப்படும். மின்துறையில் எங்கெங்கு தவறுகள் உள்ளனவோ அவை அனைத்தும் சரி செய்யப்பட்டு வருவதாக தெரிவித்தார்.

அமைச்சர் கொடுத்த விளக்கம்

மின்சாரத் துறை அமைச்சர் பங்கேற்ற நிகழ்ச்சிலேயே மின் தடை ஏற்பட்டதால் பெரும் விமர்சனங்கள் எழுந்தன. இந்த நிலையில், இதுகுறித்து அமைச்சர் விளக்கமளித்துள்ளார். இதுதொடர்பாக அவர் தனது எக்ஸ் தளப்பக்கத்தில், ‘நிகழ்ச்சி நடைபெற்ற இடத்திற்கு ஜெனரேட்டர் மூலம் மின்சாரம் வழங்கப்பட்டது. ஒரு ஜெனரேட்டரில் இருந்து மற்றொரு ஜெனரேட்டருக்கு மாற்றப்பட்டபோது, 5 விநாடிகள் மட்டுமே மின் தடை ஏற்பட்டது’ என்று பதிவிட்டுள்ளார்.