திருச்சி சத்திரம் பேருந்து நிலையம் அருகில் உள்ள கலைஞர் அறிவாலயத்தில் திருச்சி மத்திய  மாவட்ட செயல் வீரர்கள் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் நகராட்சி நிர்வாக துறை அமைச்சர் கே.என்.நேரு மற்றும் பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் திருச்சி மாநகராட்சி மேயர் அன்பழகன் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள், கட்சியின் மூத்த முக்கிய நிர்வாகிகள், தொண்டர்கள் வார்டு உறுப்பினர்கள், பகுதி செயலாளர்கள் என அனைவரும் கலந்து கொண்டனர். 


இந்த கூட்டத்தில் மேடையில் பேசிய அமைச்சர் நேரு, ”வெட்கத்தை விட்டு கூறுகிறேன், தமிழ்நாட்டில் உள்ள அதிகாரிகள் மத்திய அரசுக்கு பயப்படுகிறார்கள் . அதிமுகவை பிரித்து வைத்திருப்பது பாஜக தான். ஏனென்றால் அவர்கள் இணைந்தால் இவர்களால் நினைத்த தொகுதிகளை பெற முடியாது. ஆகையால் அவர்களை இணைய விடாமல் இருந்தால் நாம் எதிர்பார்த்த இடங்களை பெற்றுக் கொள்ளலாம் என நினைத்து தான் பாஜக செயல்பட்டு வருகிறது. திருச்சி மாவட்டத்தில் பகுதிவாரியாக பூத் கமிட்டிகள் அமைத்து புதிய உறுப்பினர்கள் சேர்த்து களப்பணி ஆற்ற வேண்டும்.


வருகின்ற தேர்தலில் பாஜக இரண்டாவது இடத்தையாவது பிடிக்க வேண்டும் என முனைப்போடு செயல்பட்டு கொண்டிருக்கிறார்கள். ஆகையால் நாம் விரைவாகவும் உண்மையாகவும் தீவிரமாக செயல்பட வேண்டிய கட்டாயத்தில் உள்ளோம். கடந்த ஆட்சி காலத்தில் கடுமையான நிதி சுமையில் தள்ளிவிட்டு சென்று விட்டார்கள். அதிலிருந்து படிப்படியாக மீண்டு வருகிறோம். விரைவில் அனைத்து திட்டங்களையும் தமிழகத்தில் நிறைவேற்றி விடுவோம் என முதலமைச்சர் அவர்கள் கூறியிருக்கிறார். திருச்சி மாவட்டத்தை வளர்ச்சி பாதையில் கொண்டு செல்வதற்கு அனைத்து திட்டங்களையும் செயல்படுத்த நாங்கள் முனைப்போடு இருக்கிறோம் ஆனால் தொண்டர்களாகிய நீங்கள் நிர்வாகிகள் தான் கட்சி வளப்படுத்த உழைக்க வேண்டும.


அதிமுக - திமுக இடையே போட்டி நிலவியது. ஆனால் தற்போது அனைத்து அதிகாரங்களையும் தன் வசம் வைத்துள்ள பாஜகவிடம் போட்டி போட்டு வெல்ல வேண்டும் என கட்டாயத்தில் உள்ளோம். 


இந்த கூட்டம் முக்கிய  நோக்கம் வரும் 4 ஆம் தேதி தமிழ்நாடு முதல்வர் திருச்சி வருகிறார். அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்க வேண்டும். திருச்சியில் காகித தொழிற்சாலையை தொடங்கி வைக்கிறார். பின்பு  தொடர்ந்து அரியலூர் மற்றும் பெரம்பலூர் மாவட்டங்களில் நடைபெற உள்ள நிகழ்ச்சியில் பங்கேற்க  இருக்கிறார்.  அதன் பிறகு சென்னை செல்கிறார்” என்றார்.




தமிழ்நாட்டில் திருச்சியில் தான் அனைத்து அனைத்து இடங்களையும் திமுக வென்றுள்ளது என குறிப்பிட்ட அவர், “சிறிய தவறுகளை கூட ஊதி பெரிதாகிக் கொண்டிருக்கிறார்கள் பாஜக சேர்ந்தவர்கள். அவர்கள் இந்த ஆட்சிக்கு அவப்பெயர் ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கத்துடன் தொடர்ந்து செயல்பட்டு வருகிறார்கள். இங்கே இருக்கும் எதிர்க்கட்சி அதிமுக இன்றைக்கு பிளவு பட்டுள்ளது. ஆகையால் அதிமுக இருக்கும் இடத்தை பிடித்து விட வேண்டும் என்பதற்காக அவர்களை ஒன்று சேர விடாமல் பாஜக செயல்பட்டு வருகிறது” என்றார்.




தற்போது திமுக எந்த அளவிற்கு பலமாக உள்ளதோ வருங்காலத்தில் இதோடு இன்னும் பலமாக இருக்க வேண்டும். அதற்கு நாம் அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் 40க்கு 40 இடங்களை திமுக கைப்பற்ற வேண்டும். அதற்கு அனைவரும் நாம் உழைக்க வேண்டும். திருச்சி என்ன நினைக்கிறதோ அதுதான் தமிழ்நாட்டின் நடக்கும். திருச்சி சரியாக இருந்தால் தமிழ்நாடு சரியாக இருக்கும். கட்சியில் இருக்கும் நிர்வாகிகளுக்கு சில சில சங்கடங்கள் இருந்தாலும் அவற்றை சரி செய்யும் வகையில் அனைத்து நடவடிக்கையும் விரைவில் எடுக்கப்படும்” என குறிப்பிட்டு தனது உரையை முடித்தார்.