தருமபுரியில் தமிழ்நாடு அரசு சார்பில் ’நான் முதல்வன் - கல்லூரிக் கனவு’ என்ற மாணவர்களுக்கு வழிகாட்டும் நிகழ்ச்சி அரசு கலைக் கல்லூரியில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் வேளாண் மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் கலந்து கொண்டு மாணவர்களுக்கு உயர்கல்விக்கு வழிகாட்டு கையேட்டினை வழங்கினார்.


தொடர்ந்து இந்த விழாவில் அமைச்சர் பன்னீர்செல்வம் பேசியவை பின்வருமாறு:


”மாணவர்களின் உயர்கல்வியில் நல்ல வாய்ப்புகளை ஏற்படுத்தும் வகையில் தமிழ்நாடு அரசு ’நான் முதல்வன் கல்லூரி கனவு’ என்னும் நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறது. இது போன்ற நிகழ்ச்சிகள் மாணவர்களின் வாழ்வில் திருப்புமுனையாக அமையும், நல்ல வாய்ப்பாகவும் அமையும்.


முதலமைச்சரின் நோக்கம்


தமிழ்நாடு முதலமைச்சர் மாணவர்களின் எதிர்காலத்தின் மீது மிகுந்த அக்கறை கொண்டு அவர்கள் அனைத்து துறையிலும் மாணவர்கள் முதல்வனாகத் திகழ வேண்டும் என்ற உன்னத நோக்கில் இந்த நிகழ்ச்சிகளை நடத்த உத்தரவிட்டுள்ளார்.




கல்வியில் முதல்வன், அறிவாற்றலில் முதல்வன், படைப்புத்திறனில் முதல்வன் என சமத்துவமாக மற்றவர்கள் மதிக்கத்தக்க வகையில் மாணவர்கள் விளங்க வேண்டும். குறிப்பாக அனைவரும் பின்பற்றும் பண்பைக் கொண்ட மாணவனாக விளங்க வேண்டும்.


அனைவரையும் வழிநடத்தும் தலைமைத் திறன் கொண்டவராக மாணவர்கள் உயர வேண்டும். இதுபோன்ற உன்னத நோக்கங்களைக் கொண்டு நான் முதல்வன் என்ற தலைப்பில் இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன.


பெற்றோர் மாணவர்களை கட்டாயப்படுத்தக்கூடாது


இந்த உயர்கல்விக்கு வழிகாட்டும் நிகழ்ச்சிகளை மாணவ, மாணவியர் சிறந்த முறையில் பயன்படுத்திக் கொண்டு உயர்கல்வியைப் பெற வேண்டும். தருமபுரி மாவட்டம் பொருளாதாரத்தில் பின்தங்கிய மாவட்டம் என்ற பெயரில் இருந்தாலும், இந்த மாவட்டத்தில் அரசு பள்ளிகளில் பயின்று இந்திய ஆட்சிப் பணி, இந்தியக் காவல்துறை பணி உள்ளிட்ட உயர் பணிகளில் பலர் சென்றுள்ளனர்.


மாணவர்களுக்கு வழிகாட்டும் இந்த நிகழ்ச்சியில் எட்டு தலைப்புகளில் சிறந்த பேராசிரியர்கள் உயர் கல்வி வாய்ப்புகள் குறித்து உரையாற்ற உள்ளனர். அனைத்து மாணவ மாணவிகளும் இந்நிகழ்ச்சியை பயன்படுத்தி எதிர்காலத்தில் தாங்கள் தேர்ந்தெடுக்கும் துறைகளில் முதல்வனாக வர வேண்டும்.




உயர்கல்வியில் மாணவர்கள் தேர்ந்தெடுக்கும் துறைகளை பெற்றோர்கள் ஏற்றுக் கொள்வது சிறந்தது. கட்டாயப்படுத்தி மாணவர்களின் விருப்பமின்றி உயர்கல்வியில் அவர்களை சேர்ப்பது சரியாக அமையாது” என்றார்.


செவித்திறன் குறைபாடு கொண்ட மாணவர்களுக்கு சிறப்பு ஏற்பாடு


மேலும் இந்த நிகழ்ச்சியில் செவித்திறன் குறைபாடுடைய மாணவர்கள் கலந்து கொண்டதால், இந்த நிகழ்ச்சியின் முக்கியத்துவத்தை செவித்திறன் குறைபாடுடையவர்கள் புரிந்து கொள்ளும் வகையில், ஆசிரியர் ஒருவரை வைத்து மொழிப்பெயர்ப்பும் (சைகை மூலம்) செய்யப்பட்டது.


இந்த நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் கி.சாந்தி, கல்வித்துறை அதிகாரிகள், ஆசிரியர்கள், மாணவ, மாணவிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.