Minister Mano Thangaraj : சென்னை அம்பத்தூர் பால் பண்ணையில் சிறார்கள் பணி அமர்த்தப்படவில்லை என்று பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ்  தெரிவித்துள்ளார்.


சிறார் தொழிலாளர்களா? 


சென்னை அம்பத்தூரில் செயல்பட்டு வரும் ஆவின் நிறுவனத்தில் சுமார் 30-க்கும் மேற்பட்ட சிறார் தொழிலாளர்கள் பணியமர்த்தப்பட்டதாக புகார் எழுந்தது. சிறார்களை வேலைக்கு அமர்த்தியதும் மட்டுமின்றி அவர்களுக்கு ஊதியமும் வழங்கவில்லை என்றும் குற்றச்சாட்டு எழுந்தது. இதனால் பால் பண்ணை நுழைவாயில், வேலையை வாங்கிக் கொண்டு ஊதியம் வழங்கவில்லை என்று கூறி 30 சிறார்கள் நேற்று போராட்டத்தில் குதித்துள்ளதாக தகவல் வெளியாகியது. 


 அம்பத்தூர் ஆவின் நிறுவனத்தில் ஊழியர் பற்றாக்குறை காரணமாக அங்கு நடக்கும் அனைத்து பணிகளும் தாமதாக நடைபெறுவதாக கூறப்படுகிறது. இதானால் சிறார்களை வேலைக்கு அமர்த்தியதாக பரவலாக புகார் எழுந்தது. அரசு நிறுவனத்திலேயே சிறார் தொழிலாளர்கள் பணியமர்த்தப்பட்டதாக கூறப்பட்டது பெரும் சர்ச்சையை கிளப்பி உள்ளது.


அமைச்சர் விளக்கம்


இந்நிலையில், பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ்  இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது, ”சென்னை அம்பத்தூர் பால் பண்ணையில் சிறார்கள் பணி அமர்த்தப்படவில்லை. குறைந்த ஊதியத்தில் சிறார்களை பணிக்கு அமர்த்தியதாக வந்த தகவல் முற்றிலும் புறம்பானது” என்றும் தெரிவித்துள்ளார்.


”ஆவினில் ஒப்பந்த தொழிலாளர்களுக்கும் ESI, PF வழங்க நடவடிக்கை எடுத்துள்ளோம். ஒப்பந்த தொழிளார்களின் சம்பளத்தை நிச்சயமாக அவர்களது வங்கிக் கணக்கில் செலுத்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இப்படி இருக்கக் கூடிய நிலையில் தான் அம்பத்தூர் ஆவினில் சிறார்கள் பணியில் அமர்த்தப்பட்டதாக புகார் வந்தது முற்றிலும் உண்மையாக புறப்பானது. அதற்கான ஆவணங்கள் எங்களிடம் உள்ளது. இந்த செய்தி வெளியில் வந்ததும் நிறுவனத்திற்கு சென்று விசாரணை நடத்தப்பட்டது. இந்த விசாரணையில் தான் சிறார்கள் பணியில் அமர்த்தப்படாதது தெரியவந்தது” என்றார். 


மேலும், ஒரு தனிநபர் போராட்டத்தை முன்னெடுப்பதற்கு தன்னுடைய உதவிக்கு ஒரு சில இளைஞர்களை அழைத்து வந்ததும், அவருக்கு அவரை பணியமர்த்திய நிறுவனத்திற்கும் சம்பள பிரச்சனை இருப்பதும் கண்டறியப்பட்டுள்ளது.  எனவே ஆவின் பெயருக்கு கலங்கம் விளைவித்ததற்காக இன்றைக்கு சம்பந்தப்பட்ட நபருக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. அதேபோன்று சிறார்கள் தொடர்பான புகாரில் சம்பந்தப்பட்டவர்கள் மீது  நடவடிக்கை எடுக்க உத்தரவு பிறப்பட்டுள்ளது” என்று அமைச்சர் மனோ தங்கராஜ் தெரிவித்துள்ளார்.


ஆவின் பால் திருட்டு


இதனை தொடர்ந்து பேசிய அவர், "வேலூரில் ஆவின் அதிகாரிகள் நடத்திய ஆய்வில் தான் பால் திருட்டு  விவகாரம் தெரியவந்தது.  எங்கள் அறிவுறுத்தலின்பேரிலே அதிகாரிகள் வேலூர் ஆவினில் ஒரே பதிவு எண் கொண்ட லாரியை கண்டறிந்தனர்.  


அதேபோன்று வேலூர் பால் திருட்டு தொடர்பாக நாங்கள் தான் புகார் கொடுத்தோம். எந்த தவறு நிகழ்வதையும் ஆவின் நிர்வாகம் அனுமதிக்காது. முறைகேடுகளை தடுக்க ஆவின் பால் பண்ணைகளில் தொடர்ந்து ஆய்வு நடத்ததப்படும்” என்று அமைச்சர் மனோ தங்கராஜ் தெரிவித்துள்ளார்.