Minister Ma.Su: தமிழ்நாட்டில் 1,200 மருத்துவ சீட்டுகள் பறிபோகுதா? அமைச்சர் தகவலால் அதிர்ச்சி...
முதுநிலை மருத்துவ இடங்கள் தொடர்பான உச்சநீதிமன்ற தீர்ப்பால், தமிழ்நாட்டில் சுமார் 1,200 மருத்துவ இடங்கள் பறிபோகும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

முதுநிலை மருத்துவ படிப்புகளில், மாநில அரசுகளுக்கென தனி ஒதுக்கீடு கூடாது என்ற உச்சநீதிமன்ற தீர்ப்பு, மாநில உரிமைகளுக்கு எதிராக உள்ளதால், அந்த தீர்ப்பை எதிர்த்து மறுசீராய்வு மனு தாக்கல் செய்யப்படும் என, அமைச்சர் மா. சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
உச்சநீதிமன்ற தீர்ப்பு என்ன.?
எம்.பி.பி.எஸ் தவிர, முதுநிலை மற்றும் மருத்துவ மேற்படிப்புகளில், மாநில அரசுகள் தங்களுக்கென தனி ஒதுக்கீட்டை வைத்துக்கொள்ளக் கூடாது எனவும், அனைவரும் இந்தியாவில் வசிப்பதால், மாநிலங்கள் தங்களுக்கென ஒதுக்கீடு வைத்துக்கொள்வது, அரசியல் சட்டத்தின் 14-வது பிரிவுக்கு எதிரானது என வழக்கு ஒன்றில், உச்சநீதமன்ற 3 பேர் கொண்ட நீதிபதிகள் அமர்வு நேற்று(29.01.25) தீர்ப்பு வழங்கியுள்ளது.
மேலும், மருத்துவ இடங்களை வாழ்விட அடிப்படையில் ஒதுக்கீடு செய்வதை சட்டம் அனுமதிக்காது எனவும், அதனால், அனைத்து முதுநிலை மருத்துவ இடங்கள் மற்றும் மேற்படிப்பு இடங்களை அகில இந்திய அளவில் பொதுவானதாக்க வேண்டும் என்றும் உச்சநீதிமன்றம் கூறியுள்ளது.
69% இட ஒதுக்கீட்டிற்கு பாதிப்பு
தமிழ்நாட்டில் முதுநிலை மருத்துவ படிப்பிலும் 69% இட ஒதுக்கீட்டு முறை பின்பற்றப்படுகிறது. இந்த நிலையில், உச்சநீதிமன்றம் தற்போது அளித்துள்ள தீர்ப்பு, அனைத்து முதுநிலை மருத்துவ இடங்களையும் மத்திய அரசின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு சென்றுவிடும். அப்படி இருக்கும் பட்சத்தில், தமிழ்நாட்டில் பின்பற்றப்படும் 69% இட ஒதுக்கீடு முறை செல்லுபடியாகாது. இது, தமிழ்நாடு அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில், போதிய மருத்துவ நிபுணர்கள் இல்லாத நிலையை உருவாக்கும். அதனால், பொதுமக்களுக்கு உயர் சிகிச்சை கிடைப்பதில் சிக்கல்கள் ஏற்படும்.
தமிழ்நாட்டில் 1,200 மருத்துவ இடங்கள் பறிபோகும் - அமைச்சர்
இப்படிப்பட்ட சூழலில், இன்று(30.01.25) இது தொடர்பாக செய்தியாளர்களை சந்தித்த மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன், உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பால், தமிழ்நாட்டில் சுமார் 1,200 மருத்துவ இடங்கள் பறிபோகும் நிலை உருவாகும் என்ற அதிர்ச்சிகர தகவலை தெரிவித்துள்ளதார். இதனால், தமிழ்நாட்டில் பின்பற்றப்படும் 69% இட ஒதுக்கீட்டு முறையை பாதிக்கும் என்றும், மாநில உரிமைகள் பறிபோகும் எனவும் தெரிவித்தார்.
உச்சநீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து சீராய்வு மனு - அமைச்சர்
உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பால், அரசு மருத்துவர்கள் மற்றும் மாணவர்களுக்கு பாதிப்பு ஏற்படும் என கூறிய அமைச்சர் மா. சுப்பிரமணியன், பாதிப்புக்குள்ளாகும் இட ஒதுக்கீடு மற்றும் மாநில உரிமைகளை நிலைநாட்ட, முதுநிலை மருத்துவ மாணவர சேர்க்கை தொடர்பான உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து சீராய்வு மனு தாக்கல் செய்யப்படும் என்று தெரிவித்துள்ளார்.