சென்னையில் சிகிச்சையின்போது கால் அகற்றப்பட்ட கால்பந்து வீராங்கனை பிரியா உயிரிழந்தார். 17 வயதான பிரியாவுக்கு பெரியார் நகர் அரசு மருத்துவமனையில் வலதுகால் முட்டி சவ்வு சீரமைப்பு அறுவை சிகிச்சை நடந்தது.
அறுவை சிகிச்சைக்கு பின் ஏற்பட்ட சிக்கலால் ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் பிரியாவின் கால் அகற்றப்பட்டது. கால் அகற்றப்பட்ட நிலையில் பிரியாவின் உடல்நிலையில் பின்னடைவு ஏற்பட்டு இன்று காலை உயிரிழந்தார்.
மாணவியின் உயிரிழந்தது தொடர்பாக மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்ரமணியம் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், “உயிரிழந்த கால்பந்து வீராங்கனை பிரியா விளையாட்டின் மீது கொண்ட ஆர்வம் காரணமாக, ராணிமேரி கல்லூரியில் முதலாமாண்டு பிஎஸ்சி உடற்கல்வியில் பட்டப்படிப்பு படித்து வந்தார். கடந்த ஓராண்டுக்கு முன்னர், வலது காலில் ஜவ்வு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அதேபோல், கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்பும் பிரியாவுக்கு அதே காலில் அதே பிரச்சனை ஏற்பட்டுள்ளது. அதன் காரணமாக பெரியார் நகரில் உள்ள அரசு மருத்துவமனையில் கடந்த 7ம் தேதி சிகிச்சை பெற்று இருக்கிறார். அவருக்கு பெரியார் நகரில் உள்ள மருத்துவர்கள் ஆர்தோ திரபி என்ற அதிநவீன தொழிற்நுட்ப வாயிலாக அந்த சிகிச்சையை வெற்றிகரமாக செய்து இருக்கிறார்கள்.
இருந்தாலும் அந்த மருத்துவர்கள் சிகிச்சைக்கு பிறகு காலில் கட்டுபோடும்போது அழுத்ததாக கட்டியுள்ளனர். இதனால் வலது காலில் இரத்த ஓட்டம் இல்லாமல், பெரியளவில் பாதிப்பை ஏற்படுத்த தொடங்கியுள்ளது. இரத்த ஓட்டம் பாதிக்கப்பட்டதால் இரத்த நாளங்கள் பழுதாகி பிரியா மிகப்பெரிய அவதிக்குள்ளாகி இருக்கிறார். இதையடுத்து கடந்த 8ம் தேதி சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் மேல் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். பிரியா இங்கு அனுமதிக்கப்பட்டதில் இருந்து அனைத்து துறை மருத்துவர்களால் அவருக்கு உன்னிப்பாக கவனிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது.
இந்த சம்பவம் முதலமைச்சர் கவனத்திற்கு சென்றதால், அவரின் உத்தரவின்பேரில் நான் வந்து மருத்துவர்களிடம் பிரியாவிற்கு அளிக்கப்படும் சிகிச்சை குறித்து விசாரித்தேன். அப்போது பிரியாவின் பெற்றோர்கள் நல்ல மனநிலையில் இருந்தனர்.
இரத்த நாளங்கள் பாதிக்கப்பட்டதால் பிரியாவிற்கு நேற்று நள்ளிரவு சிறுநீரக பாதிப்பு, ஈரல் பாதிப்பு, இதய பாதிப்பு என தொடர்ச்சியான பாதிப்புகள் ஏற்பட்டது. இன்று காலை 7. 15 மணிக்கு சிகிச்சை பலனின்றி பிரியா உயிரிழந்தார்.
பிரியாவின் கால் அகற்ற காரணமாக இருந்த 2 மருத்துவர்கள் உடனடியாக இடமாற்றம் செய்யப்பட்டார்கள். தொடர்ந்து கால் அகற்றப்பட்டபோது பிரியாவின் பெற்றோர்கள் பிரியாவுக்கு அரசு வேலை வேண்டும் என்று எங்களிடம் கோரிக்கை வைத்திருந்தார்கள். அதற்கும் அரசு வேலை வாங்கி தருவதாக உறுதியளித்த நாங்கள், பிரியாவின் கால் காயம் குணமடைந்தவுடன் பெங்களூரில் இருந்து பேட்டரி காலை வாங்கி கொடுக்க அறிவுறுத்தி இருந்தோம். இப்படி பல்வேறு நடவடிக்கைகளை அரசு எடுத்துவந்த நிலையில், மாணவி உயிர் பறிபோய் அனைவரின் மனதையும் காயப்படுத்தியது.
பிரியாவின் குடும்பத்தார் மிகவும் ஏழ்மையான சூழ்நிலையில் உள்ளவர்கள். எனவே அந்த குடும்பத்திற்கு தமிழக அரசு சார்பில் ரூ. 10 லட்சம் நிவாரணமும், பிரியாவின் சகோதரிகளில் 3 பேரில் யாரேனும் ஒருவருக்கு அரசு வேலை வழங்கப்படும்” என தெரிவித்தார்.