தமிழகத்தைப் பொறுத்தவரை டெங்கு பாதிப்பு மிகவும் குறைவாக உள்ளது எனவும் டெங்கு என்பது பருவமழை காலங்களில் வரக்கூடிய ஒரு நோய் தான் அக்டோபர் 1ம் தேதி ஆயிரம் இடங்களில் காய்ச்சல் முகாம் நடத்தப்படும். விபத்தில் மூளைச்சாவடைந்து உடல் உறுப்பு தானம் செய்த சின்னமனூர் வருவாய் அலுவலர் உடலுக்கு அரசு மரியாதை செய்வதற்காக மதுரை விமான நிலையம் வந்த அமைச்சர் மா சுப்பிரமணியன் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்
தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வருவாய் ஆய்வாளராக பணியாற்றிய சின்னமனூரைச் சேர்ந்த வடிவேல் என்பவர் விபத்தில் காயம் அடைந்து கடந்த மூன்று தினங்களுக்கு முன்பு மதுரையில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தார். தொடர்ந்து சிகிச்சை அளித்து வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி வடிவேல் உயிரிழந்தார். இதனைத் தொடர்ந்து இறந்த வடிவேலின் உடல் உறுப்புகள் அவரின் குடும்பத்தாரின் சம்மதத்தோடு தானம் செய்யப்பட்டது. உடல் உறுப்பு தானம் செய்பவர்களுக்கு அரசு மரியாதை உடன் இறுதி அஞ்சலி செலுத்தப்படும் என அண்மையில் தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் அறிவித்திருந்தார். இந்நிலையில் வடிவேல் உடல் உறுப்புகள் தானம் செய்ததால் அவரது உடல் இன்று சொந்த ஊரான சின்னமனூரில் தகனம் செய்யப்படுவதை தொடர்ந்து அவரது உடலுக்கு தமிழக அரசு சார்பில் அரசு மரியாதை செய்வதற்காக தமிழக மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் சென்னையில் இருந்து மதுரை விமான நிலையம் வந்தடைந்தார்.
அப்போது செய்தியாளர்களை சந்தித்த அவரிடம் கேட்கப்பட்ட கேள்விகளும் பதில்களும்:
கேள்வி: டெங்கு பாதிப்பு தமிழகத்தில் அதிகம் உள்ளதா? அதன் நிலை என்ன?
பதில்: மதுரையில் டெங்கு பாதிப்பு என்பது குறைவுதான் 17 பேர் தான் இதுவரை பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வந்துள்ளது. பருவ மழையின் போது வரக்கூடிய நோய்தான். தமிழக முழுவதும் 476 நடமாடும் மருத்துவக் குழுக்கள் தற்போது செயல்பட்டு வருகின்றன. டெங்கு பாதிப்பு 2012ல் 13000 பேர் பாதிக்கப்பட்டு 26 பேரும், 2017ல் 23000 பேர் பாதிப்பு ஏற்பட்டு 13 பேரும் உயிரிழந்துள்ளனர். இந்த இரு வருடங்களில் தான் பாதிப்பு அதிகம் இருந்தது. தமிழகத்தில் தற்போது பாதிப்பு அதிகம் இல்லை இதுவரை 5 பேர் உயிரிழந்துள்ளனர். இருந்தாலும் அதையும் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. டெங்கு நோய் பரவாமல் தடுக்க மக்கள் பாதுகாப்பு வழிமுறைகளை பின்பற்ற வேண்டும். மேலும் காய்ச்சல் பரவமால் தடுக்க தமிழகம் முழுதும் 1000 இடங்களில் மருத்துவமுகாம் அக்.1 ம் தேதி நடைபெறும்.
கேள்வி: சவர்மா விற்பனை செய்யப்படும் பெரிய கடைகளில் சோதனை நடத்தப்படுவதில்லை, சிறிய கடைகளில் மட்டும் உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் சோதனை நடத்துவதாக குற்றச்சாட்டு எழுகிறதே?
பதில்: பெரிய கடைகளில் குளிர்பதன பெட்டிகளில் இறைச்சிகள் வைக்கப்படுவதால் பாதுகாப்பு இருக்கும் பாதுகாப்பின்றி வைத்தால் நடவடிக்கை எடுக்கப்படும். சிறிய கடைகளில் இறைச்சியை பாதுகாப்பாக வைப்பதற்கான வாய்ப்புகள் இல்லை என்பதால் இறைச்சிகள் கெட்டுப் போகிறது.
கேள்வி: இறைச்சிகளில் ரசாயன சாயம் பூசப்படுவது தொடர்பாக நடவடிக்கை எடுக்கப்படுமா?
பதில்: புகார் வந்தால் கட்டாயம் நடவடிக்கை எடுக்கப்படும்
கேள்வி: எய்ம்ஸ் மருத்துவமனை டெண்டர் அறிவிக்கப்பட்ட நிலையில் பணிகள் எப்போது தொடங்கும்?
பதில்: வரும் டிசம்பர் மாதம் எய்ம்ஸ் மருத்துவமனை பணிகள் தொடங்கப்பட்டு 2028 ஆம் ஆண்டு பணிகள் முழுமையாக முடிவடையும்
கேள்வி: பணி தொடங்கப்படாத நிலையில் தற்போது எய்ம்ஸ் மருத்துவக் கல்லூரியில் பயின்று வரும் மாணவர்கள் எய்ம்ஸ் மருத்துவமனை கட்டிடத்தை பார்க்காமலேயே படிப்பை முடிக்கும் சூழ்நிலை உருவாகுமா?
பதில்: இந்த கேள்வியை நீங்கள் மத்திய அரசிடம் தான் கேட்க வேண்டும்