சேலம் மாநகராட்சியை தூய்மையாக வைத்திருக்கும் வகையில் 75 இலகு ரக குப்பை சேகரிக்கும் வாகனங்கள், 600 குப்பை சேகரிக்கும் தொட்டிகள், 3 சாலையை சுத்தம் செய்யும் அதிநவீன வாகனங்கள் ஆகியவற்றின் செயல்பாட்டினை நகராட்சி நிர்வாக துறை அமைச்சர் கே.என்.நேரு கொடி அசைத்து துவக்கி வைத்தார்.


பின்னர் நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் கே.என். நேரு குப்பை உற்பத்தியாகும் இடத்திலேயே அவற்றை தரம் பிரித்து சேகரிக்கும் வகையில் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும், மக்கும் குப்பை மற்றும் மக்காத குப்பைகளை தனித்தனியே சேகரிக்க தற்போது வாகனங்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.



பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், சேலத்தில் குப்பையே இல்லை என்கிற நிலையை உருவாக்கும் வகையில் செயல்படுவோம் என்றார். மேலும் தமிழகம் முழுவதும் மலை போல் குவிந்து கிடக்கும் குப்பைகளை அகற்றிவிட்டு அப்பகுதிகளில் மரங்களை நடும் பணியை மேற்கொண்டுள்ளதாகவும், தற்போது 300 ஏக்கர் பரப்பளவில் இருந்த குப்பைமேடுகளில் 150 ஏக்கர் வரை அகற்றப்பட்டு அப்பகுதிகளில் மரக்கன்றுகள் நடும்படி நடந்து வருவதாக தெரிவித்த அவர் குப்பைகள் உற்பத்தியாகும் இடத்திலேயே அவற்றை தரம் பிரித்து சேகரித்து மக்காத குப்பைகளை தொழிற்சாலைகளுக்கும், மக்கும் குப்பைகளை உரமாக மாற்றி மீண்டும் மக்களுக்கும் வழங்கி வருவதாக தெரிவித்தார்.


அம்மா உணவகங்கள்


பாதாள சாக்கடை திட்டம் மூலம் கழிவு நீரை சுத்திகரிப்பு செய்து அதன் அவற்றை பயன்படுத்தவும், நிலத்தடி நீர்மட்டத்தை உயர்த்தவும் நடவடிக்கை எடுத்து வருவதாக தெரிவித்த அவர் இத்திட்டத்திற்கு இன்னும் நான்கு அல்லது ஐந்து ஆண்டுகளில் நல்ல பலன் கிடைக்கும் என்றார். தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து மாநகராட்சிகளுக்கும் தேவையான நிதியை முதலமைச்சர் ஒதுக்கி உள்ளதாகவும், அம்மா உணவகங்களை மூடும் எண்ணம் தமிழக அரசுக்கு இல்லை என்ற அவர் தேவைக்கு அதிக எண்ணிக்கையிலான பணியாளர்கள் இருப்பதால் அவர்களை சுழற்சி முறையில் பணியில் ஈடுபட மட்டுமே நடவடிக்கை எடுத்துள்ளதாக தெரிவித்தார்.



புகைப்பட கண்காட்சி


முன்னதாக, சேலம் புதிய பேருந்து நிலையத்தின் அருகில் உள்ள சேலம் மாநகராட்சி திடலில் செய்தி மக்கள் தொடர்புத் துறையின் சார்பில் “ஓயா உழைப்பின் ஓராண்டு கடைக்கோடி தமிழரின் கனவுகளைத் தாங்கி" என்ற தலைப்பில் தமிழ்நாடு அரசின் சாதனைகள் மற்றும் திட்டங்கள் குறித்த புகைப்படக் கண்காட்சியினை நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே‌.என்‌.நேரு இன்று திறந்து வைத்தார். பின்னர் அங்கு அமைக்கப்பட்டிருந்த அரசின் சாதனை விளக்க புகைப்படங்களை பார்வையிட்டார். மேலும், கண்காட்சியில் வைக்கப்பட்டிருந்த கடைகளில் இளநீர், தேங்காய் பூ, சேலம் தட்டுவடை செட், தேன் நெல்லி உள்ளிட்டவற்றை ருசித்து மகிழ்ந்தார். இக்கண்காட்சி அடுத்த பத்து நாட்களுக்கு நடைபெறும் என சேலம் மாவட்ட நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


இந்த நிகழ்ச்சியில் சேலம் மாவட்ட ஆட்சியர் கார்மேகம், சேலம் மாநகராட்சி ஆணையாளர் கிறிஸ்தவராஜ், சேலம் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ் ஆர் பார்த்திபன், சேலம் வடக்கு சட்டமன்ற உறுப்பினர் ராஜேந்திரன், சேலம் மேற்கு சட்டமன்ற உறுப்பினர் அருள் ராமதாஸ், மேட்டூர் சட்டமன்ற உறுப்பினர் சதாசிவம், சேலம் மாநகராட்சி மேயர் ராமச்சந்திரன், சேலம் மாநகராட்சி துணை மேயர் சாரதா தேவி மற்றும் அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.