மிக்ஜாம் புயல் சென்னையை நெருங்கும் நிலையில் பொதுமக்கள் இன்று மாலை முதல் நாளை மாலை வரை வெளியில் செல்வதை தவிர்க்க வேண்டும் என அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர் ராமசந்திரன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.


சென்னை எழிலகத்தில் உள்ள மாநில அவசரகால பேரிடர் கட்டுப்பாட்டு மையத்தில் அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர் ராமசந்திரன் செய்தியாளர்களை சந்தித்தார்.


அப்போது பேசிய அவர், ”வங்க கடலில் உருவான ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக வலுப்பெற்றுள்ளதாகவும், இன்று மாலை முதல் நாளை மாலை வரை கடற்கரை ஓரமாக புயல் நகரும் என தெரிவிக்கப்பட்டுள்ளதால், பொதுமக்கள் இன்று மாலை முதல் நாளை மாலை வரை வெளியில் செல்வதை தவிர்த்துவிட்டு வீட்டிலேயே இருக்க வேண்டும். முதலமைச்சர் இன்று காலையில் ஐந்து மாவட்ட ஆட்சியாளர்களிடம் தொலைபேசி வாயிலாக தொடர்பு கொண்டு பேசியுள்ளதாக கூறிய அவர், 118 வடஇந்தியாவிற்கு செல்லக்கூடிய ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது, விமான நிலையத்திலும் விமானங்கள் ரத்தாகும் நேரங்களில் பயணிகளுக்கு தேவையான உதவிகளை செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது. 


அதேபோல், 162 முகாம்கள் சென்னையில் தயார் நிலையில் உள்ளது. சென்னை திருவள்ளூர் செங்கல்பட்டு காஞ்சிபுரம் ராணிப்பேட்டை மாவட்டங்களில் அதிக மழை இருக்கும் என வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தியுள்ளதால், மழையோடு பலத்த காற்றும் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. 


சென்னையில் மணலியில் 348 பேர் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.  மின்கசிவு காரணமாக சென்னையில் ஒருவர் இன்று உயிரிழந்துள்ளார், செல்பி எடுக்கும் வேலையை மக்கள் தவிர்க்க வேண்டும். மீட்பு குழுவின் எண்ணிக்கையை 23 குழுக்களில் 575 பேராக அதிகரிக்கப்பட்டுள்ளது, 951 புகார் அழைப்புகள் பெறப்பட்டதில் 800 க்கும் மேற்பட்ட அழைப்புகளுக்கு தீர்வு காணப்பட்டுள்ளது. மேலும், தமிழ்நாட்டில் பெய்து வரும் கனமழை காரணமாக 6 மனித உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது அவர்களுக்கு 4 லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்கப்பட்டுள்ளது, 140 கால்நடை உயிரிழப்புகளுக்கு அதிகபட்சமாக முப்பதாயிரம் வரை வழங்கப்படுகிறது, 52 குடிசை பாதிக்கப்பட்டுள்ளது, அதற்கு 5000 ரூபாய் வழங்கப்பட உள்ளது. அதுமட்டுமின்றி ஏற்கனவே நாளை பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ள நிலையில் ஐ டி உள்ளிட்ட தனியார் நிறுவனங்களுக்கு திங்கள் கிழமை விடுமுறை விடுவது குறித்து அரசு ஆலோசித்து வருகிறது” என கூறியுள்ளார்.