கண்ணகி போல் நீதி கேட்ட குஷ்பு இப்போ எங்கே? சிலம்பு காணாமல் போய்விட்டதா? -  வெளுத்து வாங்கிய அமைச்சர் கீதா ஜீவன்

பாஜகவின் மாநில பொருளாதாரப் பிரிவுத் தலைவர் எம்.எஸ்.ஷா நிகழ்த்திய பாலியல் வன்கொடுமை அம்பலத்திற்கு வந்திருக்கிறது.

Continues below advertisement

 

Continues below advertisement

கமலாலயத்தில் தன்னைத் தானே காறித் துப்பிக் கொள்ளும் நிகழ்வுக்கு அண்ணாமலை தேதி குறித்துவிட்டாரா என அமைச்சர் கீதா ஜீவன் கேள்வி எழுப்பியுள்ளார். 

இதுகுறித்து தமிழ்நாடு சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறை அமைச்சர் கீதா ஜீவன் வெளியிட்டுள்ள அறிக்கையில், “அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் சீண்டலுக்கு ஆளான விவகாரத்தில் கடந்த இரு வாரங்களாக மக்களைக் குழப்பி கபட நாடகம் நடத்தி வந்தன அதிமுகவும் பாஜகவும்.

பாஜக-அதிமுக கள்ளக் கூட்டணி ‘தமிழ்நாட்டில் பெண்களுக்குப் பாதுகாப்பில்லை’ எனக் கதை கட்டி விஷமத்தனமானப் பிரசாரத்தை நடத்தி வந்த நிலையில் அவர்களின் லட்சணம், சென்னை அண்ணா நகரிலும், மதுரையிலும் அவலட்சணமாக அம்பலப்பட்டு இருக்கிறது.

சென்னை அண்ணாநகர் சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கில் கடந்த வாரம் அதிமுக வட்டச் செயலாளர் சுதாகர் கைது செய்யப்பட்டார். அந்த செய்தியை மறைக்க அதிமுக நடத்திய நாடகம்தான் ’யார் அந்த சார்?’ என்பது வெட்டவெளிச்சமானது.

பாஜகவின் மாநில பொருளாதாரப் பிரிவுத் தலைவர் எம்.எஸ்.ஷா நிகழ்த்திய பாலியல் வன்கொடுமை அம்பலத்திற்கு வந்திருக்கிறது. மதுரையைச் சேர்ந்த தனது பேத்தி வயதுடைய 15 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த புகாரில் எம்.எஸ்.ஷா கைதாகியிருக்கிறார்.

அதிமுகவின் வட்ட செயலாளர் சுதாகரும், பாஜக பொருளாதாரப் பிரிவுத் தலைவர் எம்.எஸ்.ஷாவும் பெண் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமையை நிகழ்த்திய போக்சோ குற்றவாளிகளாக இருப்பது பேரவலம். இத்தகைய பாலியல் குற்றவாளிகளின் கூடாரத்தை வைத்துக் கொண்டுதான், ’அரசியல் கோமாளி’ அண்ணாமலை நடத்திய சவுக்கடி நாடகத்தை எண்ணி, இப்போது நாட்டு மக்கள் காறி உமிழ்கிறார்கள்.

அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமையை கண்டித்து, தன் வீட்டு முன்பு தன்னைத் தானே 6 முறை சாட்டையால் அடித்துக் கொண்ட அண்ணாமலை, தன் கட்சிக்காரர் எம்.எஸ்.ஷாவின் பாலியல் லீலைகளுக்காகக் கமலாலயத்தில் தன்னைத் தானே காறித் துப்பிக் கொள்ளும் நிகழ்வுக்கு அண்ணாமலை தேதி குறித்துவிட்டாரா?

‘தமிழ்நாட்டில் பெண்களுக்குப் பாதுகாப்பில்லை’ என வானத்திற்கும், பூமிக்கும் குதித்த தமிழிசை சவுந்தரராஜனும், குஷ்புவும் அமைதி நிலைக்குச் சென்றுவிட்டார்கள். எதுவுமே நடக்காதது போல அமைதி காக்கிறார்கள்.

மதுரையில் நின்று கண்ணகியைப் போலச் சிலம்பு ஏந்தி அண்ணா பல்கலைக்கழக மாணவிக்கு நீதி கேட்ட குஷ்பு, பாஜகவின் எம்.எஸ்.ஷா கைதுக்கு என்ன செய்து கொண்டிருக்கிறார்? கண்ணகி நீதி கேட்ட மதுரையில் போராடிய குஷ்பு, அதே மதுரையில் பாஜக பிரமுகரால் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு ஏன் நீதி கேட்டுப் போராடவில்லை? அந்த சிலம்பு காணாமல் போய்விட்டதா?

திமுக ஆட்சிக்கு எதிரான செய்திகளுக்கு எல்லாம் எட்டிப்பார்த்து வீராவேச நடிப்பைக் காட்டும் எதிர்க் கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, எம்.எஸ்.ஷா பாலியல் விவகாரத்தில் ஏன் வாய் திறக்கவில்லை? எம்.எஸ்.ஷா பின்னால் இருக்கும் சார் யார் எனக் கேட்டு பழனிசாமி போஸ்டர் அடிப்பாரா? தனது கள்ளக் கூட்டாளி பாஜகவின் பாலியல் குற்றம் என்றதும் ஓடி ஒளிந்து விட்டாரா கோழை பழனிசாமி? கள்ள கூட்டணிக்காக பழனிசாமி நடத்தும் கள்ள மவுனமா இது?

இது போன்ற கொடூர குற்றவாளிகளை ஒடுக்கத்தான் தமிழ்நாடு முதலமைச்சர் பெண்களுக்கு எதிரான குற்றம் செய்பவர்களுக்கு எதிரான தண்டனைகளைக் கடுமையாக்கியுள்ளார். பெண்களுக்கும், குழந்தைகளுக்கும் எதிரான குற்றவாளிகள் ஒரு நாளும் திமுக ஆட்சியில் தப்ப முடியாது.

இப்படி தங்களுடைய அசிங்கமான அரசியலை எல்லாம் மூடி மறைக்கத்தான் கள்ளக்கூட்டணி நடத்தும் அரசியல் நாடகம் எல்லாம் மக்கள் அறிவர். அதனால் இந்த நாடகங்கள் இனி ஒரு நாளும் மக்களிடம் எடுபடாது" எனத் தெரிவித்துள்ளார். 

Continues below advertisement
Sponsored Links by Taboola