EV Velu: அமைச்சர் எ.வ.வேலு படம் நடிச்சுருக்காரா? அதுவும் வில்லன் - என்னய்யா சொல்றீங்க?
அமைச்சர் எ.வ.வேலு வில்லனாக நடித்த திரைப்படம் எது? எப்போது வெளியானது? என்பதை கீழே விரிவாக காணலாம்.

தமிழ்நாட்டின் அரசியலையும், சினிமாவையும் பிரிப்பது என்பது தவிர்க்கவே இயலாத ஒன்றாகும். திராவிட கட்சிகள் தமிழ்நாட்டில் காலூன்றியதற்கு சினிமாவும் முக்கியமான ஒன்று. அண்ணாதுரை, கருணாநிதி, எம்ஜிஆர், ஜெயலலிதா என தமிழ்நாட்டின் முன்னாள் முதலமைச்சர்கள் சினிமாக்காரர்களே.
வில்லனாக நடித்த எவ வேலு:
சினிமாவில் நடிக்க வேண்டும் என்ற ஆர்வம் பெரும்பாலான மக்களுக்கு இருக்கும். அந்த வகையில் தமிழ்நாட்டின் அரசியல்வாதிகளில் பலரும் சினிமாவில் நடித்துள்ளனர். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் திரைப்படங்களில் நடித்தது பலரும் அறிந்ததே. ஆனால், மூத்த அமைச்சர் ஒருவர் திரைப்படம் ஒன்றில் நடித்தது பலரும் அறியாதது.
அந்த அமைச்சர் வேறு யாருமில்லை. அவர் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் எ.வ.வேலு. இவர் 1992ம் ஆண்டு வெளியான திலகம் என்ற படத்தில் நடித்திருப்பார். இந்த படத்தில் அவர் வில்லனாக நடித்திருப்பார். கவுதமி நடித்த அந்த படத்தின் தொடக்க பாடலிலே அந்த ஊரின் முக்கிய தலைவராக நடித்திருப்பார். மேலும், இடையில் ஒரு காட்சியிலும் வந்திருப்பார். பின்னர், படத்தின் கிளைமேக்ஸ் காட்சியில் வருவார்.
ஆர்வம் வந்தது எப்படி?
இந்த படத்தை ரகுவாசன் இயக்கியுள்ளார். கே.பார்த்திபன், ஆர்கே சேது, ஏ ராஜேந்திரன் தயாரித்திருப்பார்கள். பிரபல இசையமைப்பாளர் சந்திரபோஸ் இசையமைத்திருப்பார். இதன்பின்னர், எவ வேலு எந்த படத்திலும் நடிக்கவில்லை. அதன்பின்னர், அவர் தீவிர அரசியலில் கவனம் செலுத்த தொடங்கிவிட்டார். எவ வேலுவின் இந்த சினிமா ஆர்வத்திற்கு அடிப்படை காரணம் அவர் அடிப்படையில் ஒரு கூத்துக்கலைஞர். எவ வேலு தனது ஆரம்ப காலத்தில் அதிமுக-வில் இருந்தார். பின்னர், திமுக-வில் தன்னை இணைத்துக் கொண்டார்.
தற்போது, திமுக-வில் தவிர்க்க முடியாத ஒரு தலைவராக எவ வேலு உள்ளார். திருவண்ணாமலை மாவட்ட திமுக-வின் முகமாக எவ வேலு திகழ்கிறார். எவ வேலு மட்டுமின்றி பல அரசியல் தலைவர்களும் சினிமாவில் நடிப்பதில் ஆர்வம் கொண்டவர்களாகவே இருந்தனர்.
தமிழ் சினிமாவும், தமிழக அரசியலும்:
அதிமுக-வின் முக்கிய நிர்வாகியும், முன்னாள் அமைச்சருமான எஸ்பி வேலுமணிக்கும் திரைப்படங்களில் நடிக்கும் ஆர்வம் இருந்தது. ஆனால், அவருக்கு அந்த வாய்ப்பு கிடைக்கவில்லை. அமைச்சர் அன்பில் மகேஷ் நாடகம் ஒன்றில் அறிமுக காட்சியில் நடித்துள்ளார்.
மேலும், பல அரசியல் தலைவர்களும், நிர்வாகிகளும் திரைப்படங்கள் தயாரிப்பு, விநியோகஸ்தம் உள்ளிட்ட பணிகளிலும் ஈடுபட்டு வருகின்றனர். தற்போது தமிழக அரசியலில் ஏற்படுத்தியுள்ள தவெக தலைவர் விஜய்யும் தன்னுடைய சினிமா புகழையே நம்பியே அரசியலில் குதித்துள்ளார்.























