டெல்லியில் நேற்று நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் தொடங்கியது. கொரோனா இரண்டாம் பரவல் அலைக்கு பிறகு தொடங்கும் கூட்டத்தொடர் என்பதால் இந்த கூட்டத்தொடர் மீது மிகுந்த எதிர்பார்ப்பு எழுந்தது. இந்த கூட்டத்தொடரில், மக்களவையில் நேற்று கேள்வி நேரத்தின்போது சென்னை ஐ.ஐ.டி.யில் சாதி மற்றும் மத பாகுபாடு நிலவுவதாக முன்னாள் மத்திய அமைச்சரும், நாடாளுமன்ற தி.மு.க. நிலைக்குழு தலைவருமான டி.ஆர்.பாலு குற்றம் சாட்டினார். டி.ஆர்.பாலுவின் இந்த கேள்விக்கு பதிலளித்த மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான், சென்னை ஐ.ஐ.டி.யில் மத ரீதியாகவோ, சாதி ரீதியாகவோ யாரையும் வேறுபடுத்தியது இல்லை. சென்னை ஐ.ஐ.டி.யில் மாணவர்களின் மனநலனை உறுதிசெய்ய 24 மணிநேரமும் உளவியல் ஆலோசனை வழங்கப்பட்டு வருகிறது என்று கூறினார்.
சென்னை ஐ.ஐ.டி.யில் சாதி மற்றும் மத பிரிவினை பார்க்கப்படுவதாக நீண்ட காலமாக குற்றச்சாட்டுகள் தொடர்ந்து எழுந்து வருகிறது. சென்னை ஐ.ஐ.டி,யில் சமூக அறிவியல் துறை பேராசிரியராக பணியாற்றிய விபின் புதியத் என்பவர் கடந்த சில வாரங்களுக்கு முன்பு தனது பேராசிரியர் பணியை ராஜினாமா செய்தார். மேலும், அமெரிக்காவில் உள்ள பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டத்தை முடித்த அவர், 2019ம் ஆண்டு சென்னை ஐ.ஐ.டி.யில் பணிக்கு சேர்ந்தது முதல் சாதிய ரீதியான தீண்டாமைக்கு ஆளாக்கப்பட்டேன் என்றும், இதன் காரணமாகவே ராஜினாமா செய்ததாகவும் கூறியிருந்தார்.
சென்னை ஐ.ஐ.டி.யில் படித்து வந்த கேரளா மாநிலம் கொல்லத்தைச் சேர்ந்த பாத்திமா லத்தீப் என்ற மாணவி, கடந்த 2019-ஆம் ஆண்டு நவம்பர் 9-ஆம் தேதி கல்லூரி வளாகத்தில் இருந்த விடுதியில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். ஐ.ஐ.டி.யில் பணியாற்றிய பேராசிரியர் சுதர்சன் பத்மநாபன் உள்பட 3 பேராசிரியர்களின் நெருக்கடியால்தான் மாணவி தற்கொலை செய்து கொண்டதாகவும் தகவல்கள் வெளியாகின. நாட்டையே உலுக்கிய மாணவி பாத்திமா லத்தீப்பின் இந்த தற்கொலைக்கும் பாகுபாடுதான் காரணம் என்றும் குற்றச்சாட்டுகள் வெளியாகின.
சென்னை ஐ.ஐ.டி.யில் பேராசிரியர்கள் பணியிடங்களில் இட ஒதுக்கீடு முறையாக பின்பற்றப்படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது. தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் மூலம் பெறப்பட்ட தகவலின் அடிப்படையில், பேராசிரியர் பணியிடங்களில் தாழ்த்தப்பட்டோருக்கான 47 பணியிடங்களில் 5 பேரும், பழங்குடியினருக்கான 23 இடங்களில் ஒருவரும், ஓ.பி.சி. பிரிவினருக்கான 84 பணியிடங்களில் 29 பேர் மட்டுமே பணி நியமனம் செய்யப்பட்டுள்ளனர். ஆனால், ஓ.சி. பிரிவினருக்கான 154 பணியிடங்களுக்கு 273 பேர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இணை பேராசிரியர் பணியிடங்களிலும் தாழ்த்தப்பட்ட பிரிவினருக்கான 27 இடங்களில் 4 பேரும், பழங்குடியினருக்கான 13 பணியிடங்களில் ஒருவரும், ஓ.பி.சி. பிரிவினருக்கான 49 பணியிடங்களில் 19 பேர் மட்டுமே பணி நியமனம் செய்யப்பட்டுள்ளனர். ஆனால், ஓ.சி. பிரிவினருக்கான 90 பணியிடங்களில் 156 பேர் பணிநியமிக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.