அமைச்சர் சி.வ.கணேசன் தனது சொந்த ஊரான கழுதூரில் பொங்கல் தொகுப்பு வழங்கும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். அப்போது இறந்த மனைவியை நினைத்து அவர் அழுதது நிகழ்ச்சியில் கலந்துக் கொண்ட  பொதுமக்களையும் கண்கலங்க வைத்தது.


தமிழா் திருநாளாம் தைப் பொங்கல் பண்டிகையை பொதுமக்கள் சிறப்பாகக் கொண்டாடும் வகையில், நடைமுறையில் உள்ள அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரா்களுக்கும் பச்சரிசி, வெல்லம், ஒரு முழு கரும்பு உள்பட 21 பொருள்கள் வழங்கப்படும் என்று தமிழக அரசால் அறிவிக்கப்பட்டது. இந்தத் திட்டத்தின் கீழ் கடலூா் மாவட்டத்தில் டிச.31 வரை நடைமுறையில் உள்ள 7,61,419 அரிசி குடும்ப அட்டைதாரா்களும், இலங்கை தமிழா் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் 428 குடும்ப அட்டைதாரா்களும் பயன்பெறுவா்.


பொங்கல் பரிசுத் தொகுப்பை வரும் செவ்வாய்க்கிழமை (ஜன.4) முதல் பகுதி வாரியாக வழங்க அட்டவணையிட்டு அதை நியாய விலைக்கடைகளில் விளம்பரம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பொதுமக்கள் அவரவருக்கு ஒதுக்கப்பட்ட குறிப்பிட்ட நாள்களில் பொருள்களை சிரமமின்றி எளிதாக பெறலாம். குடும்ப அட்டையில் இடம்பெற்றுள்ள உறுப்பினா்களில் எவரொருவா் வந்தாலும் அவா் சாா்ந்த குடும்ப அட்டைக்கான பரிசுத் தொகுப்பு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டு இருந்தது.






அதன் படி இன்று கடலூர் திட்டக்குடி அருகே உள்ள கழுதூரில் பொங்கல் பரிசு பொருட்கள் வழங்கும் விழாவினை தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு துறை அமைச்சர் கணேசன் தொடங்கி வைத்தார். கடலூர் மாவட்டம் திட்டக்குடி அடுத்துள்ள கழுதூர் கிராமத்தில் தமிழக அரசு அறிவித்துள்ள இலவச பொங்கல் தொகுப்பு பொது மக்களுக்கு வழங்கும் நிகழ்ச்சியினை தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு துறை அமைச்சர் சி.வெ.கணேசன் தொடங்கி வைத்தார். இதில் 1117 பயனாளிகள் கலந்து கொண்டு பயனடைந்தனர். அமைச்சரின் சொந்த ஊரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசும் போது, அவர் கண்கலங்கி அழுதது பொது மக்கள் அனைவரும் கண் கலங்க வைத்தது. கடந்த மாதம் அமைச்சர் கணேசனின் மனைவி பவானி அம்மாள் உடல்நல குறைவு காரணமாக உயிரிழந்தார். அதன்பின்னர் தற்போதுதான் முதல் முறையாக சொந்த கிராமத்தில் கலந்து கொண்ட முதல் நிகழ்ச்சி என்பது குறிப்பிடத்தக்கது.


முன்னதாக கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடியில் மாவட்ட ஆட்சித் தலைவர் பாலசுப்பிரமணியம் தலைமையில் நடைபெற்றது. இவ்விழாவில் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட குறிஞ்சிப்பாடி சட்டமன்ற உறுப்பினரும் வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம் ஆர் கே பன்னீர்செல்வம் தனது தொகுதிக்கு உட்பட்ட குடும்ப அட்டைதாரர்களுக்கு அரசு வழங்கும் பொங்கல் பரிசு தொகுப்பை வழங்கி துவக்கி வைத்தார்.  இந்நிகழ்ச்சியில் கடலூர் சட்டமன்ற உறுப்பினர் கோ.அய்யப்பன் கலந்து கொண்டார்.