Aadhav Arjuna: போதைப்பொருள் விற்றால் ‘குண்டர்‘ சட்டம்; காவல் நிலைய புகார்கள் வீடியோ பதிவு; தவெக அரசு அதிரடி
TVK Government: தவெக அரசு பதவியேற்றது முதல் பல்வேறு அதிரடி அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறது. அந்த வரிசையில், போதைப்பொருள் விற்றால் குண்டர் சட்டம் பாயும் என அமைச்சர் ஆதவ் அர்ஜுனா தெரிவித்துள்ளார்.

சென்னை வில்லிவாக்கம் தொகுதியில் ஆய்வுக் கூட்டத்தில் பங்கேற்ற தவெக அமைச்சர் ஆதவ் அர்ஜுனா, பல்வேறு பணிகள் குறித்து அலோசனை மேற்கொண்டார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், டாஸ்மாக் மூடல், மின்வெட்டு, போதைப்பொருள் விற்பனை, காவல் நிலைய புகார்கள் என பல்வேறு விஷயங்கள் குறித்து பேசினார். அவர் கூறியது என்னென்ன.? விரிவாக பார்க்கலாம்.
டாஸ்மாக் மூடல்
மக்களுடைய அடிப்படை பிரச்னைகளை சரி செய்யும் விதமாக, வில்லிவாக்கம் தொகுதிக்குட்பட்ட அனைத்து துறை நிர்வாகிகளுடன் கலந்துரையாடலை நடத்திய அமைச்சர் ஆதவ் அர்ஜுனா, பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, வில்லிவாக்கம் தொகுதியில் தான் பிரசாரம் மேற்கொண்ட போது, போதைப்பொருள் கலாச்சாரமும், டாஸ்மாக் பிரச்னை குறித்தும் பெண்கள் தன்னிடம் முறையிட்டதாக தெரிவித்தார்.
அதைத் தொடர்ந்து, முதலமைச்சர் விஜய்யின் உத்தரவின்படி, வில்லிவாக்கத்தில் ஏற்கனவே ஒரு டாஸ்மாக் கடை மூடப்பட்டுவிட்டதாகவும், பள்ளி, கோயில்கள் அருகே இன்னும் 4 கடைகள் இருப்பதாகவும், மொத்தம் 11 கடைகளில் 6 கடைகளை போர்க்கால அடிப்படையில் மூட வேண்டும் என்று டாஸ்மாக்கிடம் கோரப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.
போதைப்பொருள் விற்பவரை குண்டர் சட்டத்தில் அடைக்க உத்தரவு
தொடர்ந்து, போதைப்பொருள் கலாச்சாரத்தை ஒழிக்கும் விதமாக, போதைப்பொருள் விற்பவரை குண்டர் சட்டத்தில் அடைக்கும்படி கூறியிருப்பதாகவும் ஆதவ் அர்ஜுனா தெரிவித்தார்.
மேலும், டாஸ்மாக் கடைகள் மட்டுமில்லாமல், சட்டவிரோதமாக பல கடைகள் நடத்தப்பட்டு வருவதாகவும், அவற்றை நடத்துபவர்களை உடனடியாக கைது செய்யுமாறு கூறியுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
அதோடு, அரசு அனுமதித்துள்ள நேரத்தில் மட்டுமே டாஸ்மாக் செயல்படுவதை உறுதி செய்வதுடன், பெண்கள் பாதுகாப்பையும் உறுதி செய்யுமாறு கூறியுள்ளதாகவும், காவல் நிலையத்தில் புகார் அளிக்க பெண்கள் வந்தாலும், அதை பதிவு செய்யும் வகையில் சிசிடிவி இயக்கத்தில் இருக்க வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளதாகவும் அவர் கூறினார்.
காவல் நிலையத்தில் புகார் அளிக்கும்போது வீடியோ பதிவு
மேலும், காவல் நிலையத்திற்கு வந்து யார் புகார் அளித்தாலும், அதை வீடியோ பதிவு செய்யுமாறு கூறியுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். அதற்காக, சட்டமன்ற உறுப்பினராக, தனது ஐடி விங்கின் ஆதரவை அளிப்பதற்கு தயாராக இருப்பதாகவும் ஆதவ் அர்ஜுனா கூறினார்.
புகார் அளிக்கும் பொதுமக்களும், அதை வாங்கும் அதிகாரிகளும் ஒரு வெளிப்படைத் தன்மையுடன் அதை வீடியோவாக பதிவிட்டுவிட்டால், எதிர்காலத்தில் எந்த தரப்பிற்கும் பிரச்னை இருக்காது என அவர் விளக்கமளித்தார். அதற்காக, அனைத்து காவல் நிலையங்களிலும், 24 மணி நேரமும் சிசிடிவி இயங்க வேண்டும் என்று உத்தரவிட்டிருப்பதகாவும் அவர் தெரிவித்தார்.
அதேபோல், அனைத்து தெருக்களிலும் சிசிடிவி கேமராக்கள் இயங்க வேண்டும் என்று மாநகராட்சியிடம் கூறியிருப்பதாகவும் ஆதவ் அர்ஜுனா தெரிவித்தார்.
இனி அரசு அலுவலகங்களில் பூஜ்ஜிய லஞ்சம்
இதேபோல், அரசு அலுவலக பணிகள் குறித்து குறிப்பிட்ட அவர், டெண்டர்களில் யாரும் இனிமேல் தலையிட மாட்டார்கள் என்றும், குறிப்பாக, தவெக தரப்பிலிருந்து எந்த ஒரு பரிந்துரையோ, அழுத்தமோ கொடுக்கக் கூடாது என முதலமைச்சர் உறுதிபட தெரிவித்துள்ளதாகவும், அதனால், இனி அரசு அலுவலகங்களில் எந்த லஞ்சமும் இருக்காது என்றம், அதேபோல், டெண்டர்களின் முழு தொகையும், கமிஷன் ஏதும் கொடுக்கப்படாமல், அந்தந்த பணிகளுக்கே முழுமையாக பயன்படுத்தப்படும் என்றும் ஆதவ் அர்ஜுனா உறுதிபடத் தெரிவித்தார்.
Before You Go
BJP Breaks TMC | 50 MLA ராஜினாமா.. உடைந்தது திரிணாமுல் காங்.,? மம்தாவை காலி செய்யும் மோடி
ட்ரெண்டிங் செய்திகள்





















