தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே நடுரோட்டில் 40 வயதுமிக்க நபர் தடுமாறி விழுந்து உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கோவில்பட்டியில் இருந்து சுமார் 30 கிலோ மீட்டர் தொலைவில் கயத்தாறு உள்ளது. இங்குள்ள தேவர் நகரில் கந்தசாமி என்பவர் தனது குடும்பத்தினருடன் வசித்து வருகிறார். இவருக்கு ஆனந்தராஜ் என்ற 40 வயதுமிக்க மகன் உள்ளார். இவருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. ஆனந்தராஜ் அப்பகுதியில் உள்ள டீக்கடை ஒன்றில் வடை மாஸ்டராக பணியாற்றி வந்துள்ளார்.
நீண்ட நேரம் மது அருந்திய ஆனந்தராஜ்
இப்படியான நிலையில் இவருக்கு மது அருந்தும் பழக்கம் உள்ளது. அந்த வகையில் கயத்தாறு அருகே இருக்கும் இரட்டை குளம் பகுதியைச் சேர்ந்த தனது உறவினர் தாமஸ் என்பவருடன் நேற்று முன்தினம் மது அருந்தியுள்ளார். பின்னர் தாமஸ் தனது வீட்டிற்கு சென்று விட்ட நிலையில் ஆனந்தராஜ் வீட்டிற்கு புறப்படாமல் நீண்ட நேரமாகவே மது அருந்திய இடத்தில் அமர்ந்ததாக சொல்லப்படுகிறது.
இதனிடையே மது போதையில் இருந்தாலும் வீட்டிற்கு வந்து விடும் ஆனந்தராஜ் இரவில் வீடு திரும்பாததால் அவரது குடும்பத்தினர் அதிர்ச்சியடைந்தனர். அவரை பல்வேறு இடங்களிலும் தேடினர். இந்த நிலையில் அப்பகுதியில் உள்ள சாலை ஒன்றில் தலை குப்புற கவிழ்ந்த நிலையில் ஆனந்தராஜ் கிடந்துள்ளார். முதலில் அவர் மதுபோதையில் விழுந்திருக்கிறார் என உறவினர்கள் நினைத்து எழுப்பியுள்ளனர்.
சாலையில் உயிரிழந்த கிடந்த கோலம்
அவரிடம் இருந்து எந்தவித அசைவும் வராத நிலையில் சந்தேகமடைந்த அவர்கள் அவரை சோதனை செய்தபோது உயிரிழந்தது தெரிய வந்தது. உடனடியாக இந்த சம்பவம் குறித்து கயத்தாறு காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. விரைந்து சம்பவம் நடைபெற்ற இடத்திற்கு வந்த போலீசார் ஆனந்தராஜ் உடலைக் கைப்பற்றி விசாரணை நடத்தினர். பின்னர் பிரேத பரிசோதனைக்காக கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த சம்பவம் தொடர்பாக கயத்தாறு காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதில் ஆனந்தராஜ் அளவுக்கு மீறிய அளவில் மதுபோதையில் வீட்டிற்கு திரும்பியுள்ளார். ஆனால் அவர் நிலை தடுமாறி விழுந்ததில் படுகாயமடைந்து உடனடியாக உயிரிழந்துள்ளார் என்பது தெரிய வந்ததாக கூறப்பட்டுள்ளது. எனினும் அவர் மரணத்தின் பிரேத பரிசோதனை அறிக்கை வந்தாலே இந்த மர்ம மரணம் குறித்த உண்மை வெளிப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே ஆனந்தராஜூடன் இணைந்து மது அருந்திய தாமஸிடம் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர். அவர் மது அருந்திய இடம், உயிரிழந்து கிடந்த இடம் ஆகிய பகுதிகளில் உள்ள சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்து வருகின்றனர். இந்த சம்பவம் கயத்தாறு பகுதியில் பேசுபொருளாக மாறியுள்ளது.