மேட்டூர் அனல் மின் நிலையத்தில் 840 மெகா அவார்டு மற்றும் 600 மெகாவாட் உற்பத்தி செய்யப்படுகிறது. இதில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட நிரந்தர தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர். இந்த நிலையில் இன்று 840 மெகாவாட் மூன்றாவது அலகில் ஆறாயிரத்திற்கும் ஒப்பந்த தொழிலாளர்கள் வேலை செய்து வந்தனர். அப்போது 50 அடி உயரத்திலிருந்து நிலக்கரி சேமிப்பு தொட்டி பெல்ட் கழன்று கீழே விழுந்தது. இந்த விபத்தில் அப்பகுதியில் பணியாற்றிக் கொண்டிருந்த ஒப்பந்த தொழிலாளர்கள் மீது நிலக்கரி குவியல் விழுந்ததால் வெங்கடேசன், பழனிச்சாமி ஆகிய இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் ஸ்ரீகாந்த் (24), மனோஜ் குமார்(22), சீனிவாசன் (42), முருகன் (25), கௌதம் (24) ஆகிய ஐந்து பேரும் காயம் அடைந்தனர். சம்பவ இடத்திற்கு வந்த அனல் மின் நிலைய ஆம்புலன்ஸ் வாகனங்கள் காயம் அடைந்த ஒப்பந்த தொழிலாளர்களை மீட்டு சிகிச்சைக்காக மேட்டூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். மேலும் இடர்பாடுகளில் சடலமாக கிடந்த வெங்கடேசன், பழனிச்சாமி ஆகிய இருவரின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் வேறு யாராவது நிலக்கரி குவியலில் சிக்கி உள்ளார்களா என்ற கோணத்தில் ஜேசிபி வாகனங்கள் மூலம் தீயணைப்பு துறையினர் மற்றும் மின்வாரிய ஊழியர்களும் ஈடுபட்டுள்ளனர். மேலும் விபத்து சம்பவம் குறித்து அனல் மின் நிலைய அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவத்தை அறிந்து ஊழியர்களின் உறவினர்கள் தெர்மல் பகுதி முன்பு குவிந்ததால் பரபரப்பு நிலவியது.
இந்த நிலையில், மேட்டூர் சட்டமன்ற உறுப்பினர் சதாசிவம் விபத்து நடந்த பகுதியில் ஆய்வு மேற்கொண்டார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த மேட்டூர் சட்டமன்ற உறுப்பினர் சதாசிவம், "போதிய பராமரிப்பு இல்லாமல் மேட்டூர் அனல் மின் நிலையம் இயங்கி வருகிறது. இங்கு பணிபுரியும் ஊழியர்களுக்கு பாதுகாப்பு இல்லை. அதிகாரிகளின் மெத்தனப்போக்கால் விபத்து நடந்துள்ளது. நான் இது குறித்து பலமுறை அனல் மின் நிலைய அதிகாரிகளை எச்சரித்துள்ளேன். ஆனால் அதிகாரிகள் அலட்சியத்தால் மிகப் பெரிய விபத்து நிகழ்த்தியுள்ளது. கூலி வேலைக்கு வரும் ஊழியர்களுக்கு பாதுகாப்பு இல்லை. இன்று ஐந்து பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இரண்டு பேர் உயிரிழந்துள்ளனர். தொடர்ந்து மீட்பு பணி நடைபெற்று வருகிறது. இன்னும் எத்தனை பேர் சிக்கி உள்ளார்கள் என இதுவரை தெரியவில்லை. இதனால் இங்கு பணிபுரியும் 6500 தொழிலாளர்கள் அச்சத்தில் உள்ளனர். மின்சாரம் துண்டிக்கப்பட்டதால் மீட்பு பணியில் தொய்வு ஏற்பட்டுள்ளது. இதனை தமிழக அரசு உடனடியாக குழு அமைத்து ஆய்வு செய்ய வேண்டும் எனக் கூறினார்.
மேட்டூர் அனல் மின் நிலையத்தில் ஆறு மாதத்திற்கு ஒருமுறை விபத்து நடக்கிறது. இதனால், நிரந்தர தொழிலாளர்கள் மற்றும் ஒப்பந்த தொழிலாளர்களாக பணிபுரியும் 6500 பேருக்கும் பாதுகாப்பு இல்லை. அதிகாரிகள் சரியாக ஆய்வு நடத்தவில்லை. இதன் காரணமாகத்தான் 800 டன் கொண்ட நிலக்கரி அலகல் சரிந்து கீழே விழுந்துள்ளது. மேட்டூர் அனல் மின் நிலையம் ஃபெயிலியர் ஆகிவிட்டது. 60 ஆண்டுகள் பழமை வாய்ந்த இந்த அனல் மின் நிலையத்தை தமிழக அரசு உடனடியாக மூட வேண்டும். இல்லையென்றால் அதிகாரிகள் உரிய ஆய்வு நடத்தி அதன் பின்னர் திறக்க வேண்டும். ஆறு மாதத்திற்கு ஒருமுறை மரணம், அடிக்கடி விபத்து ஏற்படுகிறது. எனவே அனல் மின் நிலையத்தை ஆய்வு நடத்தி, புதிது படுத்தி அதன் பின்னர் உற்பத்தியை தொடங்க வேண்டும்" என கேட்டுக்கொண்டார்.