தமிழ்நாட்டில் சென்னை, விழுப்புரம், கடலூர், காஞ்சிபுரம் உள்ளிட்ட 21 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் இடி மின்னலுடன் கூடிய லேசான முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னை உட்பட 21 மாவட்டங்களில் காலை 10 மணி வரை மழைக்கு வாய்ப்பு எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 


திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, புதுக்கோட்டை, தென்காசி, கோவை, ஈரோடு, தர்மபுரி, திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை, கன்னியாகுமரி, புதுச்சேரி, காரைக்காலில் மழைக்கு வாய்ப்பு என வானிலை மையம் தரப்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. 


தென் இந்திய பகுதிகளின் மேல் நிலவும் வளி மண்டலத்தின் கீழடுக்குகளில் கிழக்கு திசை காற்றும், மேற்கு திசை காற்றும் சந்திக்கும் பகுதி நிலவுகிறது. இதன் காரணமாக நேற்று முதல் தமிழ்நாட்டில் பல இடங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. இந்த மழையானது அடுத்து வரும் 4 நாட்களுக்கு தொடரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 


18.03.2023 முதல் 20.03.2023 வரை: தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல்  மிதமான மழை   பெய்யக்கூடும். 


21.03.2023: தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல்  மிதமான மழை பெய்யக்கூடும். 


சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கான வானிலை முன்னறிவிப்பு:


அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசான / மிதமான மழை   பெய்யக்கூடும்.  அதிகபட்ச வெப்பநிலை 30-31 டிகிரி செல்சியஸ் மற்றும்  குறைந்தபட்ச வெப்பநிலை 24-25 டிகிரி செல்சியஸ் அளவில் இருக்கக்கூடும். 


சென்னையில் நேற்று காலை தொடங்கிய மழையானது இரவு முழுவதும் விட்டு விட்டு பெய்து வந்தது. சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசான முதல் மிதமான மழை பெய்து வருகிறது. 


சில தினங்களுக்கு முன் அதிகாலை நேரத்தில் கடும் பனி மூட்டம் நிலவி வந்தது. ஆனால் பகல் நேரத்தில் வெயிலின் தாக்கம் அதிகமாகவே இருந்தது. தற்போது கடந்த இரண்டு நாட்களாக மழை பெய்து வருவது மக்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 


மீனவர்களுக்கான எச்சரிக்கை:  


18.03.2023 வரை: ஆந்திர கடலோரப்பகுதிகள் மற்றும் மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதிகளில்  சூறாவளிக்காற்று மணிக்கு  40 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55  கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.


மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாமென்று அறிவுறுத்தப்படுகிறார்கள்.