தமிழகத்தின் 4 மாவட்டங்களில் இன்று கனமழை எச்சரிக்கை: முழு ரிப்போர்ட் இதோ!
"தமிழ்நாட்டில் இன்று ராமநாதபுரம், திருநெல்வேலி, கன்னியாகுமரி மற்றும் தூத்துக்குடி ஆகிய 4 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது."

தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் வளிமண்டல சுழற்சி மற்றும் காற்றழுத்தத் தாழ்வு நிலை உருவாகியுள்ளதால், தமிழகத்தின் தென் மாவட்டங்களில் இன்று பலத்த மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
புதிய வானிலை மாற்றம் - மழை எச்சரிக்கை
தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய இலங்கை பகுதிகளில் நிலவும் வளிமண்டல மேலடுக்குச் சுழற்சி காரணமாக, அடுத்த 48 மணி நேரத்தில் ஒரு குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவாக வாய்ப்புள்ளது. இதன் விளைவாக, இன்று ராமநாதபுரம், திருநெல்வேலி, கன்னியாகுமரி மற்றும் தூத்துக்குடி ஆகிய நான்கு மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, புதுக்கோட்டை மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் நாளை கனமழை பெய்யக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மே 15-ம் தேதி வரை மிதமான மழை தொடர வாய்ப்புள்ளது.
கடந்த 24 மணி நேர மழை நிலவரம்
தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் பல்வேறு இடங்களில் கணிசமான மழை பதிவாகியுள்ளது. குறிப்பாக, திருநெல்வேலி மாவட்டத்தின் ஊத்து பகுதியில் அதிகபட்சமாக 17 செ.மீ., மழை கொட்டித் தீர்த்துள்ளது.
இதர பகுதிகளில் பதிவான மழை விவரம்:
- நாலுமுக்கு: 16 செ.மீ.
- காக்காச்சி: 15 செ.மீ.
- தூத்துக்குடி (பெருங்குளம்): 14 செ.மீ.
- மாஞ்சோலை: 13 செ.மீ.
- ராமநாதபுரம் (தங்கச்சிமடம்): 8 செ.மீ.
- ராமேஸ்வரம்: 7 செ.மீ
சென்னை மற்றும் புறநகர் நிலவரம்
தலைநகர் சென்னையைப் பொறுத்தவரை, வானம் இன்று ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். வெப்பநிலையைப் பொறுத்தவரை, மேகமூட்டம் காரணமாக வெயிலின் தாக்கம் சற்றே குறைந்து குளிர்ச்சியான சூழல் நிலவ வாய்ப்புள்ளது.
மீனவர்களுக்கான எச்சரிக்கை:
தமிழகத்தின் தென்மாவட்டக் கடலோரப் பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய குமரிக்கடல் பகுதிகளில் இன்று முதல் மே 12-ம் தேதி வரை சூறாவளிக்காற்று பலமாக வீசக்கூடும். காற்றின் வேகம் அதிகமாக இருக்கும் என்பதால், பாதுகாப்பு கருதி மீனவர்கள் இப்பகுதிகளுக்கு மீன்பிடிக்கச் செல்ல வேண்டாம் என வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தியுள்ளது.
Before You Go
DMK On INDIA Alliance | துரோகம் செய்த காங்கிரஸ் திமுகவின் அதிரடி முடிவு பலவீனமான I.N.D.I.A கூட்டணி?
ட்ரெண்டிங் செய்திகள்





















