TN WEATHER ALERT: வலுப்பெறும் காற்றழுத்த தாழ்வு பகுதி.! 65 கி.மீட்டர் வேகத்தில் சூறாவளியோடு மழை- வானிலை மையம் அலர்ட்
வங்க கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதி மேலும் வலுவடையக்கூடும் என தெரிவித்துள்ள வானிலை ஆய்வு மையம், இதன் காரணமாக 65கி.மீட்டர் வேகத்தில் சூறாவளி காற்று வீச வாய்ப்பு இருப்பதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

வங்க கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை முடிவடைந்ததையடுத்து பனியின் தாக்கம் அதிகரித்து காணப்படுகிறது. இந்த நிலையில் பிப்ரவரி மாதத்தில் இதுவரை இல்லாத வகையில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளது. இதன் காரணமாக மழைக்கான எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், பூமத்தியரேகைக்கு அருகிலுள்ள இந்தியப் பெருங்கடல் மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி,
மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து இன்று அதே பகுதிகளில் நிலவுகிறது. இது மேலும் மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பூமத்தியரேகைக்கு அருகிலுள்ள இந்தியப் பெருங்கடல் பகுதிகளில் அடுத்த 24 மணி நேரத்தில் வலுப்பெறக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் இன்று மற்றும் நாளை தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும். வருகிற 20ஆம் தேதி தென் தமிழகம் மற்றும் கடலோர தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். இதர தமிழகத்தில் வறண்ட வானிலை நிலவக்கூடும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
அடுத்தாக வருகிற 21-02-2026 மற்றும் 22-02-2026: தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய, மிதமான மழை பெய்யக்கூடும். 23 மற்றும் 24-ஆம் தேதிகளில் தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை வானிலை நிலவரம்
நாளை (19-02-2026): வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகாலை வேளையில் ஓரிரு இடங்களில் லேசான பனிமூட்டம் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 30-31° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 23° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும் என கூறப்பட்டுள்ளது.
மீனவர்களுக்கான எச்சரிக்கை:
தமிழக கடலோரப்பகுதிகள்:
18-02-2026 முதல் 20-02-2026 வரை: மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய தென்தமிழக கடலோரப்பகுதிகள், குமரிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 60 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.
21-02-2026: குமரிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 60 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.
வங்கக்கடல் பகுதிகள்:
19-02-2026: தென்மேற்கு வங்கக்கடலின் சில பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய பூமத்தியரேகைக்கு அருகிலுள்ள இந்தியப் பெருங்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 65 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.
20-02-2026: பூமத்தியரேகைக்கு அருகிலுள்ள இந்தியப் பெருங்கடல் பகுதிகள் மற்றும் தென்கிழக்கு வங்கக்கடலின் சில பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 60 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.
21-02-2026 மற்றும் 22-02-2026: தென்மேற்கு வங்கக்கடலின் சில பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 60 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது. இதற் காரணமாக மேற்குறிப்பிட்ட நாட்களில் மீனவர்கள் இப்பகுதிகளுக்கு மீன்பிடிக்க செல்ல வேண்டாமென்று அறிவுறுத்தப்படுவதாக அந்த அறிவிப்பில் தெரிஙவிக்கப்பட்டுள்ளது.























