முதலிடம் பிடித்த காஞ்சிபுரம் ! காஞ்சிபுரத்தை நம்பி இருக்கும் உலக நாடுகள்! தொடரும் சாதனை!
Merchandise Exports Q1 FY 2025–26: "காஞ்சிபுரம் மாவட்டம் பொருட்களை ஏற்றுமதி செய்வதில், தமிழக அளவில் முதலிடம் பிடித்தது அசத்தியுள்ளது"

தமிழ்நாட்டில் சென்னை மற்றும் சென்னை புறநகர் பகுதிகளில், ஏராளமான தொழில் நிறுவனங்கள் மற்றும் தொழிற்சாலைகள் செயல்பட்டு வருகின்றன. சென்னை புறநகர் பகுதிகளில் செயல்பட்டு வரும் தொழிற்சாலைகள் மற்றும் தொழில் நிறுவனங்களில், பல லட்சக்கணக்கான ஊழியர்கள் பணியாற்றி வருகின்றனர்.
தொழிற்சாலைகள் நிறைந்த காஞ்சிபுரம் மாவட்டம்
குறிப்பாக சென்னை புறநகர் மாவட்டமாக இருக்கக்கூடிய காஞ்சிபுரம் மாவட்டத்தில் ஸ்ரீபெரும்புதூர், சுங்குவார்சத்திரம், இருங்காடுக்கோட்டை, படப்பை, ஒரகடம் உள்ளிட்ட பகுதிகளில் பல ஆயிரக்கணக்கான தொழில் நிறுவனங்கள் மற்றும் தொழிற்சாலைகள் செயல்பட்டு வருகின்றன.
குறிப்பாக ஸ்ரீபெரும்புதூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில், உலகில் முன்னணி தொழில் நிறுவனங்களில் தொழிற்சாலைகள் அமைந்திருக்கின்றன. இந்த தொழிற்சாலைகளில் ஏராளமான மின்னணு பொருட்கள் உற்பத்தி செய்யப்படுகின்றன, அதேபோன்று விலை உயர்ந்த கார்கள் உள்ளிட்ட ஏராளமான பொருட்கள் உற்பத்தி செய்யப்படுகின்றன. இவ்வாறு உற்பத்தி செய்யப்படும் பொருட்கள், வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகின்றன.
உற்பத்தியில் சிறந்து விளங்கும் காஞ்சிபுரம்
காஞ்சிபுரம் தொழிற்சாலைகளில் உற்பத்தியாகும் பொருட்கள் இங்கிலாந்து, ஜெர்மனி , சிங்கப்பூர் ,ஜப்பான், பிரான்ச், இலங்கை , நெதர்லாந்து என உலகில் பல்வேறு நாடுகளுக்கு பொருட்கள் ஏற்றுமதி செய்யப்படுகின்றன. இந்திய அளவில் ஏற்றுமதியில் குஜராத் முதலிடத்திலும் மகாராஷ்டிரா இரண்டாவது இடத்திலும் தமிழ்நாடு மூன்றாவது இடத்திலும் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
முதலிடம் பிடித்த அசத்திய காஞ்சிபுரம்
தமிழக அளவில் தொடர்ந்து காஞ்சிபுரம் மாவட்டம் ஏற்றுமதி செய்வதில் முதலிடம் பிடித்து வருகிறது. அந்த வகையில் இந்த ஆண்டு, Q1 FY 2025–26 காலாண்டில் காஞ்சிபுரம் மாவட்டம் ஏற்றுமதியில் தமிழக அளவில் முதலிடம் பிடித்து அசத்தியுள்ளது. காஞ்சிபுரம் மாவட்டத்திலிருந்து, 59,944.98 கோடி ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது. சென்னை 16,813.14 கோடி மதிப்புள்ள பொருட்களை ஏற்றுமதி செய்து இரண்டாம் இடம் பிடித்துள்ளது. திருப்பூர் 10,998.83 கோடி மதிப்புள்ள பொருட்களை ஏற்றுமதி செய்து மூன்றாம் இடம் பிடித்துள்ளது. கோயம்புத்தூர் 7,855.52 கோடி மதிப்புள்ள பொருட்களை ஏற்றுமதி செய்து நான்காம் இடத்தையும், 7,655.76 கோடி மதிப்புள்ள பொருட்களை ஏற்றுமதி செய்து ஐந்தாம் இடம் பிடித்துள்ளது.






















