சென்னை தாம்பரத்தில் உள்ள மெட்ராஸ் ஏற்றுமதி செயலாக்க மண்டலத்தின் (MEPZ - மெப்ஸ்) ஒப்புதல் குழு கூட்டம், மண்டல வளர்ச்சி ஆணையர் அலெக்ஸ் பால் மேனன் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் தமிழகம், அந்தமான் மற்றும் புதுச்சேரியில் பல்வேறு துறைகளில் தொழில்களைத் தொடங்குவதற்கும், விரிவாக்கம் செய்வதற்கும் முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டன.

Continues below advertisement

ரூ.443 கோடி முதலீடு - 11 தொழில் திட்டங்கள்

இக்கூட்டத்தில், தமிழகம், அந்தமான், புதுச்சேரி ஆகிய பகுதிகளில் பல்வேறு துறைகளில் மொத்தம் ரூ.443 கோடி முதலீட்டில், 2,424 வேலைவாய்ப்புகளை உருவாக்கும் வகையில் 11 தொழில் திட்டங்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் தென் மாநிலங்களில் தொழில் வளர்ச்சி மேலும் வேகமெடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தமிழகத்தில் ரூ.420 கோடியில் புதிய ஆலைகள்

குறிப்பாக, தமிழகத்தில் மட்டும் ரூ.420 கோடி முதலீடு செய்யும் 3 நிறுவனங்களின் திட்டங்களுக்கு ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.

Continues below advertisement

கோவை - இசட்.எப். இண்டஸ்ட்ரியல் டெக்னாலஜி: கோவை மாவட்டத்தில் 'இசட்.எப். இண்டஸ்ட்ரியல் டெக்னாலஜி' (ZF Industrial Technology) நிறுவனம் ரூ.336 கோடி முதலீட்டில் புதிய ஆலையை அமைக்க உள்ளது. இதன் மூலம் 250 பேருக்கு நேரடியாக வேலைவாய்ப்பு கிடைக்கும்.

ஓரகடம் - சான்மினா - எஸ்.சி.ஜே.: காஞ்சிபுரம் மாவட்டம் ஓரகடத்தில் உள்ள 'சிப்காட்' (SIPCOT) சிறப்பு பொருளாதார மண்டலத்தில், 'சான்மினா - எஸ்.சி.ஜே., இந்தியா' (Sanmina - SCI India) நிறுவனம் ரூ.72.7 கோடி முதலீட்டில் ஆலை அமைக்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.

கோவை விளாங்குறிச்சி - விசின்ட் சிஸ்டம்ஸ்: கோவை விளாங்குறிச்சியில் உள்ள 'எல்காட்' (ELCOT) சிறப்பு பொருளாதார மண்டலத்தில், 'விசின்ட் சிஸ்டம்ஸ்' (Visint Systems) நிறுவனம் ரூ.11.31 கோடி முதலீட்டில் தனது அமைப்பை விரிவாக்கம் செய்யவும் ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.

இந்த புதிய முதலீடுகள் மூலம் தமிழகத்தில் தொழில் துறை வளர்ச்சி அடைவதோடு, பெருமளவிலான இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புகளும் உருவாகும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.