சென்னை: காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாது அணை கட்டுவதற்காக, பாதுகாக்கப்பட்ட காவிரி விலங்குகள் சரணாலயப் பகுதியில் சட்டவிரோத ஆய்வுகளை நடத்தத் தீவிரம் காட்டும் கர்நாடக அரசின் செயலை பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் கடுமையாகக் கண்டித்துள்ளார். மேலும், இதற்கு மத்திய அரசு எவ்வித அனுமதியும் அளிக்கக் கூடாது என்றும், தமிழ்நாடு அரசு உரிய அழுத்தம் தர வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

Continues below advertisement

இதுகுறித்து அவர் வெளிட்டுள்ள அறிகையில்., 

காவிரியின் குறுக்கே மேகதாது அணை கட்டுவதற்காக காவிரி விலங்குகள் சரணாலயத்தில் பூமியை துளையிட்டு  ஆய்வு நடத்தவும், மரங்களை எண்ணுவதற்கும் கர்நாடக வன விலங்குகள் வாரியம் ஒப்புதல் அளித்திருக்கிறது. மேகதாது அணை கட்டுவதற்கு தமிழ்நாடு கடும் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில், அதைப் பொருட்படுத்தாமல் வனப்பகுதியில் சட்டவிரோத ஆய்வுகளை நடத்த கர்நாடகம் தீவிரம் காட்டுவது கடுமையாக கண்டிக்கத்தக்கது.

Continues below advertisement

கர்நாடகத் தலைநகர் பெங்களூரில் முதலமைச்சரும், வாரியத்தின் தலைவருமான டி.கே.சிவக்குமார் தலைமையில் நடைபெற்ற கர்நாடக வன விலங்குகள் வாரியத்தின் கூட்டத்தில், மேகதாது அணை கட்டுவதற்காக மேகதாது பகுதியில் உள்ள வனவிலங்குகள் சரணாலயத்தில் ஆய்வு நடத்த அனுமதி அளிக்கப்பட்டிருக்கிறது. அதன்படி, பாறைகள் நிறைந்த பகுதியில் கட்டுமானங்கள் மேற்கொள்ளப்பட்டால் நிலநடுக்க ஏற்படுமா? என்பதை அறிய   மொத்தம் 20 இடங்களில் 6 அங்குல அகலத்திற்கு 30 மீட்டர் ஆழத்திற்கு துளைகள் போடப்பட்டு ஆய்வு நடத்தப்படும்.

இது தவிர மேகதாது அணைக்காக எத்தனை ஆயிரம் மரங்களை வெட்டி வீழ்த்த வேண்டியிருக்கும்?  என்பதை அறிவதற்காக மரங்களின் கணக்கெடுப்பும் மேற்கொள்ளப்படும். மேகதாது அணை கட்டப்படவுள்ள காவிரி வனவிலங்குகள் சரணாலயம் பாதுகாக்கப்பட்ட பகுதி ஆகும். அதனால், கர்நாடக வனவிலங்குகள் வாரியம் ஒப்புதல் அளித்ததால் மட்டுமே ஆய்வுகளை மேற்கொண்டு விட முடியாது. மத்திய அரசின்கீழ் இயங்கும் தேசிய வனவிலங்குகள் வாரியமும் ஒப்புதல் கொடுத்தால் மட்டும் தான் ஆய்வுப் பணிகளை மேற்கொள்ள முடியும்.

மேகதாது அணைக்கான விரிவான திட்ட அறிக்கை தயாரிக்க மத்திய அரசின் அனுமதி பெறுவது மட்டுமின்றி,  வனவிலங்குகள் சரணாலயத்தில் ஆய்வு நடத்தி அதன் முடிவுகளை தாக்கல் செய்ய வேண்டியதும் அவசியம்.  எப்படியாவது ஆய்வு நடத்தி விரிவான திட்ட அறிக்கையை தயாரித்து மத்திய அரசிடம் தாக்கல் செய்து, அதையே காரணம் காட்டி புதிய அணைக்கான பூமி பூசையையாவது நடத்தி விட வேண்டும் என்று கர்நாடக முதலமைச்சர்  துடிப்பதால் இத்தகைய சட்டவிரோத செயல்களில் தீவிரம் காட்டுகிறார். இதை மத்திய அரசு அனுமதிக்கக் கூடாது.

காவிரி ஆற்றின் கடைமடை பாசனப் பகுதியான தமிழ்நாட்டின் அனுமதி இல்லாமல் கர்நாடகத்தில் மேகதாது அணை உள்ளிட்ட எந்தக் கட்டுமானங்களையும் மேற்கொள்ளக்கூடாது என்பது தான் காவிரி நடுவர் மன்றம் மற்றும் உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு ஆகும். இதன் பொருள் மேகதாது அணை கட்டுவதற்கான அடிப்படைப் பணிகளைக் கூட மேற்கொள்ளக் கூடாது; இன்னும் கேட்டால் அது குறித்த ஆலோசனைகளைக் கூட நடத்தக்கூடாது என்பது தான். மத்திய நீர்வளத்துறை அமைச்சராக உமாபாரதி இருந்தவரை இந்த நிலைப்பாட்டில் மத்திய அரசு உறுதியாக இருந்தது. ஆனால், அவர் மாற்றப்பட்ட பிறகு மேகதாது அணை கட்டுவதற்காக விரிவான திட்ட அறிக்கை தயாரிக்க மத்திய அரசு அனுமதி அளித்தது. அதுவே சட்டவிரோதம் என்பது தான் தமிழகத்தின் நிலைப்பாடு.

இதுதொடர்பான வழக்கில் உச்சநீதிமன்றம் அண்மையில் அளித்தத் தீர்ப்பின்படி, புதிதாக விரிவான திட்ட அறிக்கையை கர்நாடக அரசு தயாரிப்பதுடன், அணை கட்டுவதால் வனப்பகுதிகளுக்கு ஏற்படும் பாதிப்புகள் குறித்தும் அதில் தெளிவாக குறிப்பிடப்பட வேண்டும். அதனால் தான் கர்நாடகம் இவ்வளவு தீவிரம் காட்டுகிறது.

மேகதாது அணை கட்டுவதற்காக மொத்தம் 12,600 ஏக்கர் வனப்பகுதி நீரில் மூழ்கடிக்கப்படும். அப்பகுதியில்  தான் மிகப்பெரிய அளவிலான கட்டுமானங்கள் மேற்கொள்ளப்படும். இதற்காக பல்லாயிரக்கணக்கான மரங்கள் வெட்டி வீழ்த்தப்படுவதுடன், ஆயிரக்கணக்கான வன விலங்களுக்கும் பாதிப்பு ஏற்படுத்தப்படும். அதனால் தான் மேகதாது அணை திட்டத்தை சூழலியல் பேரழிவு (Ecocide) என்று பாட்டாளி மக்கள் கட்சி விமர்சித்து வருகிறது.

மேகதாது அணையிலிருந்து பெங்களூரின் குடிநீர் தேவைக்காக வெறும் 4.75 டி.எம்.சி நீர் மட்டுமே  எடுக்கப்பட உள்ளதாக கர்நாடக அரசு தெரிவித்துள்ளது. இது தவிர பாசனத்திற்காக ஒரு வாளி தண்ணீரைக் கூட எடுக்க மாட்டோம் என்று கர்நாடக முதலமைச்சர் டி.கே.சிவக்குமார் மீண்டும், மீண்டும் கூறி வருகிறார். அது தான் கர்நாடகத்தின் திட்டம் என்றால்  எதற்காக மேகதாது எனும் சூழலியல் பேரழிவுத் திட்டத்தை செயல்படுத்த வேண்டும்?  மேகதாது அணை பெங்களூரில் இருந்து 90 கி.மீ தொலைவில் அமையும். கிருஷ்ணராஜ சாகர் அணை 144 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது. மேகதாது அணையிலிருந்து எடுக்க வேண்டிய நீரை கிருஷ்ணராஜ சாகர் அணையிலிருந்து எடுத்துக் கொள்வதில் எந்த சிக்கலும் இல்லை. இதற்காக சூழலியல் பேரழிவை ஏற்படுத்தவும் தேவையில்லை.

மேகதாது அணை கட்டுவதற்காக கர்நாடக அரசு இவ்வளவு வேகமாக நடவடிக்கைகளை மேற்கொண்டு வரும் நிலையில், அதைத் தடுக்க தமிழக அரசின் சார்பில் எந்த நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படாதது கவலையளிக்கிறது. இந்த விஷயத்தில் தமிழக அரசு உறுதியான, விரைவான நடவடிக்கைகளை எடுக்காவிட்டால்  காவிரி ஆற்றில் தமிழ்நாட்டின் உரிமைகளை பாதுகாக்க முடியாது. திமுகவின் தவறான வழிகாட்டுதலால், மேகதாது அணை விவகாரத்திற்கு தீர்வு காண தனி நடுவர் மன்றம் அமைக்க வேண்டும் என்ற தமிழக நலனுக்கு எதிரான கோரிக்கையுடன் தனித் தீர்மானத்தை நிறைவேற்றியதுடன் தங்களின் கடமை முடிந்து விட்டதாக தமிழ்நாடு அரசு நினைத்துக் கொண்டிருந்தால் காவிரியின் குறுக்கே மேகதாது அணை கட்டப்படுவதை தடுக்க முடியாது.

முழுக்க முழுக்க அரசியல் காரணங்களுக்காக கர்நாடக அரசு மேற்கொள்ளும் இத்தகைய சட்டவிரோதமான செயல்களை மத்திய அரசு அனுமதிக்கக் கூடாது. மேகதாது அணைக்கான விரிவான திட்ட அறிக்கை தயாரிக்க 2018&ஆம் ஆண்டில் மத்திய அரசு அனுமதி அளித்ததன் மூலம் தமிழ்நாட்டுக்கு துரோகத்தை செய்தது. இந்த நிலையில் காவிரி வனவிலங்குகள் சரணாலயத்தில் ஆய்வு நடத்த அனுமதி அளிப்பதன் மூலம் மீண்டும் ஒரு துரோகத்தை செய்து விடக் கூடாது. எனவே, மேகதாது அணை கட்டுவதற்கான திட்ட அறிக்கை தயாரிக்க  காவிரி வனவிலங்குகள் சரணாலயப் பகுதியில் ஆய்வு நடத்த அனுமதி கோரி கர்நாடக அரசின் சார்பில் அனுப்பி வைக்கப்பட்டுள்ள கோரிக்கையை மத்திய அரசு நிராகரிக்க வேண்டும். இதற்காக மத்திய அரசுக்கு  தமிழ்நாடு அரசு அனைத்து வழிகளிலும் கடுமையான அழுத்தம் தர வேண்டும் என்று வலியுறுத்துகிறேன். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.