கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் மாவட்ட ஆட்சித் தலைவர் பிரபுசங்கர் தலைமையில் மருத்துவம் மற்றும் சுகாதாரத்துறையில் செயல்படுத்தப்பட்டு வரும் திட்ட பணிகள் குறித்து அலுவலர்களுடன் ஆய்வு கூட்டம் நடைபெற்றது.
கரூர் மாவட்டத்தில் நடைபெறும் சிசு மரணம் குறித்த ஆய்வு நடத்தப்பட்டு இறப்பிற்கான காரணங்களை ஆய்வு செய்து அவற்றில் சிசு இறப்பை முற்றிலும் தவிர்க்க வேண்டும். சிக்கலான பிரசவங்களை நோக்கியுள்ள கருவுற்ற தாய்மார்களை கண்டறிந்து அவர்களை அரசு வழிகாட்டுதலின் படி முன் தேதியிட்டு மருத்துவமனையில் அனுமதித்து நல்ல முறையில் பிரசவம் நடைபெறுவதை உறுதி செய்ய அறிவுறுத்தப்பட்டது. ஒவ்வொரு குழந்தை பிறந்த பின்பும், பிரசவ கால பின் கவனிப்பு 48 நாட்கள் வரை கட்டாயம் கிராம சுகாதார செவிலியர்களால் செய்யப்பட வேண்டும். குழந்தைகளுக்கு பிறப்பிலேயே ஏற்படும் நோய்கள் கண்டறிதல் மற்றும் பள்ளி செல்லும் குழந்தைகளுக்கு இருக்கும் நோய்கள் கண்டறிந்து அவற்றை விரைவில் சரிசெய்ய நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தப்பட்டது. தேசிய தரக்கட்டுப்பாடு சான்றிதழ் (NQAS) அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்களும் பெற அதற்குண்டான பணிகளை துரிதமாக எடுக்க வேண்டும்.
காய்ச்சல் மற்றும் டெங்கு பணிகள் பற்றி ஆய்வு செய்யப்பட்டு, வரும் காலங்களில் காய்ச்சல் மற்றும் டெங்குவினால் தீவிர நோய் பரவல் ஏற்படா வண்ணம் இருக்க வேண்டும். தொற்றா நோய்கள் கண்டறிவது மற்றும் மக்களை தேடி மருத்துவம் குறித்து ஆய்வு செய்யப்பட்டு, இதில் கண்டறியும் விகிதம் அதிகரிக்கப்பட வேண்டும் எனவும் மேலும் இரத்த கொதிப்பு மற்றும் சர்க்கரை நோய் உள்ளவர்களுக்கு அதனால் ஏற்படும் உபாதைகள் பற்றியும் நோயாளிகளுக்கு கூறி அவற்றிக்கான சிகிச்சையும் வழங்க வேண்டும். சீறுநீரக நோய்கள் உள்ளவர்களை கண்டறிந்து அவற்றிக்கான சிகிச்சை வழங்க வேண்டும். கருவுற்ற தகுதியுடைய தாய்மார்கள் அனைவருக்கும் முத்துலட்சுமி ரெட்டி மகப்பேறு நல உதவித்திட்டம் மூலம் வரும் நிதியுதவி ஒருவருக்கு கூட விடுபடாமல் விரைவில் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென மருத்துவ அலுவலர்களுக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் பிரபுசங்கர் அறிவுறுத்தினார்கள்.
உதிரம் உயர்த்துவோம் திட்டத்தினை கரூர் மாவட்டத்தில் சிறப்பாக செயல்படுத்தியதற்காக மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்களுக்கு சிறந்த ஆளுமை விருது தமிழ்நாடு அரசால் வழங்கபட்டது. இதற்கு துணை இயக்குநர் சுகாதார பணிகள், இணை இயக்குநர் நலப்பணிகள் மற்றும் முதல்வர், மருத்துவக்கல்லூரி மருத்துவமனை அவர்களால் வாழ்த்துக்கள் தெரிவிக்கப்பட்டது. அதற்கு மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் இது ஒரு கூட்டு முயற்சி எனவும், இத்திட்டத்தின் கீழ் பணியாற்றிய மருத்துவர்கள், செவிலியர்கள், ஆய்வக நுட்பனர்கள் மற்றும் இதர பணியாளர்களுக்கு நன்றி தெரிவித்தார். தங்க தந்தை திட்டத்தினை ஊக்குவித்து குடும்ப நல அறுவை சிகிச்சையினை அதிகரிக்க செய்தமைக்காக 3 சுகாதார அலுவலர்ருக்கும், 1 செவிலியருக்கும் பாராட்டு சான்றிதழினை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் வழங்கினார்கள். கரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை முதல்வர் தமோதரன், இணை இயக்குநர்(நலப்பணிகள்) ரமாமணி, துணை இயக்குநர்கள். (சுகாதாரப்பணிகள்) சந்தோஷ்குமார், சாந்தி(குடும்ப நலம்) மற்றும் மருத்துவர்கள் கலந்து கொண்டனர்.