திமுக கூட்டணியில் இருந்து வெளியேறுவதாக மதிமுக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
வைகோ தலைமையில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் கூட்டணியில் இருந்து விலகுவதாக முடிவு செய்யப்பட்டுள்ளது. தேர்தல் வரும்போது கூட்டணி குறித்து முடிவு எடுக்கப்படும் என மதிமுக பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
சென்னை அண்ணாநகரில் வைகோ தலைமையில் மதிமுக பொதுக்குழு கூட்டம் இன்று நடைபெற்றது. இதில், திமுக கூட்டணியில் இருந்து விலகுவதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. கடந்த சட்டமன்றத் தேர்தலில் திமுக கூட்டணியில் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டு மதிமுக வெற்றி பெற்றிருந்தது. காங்கிரஸ், இடதுசாரிகள், ஐயூஎம்எல்லை தொடர்ந்து மதிமுகவும் கூட்டணியில் இருந்து வெளியேறியது.
நிறைவேற்றப்பட்ட தீர்மானம்
மறுமலர்ச்சி திமுக, 2017 டிசம்பர் 3 ஆம் தேதி நடந்த உயர்நிலைக் குழுக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின் அடிப்படையில் கடந்த ஒன்பது வருடங்களாக திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியில் தொடர்ந்து வந்தது. தமிழ்நாட்டில் மதவாத அரசியல் சக்திகளை காலூன்ற விடாமல் தடுப்பதற்கும், திராவிட இயக்கத்தின் அடிப்படை இலட்சியக் கோட்பாடுகளைத் தகர்ப்பதற்கு விடப்படும் அறைகூவல்களை முறியடிக்கவும் மறுமலர்ச்சி திமுக மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியில் கொள்கை அடிப்படையில் இடம் பெற்று இருந்தது.
கடந்த 2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் தனித்துவ அடையாளத்தையும், 32 ஆண்டு கால தமிழ்நாட்டு மக்களுக்கான போராட்ட செயல்பாடுகளையும் நீர்த்துப்போக செய்யும் முயற்சிகள் கூட்டணியில் மேற்கொள்ளப்பட்ட போதும் அவற்றைத் தாங்கிக் கொண்டு, எடுத்த முடிவில் உறுதியாக இருந்து சட்டமன்றத் தேர்தலை சந்தித்தோம். தேர்தல் முடிவுகள் வெளிவருவதற்கு முன்பே மே 1 ஆம் தேதி கழக பொதுச் செயலாளர் வைகோ அவர்கள் பத்திரிக்கை ஊடகங்களில் தீர்க்கமாக கூறியவாறு தமிழ்நாடு அரசியலில் அதிசயிக்கத்தக்க வகையில் தமிழ்நாட்டு மக்கள் சட்டமன்றத் தேர்தலில் தமிழக வெற்றி கழகத்திற்கு பேராதரவை வழங்கி இருந்தனர். தேர்தல் முடிவுகள் வந்த பின்னர் அரசியல் களத்தில் நடைபெற்ற திரை மறைவு பேரங்கள், மக்கள் வழங்கியத் தீர்ப்புக்கு எதிராக இருந்ததை அனைவரும் அறிந்து அதிர்ச்சி அடைந்தனர்.
இந்துத்துவ மதவாத சக்திகளோடு கரம் கோர்த்துக் கொண்டு கூட்டணி வைத்து சட்டமன்றத் தேர்தலில், வெறும் 47 இடங்களில் வெற்றி பெற்ற அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தை ஆட்சி பீடத்தில் அமர்த்துவதற்கான ஏற்பாடுகள் நடந்தது ஊரறிந்த இரகசியமே; இதன் மூலம் மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி, கொள்கை கூட்டணி என்று பிரகடனம் செய்யப்பட்டதெல்லாம், சில அக்கறை உள்ள சக்திகளால் பொருளற்றதாக ஆக்கப்பட்டன.
இந்தச் சூழ்நிலையில், மறுமலர்ச்சி திராவிட முன்னேற்ற கழகம் இனியும், திமுக தலைமையிலான கூட்டணியில் தொடரக் கூடாது என்று கழகத்தின் நிர்வாகிகளும், தொண்டர்களும் தங்கள் கருத்தை வெளிப்படுத்தி இருக்கின்றனர்.எனவே திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியில் இருந்து விலகிக் கொள்வது என்று கழகப் பொதுக்குழு முடிவு செய்கிறது. தேர்தல் வரும்போது கூட்டணி குறித்து தக்க முடிவுகளை கழகம் மேற்கொள்வது என்றும் இப்பொதுக்குழு தீர்மானிக்கிறது.
மதிமுக பொதுக்குழு கூட்டத்தில் கடையநல்லூர் எம்எல்ஏ ராஜேந்திரன் கலந்து கொள்ளவில்லை. ஏற்கெனவே சீர்காழி மதிமுக எம்எல்ஏ செந்தில் செல்வன் அக்கட்சியில் இருந்து விலகிய நிலையில் இவரும் பங்கேற்கவில்லை. இதுதொடர்பாக அவர் கூறுகையில், பொதுக்குழுவில் தன்னால் செயல்பட இயலாது என்பதால் பொதுக்குழு கூட்டத்தில் கலந்து கொள்ளவில்லை என்றும் தனது சட்டமன்றச் செயல்பாடுகள் தகுதி நீக்கத்திற்கு வழிவகுத்தால் மகிழ்ச்சியுடன் பதவியை துறப்பேன் என்றும் அவர் கூறியுள்ளார்.
தவெகவுடன் கூட்டணியா?
விஜய் ஆட்சியமைத்த உடன் வைகோவை அவரின் வீட்டில் சென்று சந்தித்தார். அப்போதில் இருந்து விஜய் உடன் வைகோ இணக்கமாகவே இருந்துள்ளார். உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டது குறித்து தவறு என்றுத்து துரைவைகோவும் கருத்து கூறினார். இதன்பிறகே, திமுக உடனான கூட்டணியில் இருந்து மதிமுக விலகிவிடும் அரசியல் விமர்சகர்கள் கூறி வந்தனர். தன்மானத்தை இழந்து திமுக உடன் கூட்டணி வைத்ததாகவும் சமீபத்தில் வைகோ தெரிவித்திருந்தார். மேலும், மற்ற கட்சிகளுக்கு அதிக தொகுதிகள், தமது கட்சிக்கு இரண்டு தொகுதிகள் மட்டுமே கொடுத்ததாக வைகோ தனது ஆதங்கத்தை கூறினார்.
இந்த நிலையில், திமுக கூட்டணியில் இருந்து மதிமுக விலகியுள்ளது. தவெகவுடன் கூட்டணி அமைக்கவே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது. கூடிய விரைவில் இதுகுறித்த அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
