மயிலாடுதுறை: இந்திய நாட்டின் மிக முக்கியப் பணியான ‘இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு – 2027’ பணிக்கான ஆரம்பக்கட்ட நடவடிக்கைகள் நாடு முழுவதும் தீவிரமடைந்துள்ளன. அதன் ஒரு பகுதியாக, மயிலாடுதுறை மாவட்டத்தில் மக்கள் தொகை கணக்கெடுப்புப் பணியில் ஈடுபடவுள்ள மேற்பார்வையாளர்கள் மற்றும் கணக்கெடுப்பாளர்களுக்கான முதற்கட்ட பயிற்சி வகுப்புகள் மாவட்டத்தின் பல்வேறு மையங்களில் நேற்று நடைபெற்றன.

Continues below advertisement

மன்னம்பந்தல் ஏ.வி.சி கல்லூரியில் நடைபெற்ற பயிற்சி முகாமிற்கு நேரில் வருகை தந்த மயிலாடுதுறை மாவட்ட ஆட்சித்தலைவர் ஹெச்.எஸ்.ஸ்ரீகாந்த், பயிற்சியின் செயல்பாடுகள் மற்றும் ஆசிரியர்களுக்கு வழங்கப்படும் தொழில்நுட்ப வழிமுறைகள் குறித்து நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

மாவட்டம் முழுவதும் 5 மையங்களில் பயிற்சி

மயிலாடுதுறை மாவட்டத்தில் இம்மாபெரும் பணியைச் தொய்வின்றிச் சிறப்பாகச் செய்து முடிக்கும் வகையில், மாவட்டம் முழுவதும் உள்ள தகுதியான பள்ளி மற்றும் கல்லூரி ஆசிரியர்கள் இப்பணியில் கணக்கெடுப்பாளர்களாகவும், மேற்பார்வையாளர்களாகவும் நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்களுக்கான முதற்கட்ட பயிற்சி வகுப்புகள் மாவட்டத்தின் ஐந்து முக்கிய மையங்களில் ஒரே நேரத்தில் தடையின்றி நடத்தப்பட்டன.

Continues below advertisement

பயிற்சி நடைபெற்ற முக்கிய மையங்கள்

1. மன்னம்பந்தல் ஏ.வி.சி. கல்லூரி (மயிலாடுதுறை வட்டம்)

2. அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளி, குத்தாலம்

3. அரசு மேல்நிலைப்பள்ளி, மணல்மேடு

4. அரசு மேல்நிலைப்பள்ளி, வைத்தீஸ்வரன்கோவில்

5. ராஜேஸ்வரி திருமண மண்டபம், சீர்காழி நகராட்சி

இந்த ஐந்து மையங்களிலும் நடைபெற்ற தீவிரப் பயிற்சி வகுப்பில், மாவட்டம் முழுவதிலுமிருந்து மொத்தம் 1,405 கணக்கெடுப்பாளர்களும் (Enumerators) மற்றும் 247 மேற்பார்வையாளர்களும் (Supervisors) கலந்துகொண்டு தங்களுக்குரிய பணி நெறிமுறைகளைக் கற்றறிந்தனர்.

சுய கணக்கெடுப்பு (Self Enumeration) முறை அறிமுகம்

இம்முறை மக்கள் தொகை கணக்கெடுப்பில் பொதுமக்கள் தங்களின் விபரங்களைச் சுயமாகவே இணையதளத்தில் பதிவு செய்யும் எளிய 'சுய கணக்கெடுப்பு' (Self Enumeration) முறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார். "பொதுமக்கள் தாங்களாகவே தங்களது வீடுகள் மற்றும் குடும்ப உறுப்பினர்கள் பற்றிய விபரங்களை https://se.census.gov.in என்ற அதிகாரப்பூர்வ இணைய முகவரியில் பதிவு செய்யலாம். இந்த வசதி 2026-ஆம் ஆண்டு ஜூலை 17-ஆம் தேதி முதல் ஜூலை 31-ஆம் தேதி வரை மட்டுமே பயன்பாட்டில் இருக்கும்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

சுய கணக்கெடுப்பு செய்வதற்கான முக்கிய வழிமுறைகள்;

* பொதுமக்கள் தங்களின் சொந்தக் கைபேசி எண்ணைப் பயன்படுத்தி இந்த இணையதளத்தில் லாக்-இன் செய்ய வேண்டும்.

*ஒரு குடும்பத்திற்கு ஒரு தொலைபேசி எண் வாயிலாக மட்டுமே விபரங்களைப் பதிவு செய்ய இயலும்.

* இணையதளத்தில் கேட்கப்படும் 34 முக்கியக் கேள்விகளுக்கு முழுமையான மற்றும் துல்லியமான விடையளிக்க வேண்டும்.

*அனைத்து கேள்விகளுக்கும் பதிலளித்து முடித்தவுடன், சம்பந்தப்பட்ட பொதுமக்களின் கைபேசி எண்ணிற்கு 12 இலக்க எண்கள் கொண்ட ரகசியக் குறியீடு குறுஞ்செய்தியாக (SMS) அனுப்பி வைக்கப்படும்.

* பின்னர், உங்கள் பகுதிக்கு அரசு தரப்பில் ஒதுக்கீடு செய்யப்பட்ட கணக்கீட்டாளர் நேரடியாக வீட்டிற்கு வரும்போது, இந்த 12 இலக்க எண்களை அவரிடம் காண்பித்தால் போதுமானது.

மொபைல் ஆப் (Mobile App) மூலம் கணக்கெடுப்புப் பயிற்சி

டிஜிட்டல் முறையிலான கணக்கெடுப்பை ஊக்குவிக்கும் வகையில், களப்பயிற்றுநர்கள் (Field Trainers) மூலம் சுமார் 1500 கணக்கீட்டாளர்கள் (ஆசிரியர்கள்) மற்றும் 300 மேற்பார்வையாளர்களுக்கு (ஆசிரியர்கள்) பிரத்யேக மொபைல் ஆப் (Census Mobile App) மூலம் பயிற்சி அளிக்கப்படவுள்ளது.

வருகிற 22.06.2026-க்கு பிறகு இந்த அலுவலர்கள் அனைவரும் தனித்தனி அணிகளாகப் பிரிக்கப்பட்டு, கைபேசி செயலி (Mobile App) வாயிலாக எவ்வாறு டிஜிட்டல் முறையில் தரவுகளைப் பிழையின்றிப் பதிவு செய்வது என்பது குறித்து அடுத்தகட்ட தீவிரப் பயிற்சி அளிக்கப்பட திட்டமிடப்பட்டுள்ளது.

ஆகஸ்ட் 1 முதல் களப்பணி தொடக்கம்: ஆட்சியர் வேண்டுகோள்

மயிலாடுதுறை மாவட்டத்தில் முதற்கட்ட வீட்டுப்பட்டியல் மற்றும் வீடுகள் கணக்கெடுப்புப் பணி (Houselisting and Housing Census) 2026-ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 1-ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 30-ஆம் தேதி வரை ஒரு மாத காலத்திற்கு நடைபெற உள்ளது. இதற்காக நியமிக்கப்பட்டுள்ள கணக்கெடுப்பாளர்கள் தங்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள பகுதிகளில் (Enumeration Block) நேரடியாக இல்லங்களுக்குச் சென்று விவரங்களைச் சேகரிக்க உள்ளனர்.

தேசத்தின் வளர்ச்சித் திட்டங்களையும், எதிர்காலக் கொள்கைகளையும் வகுப்பதற்கு இந்த மக்கள் தொகை கணக்கெடுப்பு மிகவும் இன்றியமையாதது என்பதால், பொதுமக்கள் தங்கள் பகுதிகளுக்கு வரும் கணக்கெடுப்பு அலுவலர்களுக்கு எவ்விதத் தயக்கமும் இன்றி, துல்லியமான விபரங்களை வழங்கி முழு ஒத்துழைப்பு நல்கிட வேண்டும் என மாவட்ட ஆட்சியர் ஹெச்.எஸ்.ஸ்ரீகாந்த், பொதுமக்களுக்கு அன்புடன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.