மயிலாடுதுறை: மயிலாடுதுறை அருகே காவல் சோதனைச் சாவடியில் லாரியை அனுமதிப்பதற்காக ‘ஜி-பே’ (G-Pay) மூலம் ரூ.50 லஞ்சம் பெற்றதாக எழுந்த குற்றச்சாட்டைத் தொடர்ந்து, பணியில் இருந்த தலைமை காவலர் ஆயுதப்படைக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளார். இச்சம்பவம் காவல்துறை வட்டாரத்திலும், பொதுமக்கள் மத்தியிலும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
எல்லைகளில் தீவிர கண்காணிப்பு
மயிலாடுதுறை மாவட்டத்தில் குற்றச் சம்பவங்களைத் தடுத்தல், சட்டவிரோதப் பொருட்கள் மற்றும் மதுபானக் கடத்தலைக் கட்டுப்படுத்துதல், அனுமதியின்றி மணல் அள்ளுவதைத் தடுத்தல், சந்தேகத்திற்கு இடமான நபர்களின் நடமாட்டத்தைக் கண்காணித்தல் மற்றும் மாவட்ட எல்லைப் பாதுகாப்பை உறுதி செய்தல் ஆகிய பணிகளுக்காக முக்கியப் பகுதிகளில் காவல் சோதனைச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன.
குறிப்பாக, ஆணைக்காரன்சத்திரம், நண்டலாறு, ஆயப்பாடி, நல்லாடை, கழனிவாசல், திருவாலங்காடு உள்ளிட்ட எல்லைப் பகுதிகளில் அமைக்கப்பட்டுள்ள இந்தச் சோதனைச் சாவடிகளில், சுழற்சி முறையில் 24 மணி நேரமும் காவல்துறையினர் தீவிரப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
ஜி-பே மூலம் பெற்ற லஞ்சம்
இந்நிலையில், காவல் சோதனைச் சாவடிகளில் பணிபுரியும் சில காவலர்கள் வாகன ஓட்டிகளிடம் லஞ்சம் பெறுவதாகத் தொடர் குற்றச்சாட்டுகள் எழுந்து வந்தன. இதன் உச்சகட்டமாக, பெரம்பூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட திருவாரூர் சாலையில் அமைந்துள்ள கழனிவாசல் காவல் சோதனைச் சாவடியில் ஆன்லைன் மூலமாகவே லஞ்சம் பெறப்பட்ட சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
அகரஆதனூர் கிராமத்தைச் சேர்ந்த மதன்மோகன் என்பவர் தனது லாரியில் கழனிவாசல் சோதனைச் சாவடியைக் கடந்து சென்றபோது, அங்கிருந்த காவல்துறையினர் வாகனம் செல்ல அனுமதிப்பதற்காக ரூ.50 லஞ்சமாக கேட்டுள்ளனர். பணம் ரொக்கமாக இல்லாத நிலையில், காவல்துறையினர் வழங்கிய பிரத்யேக எண்ணிற்குத் தனது ‘ஜி-பே’ (G-Pay) செயலி மூலம் மதன்மோகன் ரூ.50 அனுப்பியுள்ளார்.
சமூக வலைதளங்களில் வைரலான ஆடியோ
இது குறித்து மதன்மோகன் பெரம்பூர் காவல் நிலையத்திற்கு நேரில் சென்று புகார் தகவல் தெரிவித்துள்ளார். இதனிடையே, இன்று காலை தான் ஆன்லைனில் அனுப்பிய ரூ.50 மீண்டும் தனது கணக்கிற்கே திருப்பி அனுப்பப்பட்டதாகத் தெரிவித்த மதன்மோகன், பணத்தைத் திருப்பி அனுப்பிய நபர் தன்னிடம் பேசிய தொலைபேசி உரையாடல் ஆடியோவையும் சமூக வலைதளங்களில் வெளியிட்டார். டிஜிட்டல் பரிவர்த்தனை ஆதாரத்துடன் லஞ்சப் புகார் தொடர்பான இந்த ஆடியோ பதிவுகள் சமூக வலைதளங்களில் மிக வேகமாகப் பரவி, பெரும் பரபரப்பை ஏற்படுத்தின.
காவல்துறை அதிகாரி அதிரடி நடவடிக்கை
இச்சம்பவம் மயிலாடுதுறை மாவட்ட காவல்துறை எஸ்பி சினேகா பிரியா கவனத்திற்குச் சென்றதை அடுத்து, அவர் உடனடியாக விசாரணைக்கு உத்தரவிட்டார். முதற்கட்ட விசாரணையின் அடிப்படையில், கழனிவாசல் காவல் சோதனைச் சாவடியில் பணியில் இருந்த தலைமை காவலர் தெய்வசிகாமணியை உடனடியாக மாவட்ட ஆயுதப்படைக்கு (Armed Reserve) மாற்றம் செய்து எஸ்பி அதிரடி உத்தரவிட்டார். மேலும், இந்தச் சம்பவத்தின்போது அவருடன் பணியில் இருந்த ஊர்க்காவல் படை (Home Guard) காவலர் கலியபெருமாள் மற்றும் தலைமை காவலர் தெய்வசிகாமணி ஆகிய இருவரிடமும் மாவட்ட காவல் உயராதிகாரிகள் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
காவல்துறையில் வெளிப்படைத்தன்மையைக் கொண்டுவர டிஜிட்டல் முறைகள் ஊக்குவிக்கப்படும் சூழலில், லஞ்சத்தையும் டிஜிட்டல் வழியிலேயே பெற்ற சம்பவம் மயிலாடுதுறை மாவட்டத்தில் பெரும் பரபரப்பையும் விவாதத்தையும் உருவாக்கியுள்ளது. குற்றச் செயல்களில் ஈடுபடும் காவலர்கள் மீது தயவுதாட்சண்யமின்றி கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனத் துறை சார்ந்த அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.
