மயிலாடுதுறை: காவல்துறை உயர்மட்ட அதிகாரிகள் மீது பகிரங்கமாகக் குற்றச்சாட்டுகளை முன்வைத்து, பெரும் பரபரப்பை ஏற்படுத்திய மயிலாடுதுறை மாவட்ட மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு (PEW) துணைக்காவல் கண்காணிப்பாளர் (DSP) சுந்தரேசன் பணியிடை நீக்கத்தை ரத்து செய்து தமிழக அரசு அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.

Continues below advertisement

செய்தி ஊடகப் பேட்டியும் பணிநீக்கமும்

கடந்த 2025-ஆம் ஆண்டு ஜூலை மாதம் தமிழகக் காவல்துறை வட்டாரத்தில் ஒரு பெரும் புயல் வீசியது. மயிலாடுதுறை மாவட்டத்தில் பணியாற்றி வந்த டி.எஸ்.பி சுந்தரேசன், ஜூலை 17-ஆம் தேதியன்று அரசு ஊழியர்களுக்கான நடத்தை விதிகளை மீறி, செய்தி ஊடகங்களுக்குப் பேட்டியளித்தார். அந்தப் பேட்டியில், காவல்துறைத் தலைமையகம் மற்றும் உயர்மட்ட அதிகாரிகள் மீது பல்வேறு அடுக்கடுக்கான புகார்களை அவர் முன்வைத்தார்.

அரசுப் பணியில் இருக்கும் ஒரு அதிகாரி, உயர் அதிகாரிகளுக்கு எதிராகப் பொதுவெளியில் பேசியது "ஒழுங்கீனமான நடத்தை" எனக் கருதப்பட்டது. இதனைத் தொடர்ந்து, 19.07.2025 அன்று உள்துறை (காவல்) துறையின் G.O.(2D) No.219 அரசாணையின்படி அவர் உடனடியாகப் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.

Continues below advertisement

நீதிமன்றப் போராட்டம் மற்றும் விசாரணை

பணியிடை நீக்கத்தை எதிர்த்து சுந்தரேசன் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், செப்டம்பர் 23, 2025 அன்று ஒரு முக்கியத் தீர்ப்பை வழங்கியது. அதன்படி, அரசு ஊழியர்களின் பணிநீக்க காலத்தை அவ்வப்போது ஆய்வு செய்ய வேண்டும் என்கிற அரசின் வழிகாட்டுதல்களை (G.O. Ms. No.81) முறையாகப் பின்பற்றும்படி காவல்துறை தலைமை இயக்குநருக்கு (DGP) உத்தரவிட்டது.

இதற்கிடையில், சுந்தரேசன் மீது தமிழ்நாடு குடிமைப்பணி (ஒழுங்கு மற்றும் மேல்முறையீடு) விதிகளின் கீழ் 17(b) பிரிவின் கீழ் கடுமையான ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதற்கான குற்றச்சாட்டு குறிப்பாணை 14.11.2025 அன்று வழங்கப்பட்டு, விசாரணை நடத்த விசாரணை அதிகாரியும் நியமிக்கப்பட்டார்.

அரசாணை 48: பணிநீக்கம் ரத்து

நீதிமன்றத்தின் உத்தரவு மற்றும் டி.ஜி.பி-யின் பரிந்துரையைத் தொடர்ந்து, தமிழக அரசு பிப்ரவரி 2, 2026 அன்று புதிய அரசாணையை (G.O. 48) வெளியிட்டது. கூடுதல் தலைமைச் செயலாளர் தீரஜ் குமார் பெயரில் வெளியான இந்த உத்தரவில், சுந்தரேசன் மீதான பணிநீக்கம் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அரசின் நிபந்தனைகள்

பணிநீக்கம் ரத்து செய்யப்பட்டாலும், அவருக்குப் பின்வரும் நிபந்தனைகளுடன் கூடிய பணியிடம் வழங்கப்பட வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளது.

*அவரை "முக்கியத்துவம் இல்லாத" (Non-sensitive) ஒரு பணியிடத்தில் அமர்த்த வேண்டும்.

*அவர் ஏற்கனவே பணியாற்றிய மண்டலத்திற்கு (Zone) வெளியே பணி வழங்கப்பட வேண்டும்.

நிர்வாக நடவடிக்கைகள் தீவிரம்

இந்த அரசாணையைத் தொடர்ந்து, மயிலாடுதுறை மாவட்டக் காவல் அலுவலகத்திற்கு பிப்ரவரி 3, 2026 அன்று ஒரு குறிப்பாணையை வெளியிட்டுள்ளது. அதில் சுந்தரேசனிடம் இந்த உத்தரவை நேரில் வழங்கி, அவரிடம் உரிய ஒப்புதல் பெற்று, அதனை உடனடியாகத் தலைமை அலுவலகத்திற்கு அனுப்பும்படி மாவட்டக் காவல் கண்காணிப்பாளருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. நீண்ட போராட்டத்திற்குப் பிறகு ஒரு உயர் காவல் அதிகாரி மீண்டும் பணியில் சேரவிருப்பது காவல்துறை வட்டாரத்தில் விவாதப் பொருளாகியுள்ளது.

டிஎஸ்பி சுந்தரேசன் மயிலாடுதுறை மாவட்டத்தில் மதுவிலக்கு அமலாக்க பிரிவு டிஎஸ்பியாக பதவி ஏற்ற நாள் முதல் போதை பொருள் தடுப்பு தொடர்பாக பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு மாவட்டத்தில் போதை பொருட்கள் புழக்கத்தை வெகுவாக குறைத்து பொதுமக்களின் நன்மதிப்பை பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.