மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் தாலுக்கா மாந்தை கிராமத்தில், இன்று காலை பெங்களூருவில் இருந்து வேளாங்கண்ணி நோக்கிச் சென்ற தனியார் சொகுசு பேருந்து கட்டுப்பாட்டை இழந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த கோர விபத்தில் பேருந்தில் பயணம் செய்த 25-க்கும் மேற்பட்ட பயணிகள் காயமடைந்தனர்.
விபத்து நடந்தது எப்படி?
கர்நாடக மாநிலம் பெங்களூருவில் இருந்து நாகப்பட்டினம் மாவட்டம் வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய மாதா பேராலயத்திற்கு சுற்றுலாப் பயணிகளை ஏற்றிக்கொண்டு தனியார் சொகுசு பேருந்து ஒன்று வந்து கொண்டிருந்தது. அதிகாலை மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் தாலுகாவிற்கு உட்பட்ட மாந்தை நாட்டாறு சட்ரஸ் பகுதி அருகே பேருந்து வந்து கொண்டிருந்தது.
அப்போது, எதிர்பாராதவிதமாக ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து, சாலையோரம் இருந்த மின்கம்பத்தின் மீது பலமாக மோதியது. மோதிய வேகத்தில் அங்கிருந்த இருசக்கர வாகனங்கள் மீதும் மோதிவிட்டு, பேருந்து தலைகீழாகக் கவிழ்ந்தது. பேருந்து கவிழ்ந்தவுடன் பயணிகளின் அலறல் சத்தம் அப்பகுதி முழுவதும் எதிரொலித்தது.
மீட்புப் பணிகள் மற்றும் சிகிச்சை
விபத்து குறித்து தகவல் அறிந்ததும் அக்கம் பக்கத்தில் இருந்த கிராம மக்கள் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, பேருந்தின் கண்ணாடி மற்றும் கதவுகளை உடைத்து உள்ளே சிக்கியிருந்தவர்களை மீட்டனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த பாலையூர் போலீசார் மற்றும் தீயணைப்புத் துறையினர், ஆம்புலன்ஸ் மூலம் காயமடைந்தவர்களை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மயிலாடுதுறை அரசு மருத்துவமனை
விபத்தில் காயமடைந்தவர்களில் 12 பேர் மயிலாடுதுறை அரசு தலைமை மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.
கும்பகோணம் மருத்துவமனை
மேலும் சில பயணிகள் கும்பகோணம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
தீவிர சிகிச்சை: இந்த விபத்தில் 5 பேர் பலத்த காயமடைந்துள்ளனர். அவர்களுக்கு மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் (ICU) சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதில் இருவரின் நிலைமை மிகவும் கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
தப்பியோடிய நடத்துனர்
விபத்து நடந்தவுடன் பேருந்தின் நடத்துனர் (Conductor) அங்கிருந்து தப்பியோடிவிட்டார். ஓட்டுநருக்கு ஏற்பட்ட தூக்க கலக்கம் காரணமாக இந்த விபத்து நடந்ததா அல்லது பேருந்தின் இயந்திரக் கோளாறு காரணமா என்பது குறித்து பாலையூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தலைமறைவாக உள்ள நடத்துனரை போலீசார் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.
மின்கம்பம் மீது மோதியதால் பெரும் விபத்து தவிர்ப்பு
பேருந்து நிலைதடுமாறி ஆற்றின் கரையோரம் இருந்த மின்கம்பத்தில் மோதியதால், பேருந்து ஆற்றுக்குள் விழாமல் தப்பியது. மின்கம்பம் இல்லையெனில் பேருந்து ஆற்றுக்குள் விழுந்து உயிரிழப்புகள் அதிகமாக ஏற்பட்டிருக்கக்கூடும் என அப்பகுதி மக்கள் தெரிவித்தனர். விபத்து நடந்தவுடன் மின்சாரம் துண்டிக்கப்பட்டதால் பெரும் மின்கசிவு விபத்து தவிர்க்கப்பட்டது.
பாதிக்கப்பட்ட பயணிகள் விவரம்
காயமடைந்தவர்களில் பெரும்பாலானோர் பெங்களூருவைச் சேர்ந்த சுற்றுலாப் பயணிகள் என்பது தெரியவந்துள்ளது. விபத்து குறித்து தகவல் அறிந்த அவர்களது உறவினர்கள் பதற்றத்துடன் மயிலாடுதுறைக்கு விரைந்து வருகின்றனர். ஒரே நேரத்தில் 25-க்கும் மேற்பட்டோர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதால், மருத்துவமனை வளாகத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
பேருந்து திடீரென குலுங்கிச் சாய்ந்தது. கண் இமைக்கும் நேரத்தில் அனைத்தும் நடந்து முடிந்துவிட்டது. கிராம மக்கள் தான் ஓடி வந்து எங்களைக் காப்பாற்றினார்கள்," என காயமடைந்த பயணி ஒருவர் கண்ணீருடன் தெரிவித்தார்.
மாந்தை கிராமத்தில் நடந்த இந்த விபத்து அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விபத்து காரணமாக மயிலாடுதுறை - கும்பகோணம் சாலையில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.