மயிலாடுதுறை: தமிழகத்தின் எதிர்காலத் தூண்களாக விளங்கும் இளைஞர்களின் வேலைவாய்ப்புத் திறனை மேம்படுத்தவும், அவர்களின் பொருளாதார நிலையை உயர்த்தவும் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினால் தொடங்கி வைக்கப்பட்ட 'நான் முதல்வன் - வெற்றி நிச்சயம்' திட்டம் தற்போது மாநிலம் முழுவதும் வரவேற்பைப் பெற்று வருகிறது. இத்திட்டத்தின் கீழ், மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள இளைஞர்களுக்கு வழங்கப்படவுள்ள பிரத்யேக வாய்ப்புகள் குறித்து மாவட்ட ஆட்சியர் ஹெச்.எஸ்.ஸ்ரீகாந்த் விரிவான அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

Continues below advertisement

யாரெல்லாம் பயன்பெறலாம்?

படித்து முடித்துவிட்டு வேலை தேடிக்கொண்டிருக்கும் இளைஞர்கள் மட்டுமின்றி, வறுமை அல்லது குடும்பச் சூழ்நிலை காரணமாகப் படிப்பைத் தொடர முடியாமல் பாதியிலேயே நிறுத்திய (Dropouts) இளைஞர்களுக்கும் இத்திட்டம் ஒரு வரப்பிரசாதமாகும்.

*வயது வரம்பு: 18 முதல் 35 வயதிற்குட்பட்டவர்கள்.

Continues below advertisement

*கல்வித் தகுதி: 8-ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் முதல் அதற்கு மேற்பட்ட கல்வித் தகுதி கொண்ட ஆண், பெண் இருபாலரும் விண்ணப்பிக்கலாம்.

பயிற்சிப் பட்டியல்: தொழில்நுட்பம் முதல் கால்நடை பராமரிப்பு வரை

இத்திட்டத்தின் சிறப்பம்சமே, சந்தையில் அதிகத் தேவையுள்ள பல்வேறு துறைகளில் குறுகிய காலப் பயிற்சிகளை வழங்குவதுதான். இதில் சுமார் 25-க்கும் மேற்பட்ட தொழில் பிரிவுகளில் பயிற்சிகள் வழங்கப்படுகின்றன:

*தொழில்நுட்பம் & சேவை: ஐடி தொழில்நுட்ப உதவியாளர், ஏசி மற்றும் எலக்ட்ரிக்கல் மோட்டார் ரீவைண்டிங், ஹவுஸ் ஒயரிங், வெல்டிங், பிளம்பிங், தையல் இயந்திர பழுது நீக்கம்.

*கட்டுமானத் துறை: மேஷன்ரி, சிமென்ட் ஹாலோ பிளாக் தயாரித்தல், டைல்ஸ் மற்றும் கிரானைட் பதித்தல், பார் பெண்டிங்.

*சுயதொழில் & கலை: ஆரி எம்பிராய்டரி, பியூட்டிசியன் (Beautician), செயற்கை ஆபரணத் தயாரிப்பு, தையல் கலை, கம்பள நெசவாளர்.

*போக்குவரத்து: எல்.எம்.வி (LMV) மற்றும் எச்.எம்.வி (HMV) ஓட்டுநர் பயிற்சி, விமான முன்பதிவு முகவர்.

*வேளாண் & கால்நடை: பால்பண்ணை, செம்மறி ஆடு, கோழி வளர்ப்பு மற்றும் நவீன தீவன உற்பத்தி உத்திகள் குறித்த சான்றிதழ் படிப்புகள்.

* மருத்துவம்: பொதுப் பணி மருத்துவ உதவியாளர்.

ஊக்கத்தொகையுடன் கூடிய இலவசப் பயிற்சி

தனியார் திறன் பயிற்சி நிறுவனங்கள், அரசுத் துறைகள் மற்றும் முன்னணித் தொழிற்சாலைகள் வாயிலாக இந்தப் பயிற்சிகள் வழங்கப்படுகின்றன. 10 நாட்கள் முதல் 90 நாட்களுக்குள் முடிக்கப்படக்கூடிய இந்த குறுகிய காலப் பயிற்சிகளுக்குக் கட்டணம் ஏதுமில்லை.

மாறாக, பயிற்சியில் சேரும் இளைஞர்களுக்கு அவர்களின் வாழ்வாதாரத்தை உறுதிப்படுத்தும் வகையில் மாதம் ரூ. 6,000 முதல் ரூ. 12,000 வரை ஊக்கத்தொகை (Stipend) வழங்கப்படுவது குறிப்பிடத்தக்கது. இது ஏழை எளிய மாணவர்களுக்குப் பயிற்சியின் போது ஏற்படும் நிதி நெருக்கடியைப் போக்க உதவும்.

நிறுவனங்களுக்கும் அழைப்பு

இளைஞர்களுக்குப் பயிற்சி அளிக்க ஆர்வமுள்ள தனியார் நிறுவனங்கள் இத்திட்டத்தில் தங்களை இணைத்துக்கொள்ளலாம். அவ்வாறு பயிற்சி அளிக்கும் நிறுவனங்களுக்கு ஏற்படும் பயிற்சிச் செலவுகளை அரசே ஏற்கும். இதன் மூலம் நிறுவனங்களுக்குத் தேவையான திறன்மிக்க பணியாளர்களை அவர்களே உருவாக்கி வேலைக்கு அமர்த்திக் கொள்ளும் வாய்ப்பும் கிடைக்கிறது.

விண்ணப்பிப்பது எப்படி?

விருப்பமுள்ள இளைஞர்கள் மற்றும் நிறுவனங்கள் கீழ்க்கண்ட வழிகளில் பதிவு செய்துகொள்ளலாம்:

*இணையதளம்:

https://candidate.tnskill.tn.gov.in/skillwallet/

* செயலி: கூகுள் பிளே ஸ்டோரில் உள்ள 'வெற்றி நிச்சயம்' செயலியைப் பதிவிறக்கம் செய்து விருப்பமான பயிற்சியைத் தேர்ந்தெடுக்கலாம்.

* நேரடித் தொடர்பு: மயிலாடுதுறை மாவட்ட திறன் அலுவலர்.

 * தொலைபேசி: 04364-299790

*மின்னஞ்சல்: dsomayiladuthurai@gmail.com

* அலுவலக முகவரி: 2-வது குறுக்கு தெரு, பாலாஜி நகர், பூம்புகார் சாலை, மயிலாடுதுறை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம்.

"இளைஞர்கள் இந்த அரிய வாய்ப்பைப் பயன்படுத்தி, தங்களின் திறமைகளை வளர்த்துக்கொண்டு வளமான எதிர்காலத்தை அமைத்துக்கொள்ள வேண்டும்" என மாவட்ட ஆட்சியர் தனது செய்திக் குறிப்பில் கேட்டுக்கொண்டுள்ளார்.